பொதுவாக “அமெரிக்கா” என அழைக்கப்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் பிரிட்டனின் ஆட்சியில் இருந்து கடந்த ஜூலை 1776 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. சுதந்திரத்துக்கு பின்னர் அதிபர் ஆட்சி முறையிலான அமைப்பை அமெரிக்க அரசியலமைப்பு ஏற்படுத்தியது. அமெரிக்காவின் அதிபர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
லோக்சபா (மக்களவை), ராஜ்யசபா (மாநிலங்களவை) என இரண்டு அவைகளை கொண்ட பாராளுமன்றம் இந்தியாவில் இருப்பதைப் போல அமெரிக்காவிலும் “காங்கிரஸ்” என்ற பெயரில் உள்ள அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையும் (மக்களவை) செனட் சபையும் (மாநிலங்களவை) உள்ளது. ஆனால், அமெரிக்க அதிபர் இந்த இரண்டு அவைகளிலும் உறுப்பினராக இருப்பதில்லை.
அமெரிக்க அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் முதலாவது அதிபருக்கான தேர்தல் 1788 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்றது. முதலாவது அதிபர் தேர்தல் முதல் கூட்டாட்சி கட்சி மற்றும் ஜனநாயக – குடியரசு கட்சி ஆகியன மட்டும் அமெரிக்காவில் பிரதான கட்சிகளாக இருந்து வந்தன. கடந்த 1824 ஆம் ஆண்டில் ஜனநாயக – குடியரசு கட்சி இரண்டாக பிளவு பட்டு ஜனநாயக கட்சி (Democrtic Party), குடியரசு கட்சி (Republican Party) என்ற இரண்டு கட்சிகள் தோன்றியது. பின்னர், இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி அதிபர் பதவியை கைப்பற்றி உள்ளன.
பசுமை கட்சி, சுதந்திரவாதிகள் கட்சி, அரசியலமைப்பு கட்சி மற்றும் இயற்கை சட்ட கட்சி என்ற கட்சிகள் அமெரிக்காவில் இருந்தாலும் கூட அவை அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தல்களில் கூட அரிதாக ஓரிரு இடங்களையே கைப்பற்றுகின்றன. அமெரிக்க பாராளுமன்ற தேர்தல்களில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறும் கட்சி வாக்குப்பதிவில் குறைந்தது 50 சதவீத வாக்கை பெற வேண்டும் என்ற விதி இருப்பதால் பெரும்பாலும் குடியரசு கட்சியும் ஜனநாயக கட்சியும் தொடர்ந்து வெற்றி பெறுகின்றன. இதன் காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியும் மட்டுமே தொடர்ந்து போட்டியாளர்களாக இருந்து வருவதால் அமெரிக்கா இரட்டை கட்சி முறையை கொண்ட நாடு என்று கருதப்படுகிறது.
அமெரிக்க சட்டப்படி ஒவ்வொரு லீப் வருடத்திலும் (அதாவது, எந்த வருடத்தை நான்கால் வகுக்க இயலுமோ அந்த வருடத்தில்) நவம்பர் மாதம் முதலாவது செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெறுபவர் அடுத்து வரும் ஜனவரி மாதம் இருபதாம் தேதி நாட்டின் அதிபராக பதவி ஏற்கிறார். இருபதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்றால் பதவி ஏற்பு 21 ஆம் தேதி நடைபெறும்.
நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கு இரண்டு கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்ய அதிபர் தேர்தலுக்கு சுமார் ஓராண்டு முன்பாகவே பிரச்சாரங்கள் நடைபெற தொடங்கி விடுகின்றன. அந்த வகையில் தற்போது ஜனநாயகக் கட்சியிலும் குடியரசு கட்சியிலும் யார் வேட்பாளர்? என்பதற்கான பிரச்சாரம்தான் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்சிகளும் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் இரண்டு கட்சிகளும் அவர்களது கட்சிகளில் தேர்வு பற்ற வேட்பாளர்களை தேர்தல் களத்தில் போட்டியிட செய்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட சொந்தக் கட்சியில் வேட்பாளராக விரும்பும் கட்சி உறுப்பினர்களிடம் போட்டியிட்டுதான் ஜனநாயக கட்சியிலும் குடியரசு கட்சிகளும் அமெரிக்க வேட்பாளராக இயலும்.
தேர்தலில் வெற்றி பெறுபவருக்கு அமெரிக்க அதிபராக அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தின் (இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தை போல) தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகள் ஆகும். ஒருவர் இரண்டு முறை மட்டுமே அமெரிக்காவின் அதிபராக இருக்க முடியும். அமெரிக்க அதிபர் தமது விருப்பத்திற்கு ஏற்ப அமைச்சர்களை நியமனம் செய்கிறார். அமைச்சர்கள் அமெரிக்க பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது துணை அதிபருக்கான தேர்தலும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறையை போலவே நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் விடுமுறையில் செல்லும் போதும் திடீரென இறப்பு ஏற்படும் போதும் நான்காண்டு பதவிக்காலத்தில் மீதமுள்ள காலத்திற்கு அமெரிக்க துணை அதிபர் அமெரிக்காவின் அதிபராக செயல்படுகிறார். இதனால், அமெரிக்காவில் நான்காண்டுகளுக்கு ஒருமுறைதான் அதிபருக்கான தேர்தல் நடைபெறும்.
உலக நிலப்பரப்பில் நில அதிக பரப்பை கொண்ட முதலாவது நாடாக ரஷ்யாவும் இரண்டாவது நாடாக கனடாவும் மூன்றாவது நாடாக அமெரிக்காவும் (நான்காவது நாடாக சீனாவும் ஐந்தாவது நாடாக பிரேசிலும் ஆறாவது நாடாக ஆஸ்திரேலியாவும் ஏழாவது நாடாக இந்தியாவும்) உள்ளது. அமெரிக்காவின் நிலப்பரப்பு ரஷ்ய நிலப்பரப்பின் சுமார் பாதி அளவே உள்ளதாகும். 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்க மக்கள் தொகை 33.41 கோடி ஆகும். இதில் சுமார் 10 கோடி மக்கள் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் ஆவார்கள் இதனால்தான் அமெரிக்கா குடியேறிகளின் நாடு என்று அழைக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று குடியுரிமை பெற்று வாழ்பவர்களில் முதலிடம் பிடித்திருப்பது மெக்சிகோ நாட்டவர்கள் ஆவார்கள். இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்திய பரம்பரையினர் ஆவார்கள். அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களுக்கும் தனித்தனி அரசியலமைப்பு உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கொடி உள்ளது.
அமெரிக்காவைப் பற்றிய இன்னும் பல தகவல்களை அடுத்து வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.