சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொங்கல் உள்ளிட்ட பல்வேறு விழாக் காலங்களில் கிராம மக்களின் சார்பாக அல்லது உள்ளூரில் உள்ள தன்னார்வ அமைப்புகளின் சார்பாக பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.
சிறுவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், சாக்கை இரண்டு கால்களிலும் மாட்டிக் கொண்டு ஓடும் சாக்குப்போட்டி, சைக்கிள் போட்டி, மாறுவேட போட்டி போன்றவையும் இளைஞர்களுக்கு ஓட்டப்பந்தயம், சைக்கிளை மெதுவாக ஓட்டும் ஸ்லோ சைக்கிள் ரேஸ் போட்டி போன்றவையும் சிறுமிகளுக்கு கோல போட்டி, ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளும் இளைஞர்களுக்கும் நடுத்தர வயதினருக்கும் வழுக்கு மரம் ஏறும் போட்டி, கபடி போட்டி உள்ளிட்டவைகளும் இந்த திருவிழாக்களில் நடத்தப்பட்டன. சில கிராமங்களில் இத்தகைய திறன் போட்டியிலே நடத்துவதோடு பேச்சுப்போட்டி பாட்டு போட்டி கட்டுரை போட்டி என்ற வகையான திறன் மேம்பாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.
கிராமங்களில் நடைபெற்ற இத்தகைய திருவிழாக்களில் புலி வேஷம், சிலம்பாட்டம், கோமாளி போன்ற வகையான ரசிக்கும் அம்சங்களும் இடம்பெற்றன. பண்டிகை காலங்களில் கிராமங்களில் நடைபெற்ற இத்தகைய நிகழ்வுகளைப் போலவே நகரங்களில் தெருக்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கிராமங்களிலும் நகரங்களிலும் தெரு நாடகம், தெருக்கூத்து, மேடை நாடகங்கள் இடம்பெற்றன. இவ்வாறு கிராமங்களில் நகரங்களிலும் பண்டிகை காலங்களிலும் திருவிழாக்களிலும் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மகிழ்ச்சியுற்றதோடு மக்களுடைய ஒற்றுமையும் பரஸ்ப நட்புணர்வும் வலுப்படுத்தப்பட்டது.
தற்போது பண்டிகை விடுமுறை நாட்கள் என்றாலும் சரி, வார விடுமுறை நாட்கள் என்றால் சரி என்றாலும் சரி, பெரும்பாலான மக்கள் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து நேரத்தை செலவிடுகின்றனர். பெரும்பாலான சிறுவர்களும் சிறுமியர்களும் இளைஞர்களும் மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற உபகரணங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் மூழ்கி விடுகின்றனர். இதன் காரணமாக பண்டிகை நாட்கள் என்பது மக்களிடையே கலாச்சாரத்தையும் ஒற்றுமையையும் நட்புணர்வையும் வளர்க்கும் தருணங்களாக இருந்தவை மறக்கப்பட்டு விட்டது.
சில ஆண்டுகள் முன்பு வரை, அறிவை மேம்படுத்துவதற்கும் பொழுதுபோக்குக்கும் கருவியாக புத்தக வாசிப்பு இருந்து வந்தது. தற்போது புத்தக வாசிப்பு என்பது பெருமளவு குறைந்தது விட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தகத்தை படிக்கச் சொன்னால் இணையதளத்தில் படிக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். இணையதளம் மூலம் படிப்பது தவறல்ல. ஆனால், இணையதளத்தில் பல்வேறு வழங்கப்படும் தகவல்களின் உண்மை தன்மை கேள்விக்குறியாக மாறி வருகிறது. இணையதளம் மூலமாக படிப்பதால் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இணையதள படிப்பு தகவல்களை திரட்டி வழங்கும் புத்தகம் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இணையதளம் மூலம் படிப்பதால் எழுத்து திறமை பலருக்கு மங்கி விடுகிறது.
கிராமிய திருவிழாக்களையும் நகரங்களில் தெரு விழாக்களையும் பட்டி தொட்டி எல்லாம் புத்தகத் திருவிழாக்களையும் கட்டாயமாக நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் மக்களிடையே நட்புணர்வும் ஒற்றுமையும் மறைவதோடு மக்களின் உடல் நிலையும் கேள்விக்குறியாகிவிடும். இத்தகைய விழாக்களை நடத்துவதை மாநில அரசின் மொழி வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி, சமூக வளர்ச்சி ஆகியவற்றிற்கு பொறுப்பு வைக்கும் துறை தகுந்த திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.