இன்று அதிகாலையிலேயே வாக்காளர் சாமி பூங்கா இதழ் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை வரவேற்ற நானும், “என்ன சாமி காலையிலேயே வந்துவிட்டீர்கள்” என கேட்டேன். “சொல்றேன் கேட்டுக்க. இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாமல் உயர் அதிகாரிகளாக நேரடி நியமனத்துக்கு விளம்பரம் வந்துள்ளது தெரியுமா? என்றார். “சாமி விரிவா சொல்லுங்களேன்” என கேட்ட போது அவர் தொடர்ந்தார்.
“யுபிஎஸ்சி” எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் “ஐஏஎஸ்” பயிற்சியை முடித்து மத்திய, மாநில அரசுகளில் நியமிக்கப்படுகிறார்கள். ஐஏஎஸ் பயிற்சியை முடித்தவுடன் இவர்களுக்கு அரசில் துணைச் செயலாளர் அந்தஸ்தில்தான் பதவி வழங்கப்படுகிறது. ஓரிரு ஆண்டுகளுக்கு உள்ளாக பதவி உயர்வு வழங்கப்பட்டு இணைச் செயலாளர்கள் பதவிக்கு இவர்கள் அமர்த்த படுகிறார்கள். மாநில அரசில் இணைச் செயலாளர் நிலையில் உள்ளவர்கள்தான் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இந்த அதிகாரிகளுக்கு அரசின் கூடுதல் செயலாளர், செயலாளர் முதன்மைச் செயலாளர் தலைமைச் செயலாளர் என்ற நிலை வரை பதவி உயர்வு பெற வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் மத்திய அரசின் துறைகளில் 10 இணைச்செயலாளர்கள் மற்றும் 35 இயக்குனர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் பணியிடங்களுக்கு நேரடியாக தேர்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து வகை தேர்வுகளிலும் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ள நேரடி தேர்வில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்”.
“சாமி! இது என்ன புதுசா இருக்கு. இதுக்கு முன்னாடி இப்படி நடந்து இருக்கா? மத்திய அரசு தரப்பில் என்ன சொல்லப்படுகிறது? என வாக்காளர் சாமியிடம் கேட்டேன்.
கடந்த சில ஆண்டுகளில் இரண்டு முறை இவ்வாறு நேரடி நியமனங்கள் நடைபெற்றுள்ளன. அப்போது எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாததால் பெரிய எதிர்ப்புகள் எழவில்லை. தற்போது மத்திய அமைச்சராக உள்ள கூட்டணி கட்சித் தலைவர்களில் ஒருவரான சிராக் பஸ்வான் கூட “இதனை முற்றிலும் தவறு. அரசிடம் கேட்பேன்” என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், “நிபுணத்துவம் வாய்ந்தவர்களை நேரடியாக நியமித்துக் கொள்ளலாம்” என்று காங்கிரஸ் கட்சியின் வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்த குழுவின் பரிந்துரையில் உள்ளது. இதனை தற்போது அரசியலுக்காக காங்கிரஸ் எதிர்க்கிறது என ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இட ஒதுக்கீட்டை பறிப்பதற்கான சக்கர வியூகம் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
“சாமி! இது ஏதேச்சையாக நடந்த ஒன்றாக இருக்கும். திட்டமிட்டு செய்யப்பட்டதாக இருக்காது” என்றேன் நான். “எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் உயர் பதவிகளில் நேரடி நியமனம் ஐஏஎஸ் அமைப்பு முறையை குலைத்து விடும். இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் உயர் அமைப்புகளில் ஒட்டுமொத்தமாக ஆட்களை சேர்ப்பது இட ஒதுக்கீட்டை காலி செய்து விடும் என்ற கருத்துக்கள் வலுக்க தொடங்கியுள்ளது” என்றார் வாக்காளர் சாமி. மேலும், அவரே தொடர்ந்தார், “பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் ஏற்கனவே கிருமிலேயர் (பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்) கொள்கை புகுந்து பல ஆண்டுகளாக விளையாடிக் கொண்டிருக்கிறது. கிருமிலேயர் கொள்கைப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஏற்கனவே, முன்னேறிய சாதிகள் என்ற பட்டியலில் உள்ள பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நகர்வுகள் எதேச்சையாக நடக்கிறதா? என்பதை பாதிப்புக்கு உள்ளாகும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தீர்மானிக்கட்டும். நீயும் நானும் பேசி என்ன உபயோகம்?” என்று டாப்பிக்கை முடித்தார் வாக்காளர் சாமி.
“வேறு என்ன முக்கிய செய்திகள் சாமி? என்றதும் வாக்காளர் சாமி தொடர்ந்தார். “தமிழகத்தில் வரிசையாக காலியாக இருந்த பல உயர் பதவிகளுக்கு நியமனங்கள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு விட்டார். தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியை அரசு நியமித்துள்ளது. எப்போதும் இந்த பதவிக்கு பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரியை நியமிப்பதுதான் வழக்கம். சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியை நியமனம் செய்துள்ளது. எப்போதும் இந்த பதவிக்கு பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியை நியமிப்பது வழக்கம் இல்லை. எந்த நியமனத்துக்கு பரிந்துரைகளை அரசு அனுப்பி வைத்தாலும் காலதாமதம் செய்யும் தமிழக ஆளுநர் கடந்த சில நாட்களாக அரசின் பரிந்துரைகளை ஏற்று உடனே ஒப்புதல் வழங்கியுள்ளார்” என்றார் வாக்காளர் சாமி.
“சாமி! ஆளுநர் திடீரென டெல்லி சென்றுள்ளார்” என கேட்டதற்கு “கடந்த ஜூலை 31 அன்று அவரது பதவிக்காலம் முடிந்தபோதிலும் அவரது பதவியை நீட்டித்து மத்திய அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதே நிலையில் அவர் ஆளுநராக பதவியில் தொடர்வது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும். இதற்கு ஒரு தீர்வை காணவே டெல்லி சென்று இருக்கலாம் என நான் கருதுகிறேன்” என்றார் வாக்காளர் சாமி.
“என்ன சாமி! பழனிக்கு செல்வதாக கூறினீர்களே. முருகனின் அருளை பெறவா?” என வாக்காளர் சாமியிடம் கேட்டேன். “உனக்கு தெரியாதா? உலக முருக பக்தர்கள் மாநாட்டை தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை பழனியில் இந்த வாரம் நடத்த உள்ளது. இந்த சமயத்தில் கோயிலுக்கும் சென்று விட்டு மாநாட்டையும் பார்வையிடலாம் என்றுதான் பழனி செல்கிறேன்” என்றார் வாக்காளர் சாமி. மேலும், அவரே தொடர்ந்தார் “அரசு மிகவும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ள இந்த மாநாட்டிலும் சிலர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறிவிட்டு கிளம்பினார் வாக்காளர் சாமி.