Advertisement

உயர் பதவிகளில் நியமனங்கள் விரைவில் நடைபெற உள்ளது – பேய் இருக்கிறதா? கருத்துக்களுக்கு பதில் கருத்து – வாக்காளர் சுவாமி

அதிகாலையிலேயே பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்தார் வாக்காளர் சாமி. அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் அவர்.

“அடுத்து வரும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மத்திய அரசின் பல்வேறு உயர் பதவிகளுக்கு தகுந்த நபர்களை   மத்திய அரசு நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி. “நீங்கள் சொல்வது ரயில்வே அறிவிப்பு போல உள்ளது. விரிவாக சொல்லுங்கள்” என்றேன் நான். 

“தகவல் உரிமைச் சட்டப்படி தேசிய அளவில் செயல்படக்கூடிய மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள எட்டு தகவல் ஆணையர் பதவிகளுக்கும் விரைவில் மத்திய அரசு தகுதி வாய்ந்த நபர்களை நியமிக்க உள்ளது. இதே போலவே, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களுக்கும் புதிய நபர்கள் வரும் மூன்று மாத காலத்திற்குள் மத்திய அரசால் நியமிக்கப்படலாம்” என்றார் வாக்காளர் சாமி. “இவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வரும்? சாமி” என்றேன் நான்.

“மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையர்களுக்கு மாத சம்பளம் ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படுவதோடு வீட்டு வாடகைப்படி ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம்   மற்றும் தினசரி படி உள்ளிட்டவை சேர்த்து மொத்தம் மாதம் ரூபாய் 4 லட்சம் வழங்கப்படுகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வழங்கப்படும் சம்பளமும் உறுப்பினர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் சம்பளமும் வழங்கப்படுகிறது. சம்பளம் மட்டும் அல்லாமல் இவர்களுக்கு கார், டிரைவர், உதவியாளர்கள் போன்ற வசதிகளும் உண்டு” என்றார் வாக்காளர் சாமி.

“நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி தீர்ப்பாயங்களை அடுத்த மூன்று மாத காலத்துக்குள் மத்திய அரசு அமைக்க உள்ளது. இந்தத் தீர்ப்பாயங்களில் நீதி வழங்குவதற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான குழு டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு வருகை புரிந்து விண்ணப்பித்தவர்களிடையே நேர்காணல் நடத்தியுள்ளது. விரைவில் இந்த பதவிகளில் சுமார் 120 நபர்கள் நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இவர்களுக்கும் மாத சம்பளம் ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படுவதோடு வீட்டு வாடகைப்படியாக ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரமும் இதரப் படிகளும் இதர வசதிகளும் வழங்கப்பட உள்ளன” என்றார் வாக்காளர் சாமி. “மத்திய அரசின் நியமனங்களாக சொல்கிறீர்கள். மாநில அரசு செய்திகள் எதுவும் இல்லையா? சாமி” என்றேன் நான்.

“தமிழ்நாடு உணவு ஆணையத்தில் தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களை நியமிக்க சுமார் 18 மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு விண்ணப்பங்களை பெற்றது. இதன் பின்பு நிர்வாக காரணங்களால் இந்த நியமனம் நடைபெறவில்லை. மீண்டும் விளம்பரம் செய்து கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெற்று முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஆணையத்தில் தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களை தமிழக அரசு நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை போலவே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின்   தலைவர் பதவிக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. விரைவில் இந்த பதவியிலும் தமிழக அரசு தகுந்த நபரை நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி.

“மேலும், மிக முக்கியமாக கருதப்படும் ஒரு அமைப்பில் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் பதவிகள் காலியான நிலையில் உறுப்பினராக இருந்த ஒருவரே தலைவராக தற்காலிக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த அமைப்பில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான முதலமைச்சர் தலைமையிலான கூட்டம் கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்ளாததால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த பதவிகளுக்கும் இன்னும் ஓரிரு வாரங்களில் நியமனங்கள் நடைபெறலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் பதவிகளில் அமர சிலர் கடுமையாக முயற்சித்தாலும் இந்த பதவிகளில் அறிவாற்றல் மற்றும் திறமை மிகுந்த நபர்களை நியமிக்கவே ஆளும் தரப்பு விரும்புவதாக தெரிகிறது” என்று முடித்த வாக்காளர் சாமி, என்னை பார்த்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன் என்று தொடர்ந்தார். “கடந்த வாரம் பேய் இருக்கிறதா? இல்லையா? என்று பூங்கா இதழ் பயிற்சி கட்டுரையாளர்களிடம் கேட்கச் சொன்னேன். அவரது கருத்துக்களை பூங்கா இதழில் நேற்று வெளியிட்டுள்ளீர்கள். இதில் உன் கருத்து என்ன?” என்று என்னை கேட்டார்.

“ஆழ்மனதில் சில எண்ணங்கள் பதிவாகும் போது அவர்கள் சில நேரங்களில் எதையாவது கற்பனை செய்து பேயை பார்த்ததாகவும் பேய் கதைகளையும் தெரிவிக்கிறார்கள். இவர்களது ஆழ்மனதில் ஏற்படும் இத்தகைய எண்ணங்கள் தீவிரமடையும்போது மனநோயாக மாறி அவர்களும் அவர்களிடம் ஆட்கொண்டுள்ள எண்ணங்களுக்கு ஏற்ப பல்வேறு வகையில் நடந்து கொள்கிறார்கள். இதனைத்தான் பேய் பிடித்து விட்டது என்று மூடநம்பிக்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள். சிறந்த மனோதத்துவ நிபுணரிடம் ஆலோசித்து, மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டிய பிரச்சனைகளை தவறான முறையில் கையாளுகிறார்கள். இவ்வாறு பேய் என்ற  கற்பனை கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு பலர் காசாக்கி கொண்டுள்ளார்கள். பேய் இல்லை என்பதே என் கருத்து சாமி. சந்திரனுக்கும் சூரியனுக்கும் ராக்கெட் விடும் இந்த அறிவியல் உலகில் பேய் இருப்பதாக அறிவியல் பூர்வமாக இன்று வரை நிருபிக்கப்படவில்லை” என்றேன் நான். “சபாஷ்! சிறப்பாக நீயும் கருத்துச் சொல்கிறாய். அடுத்த வாரம் சந்திப்போம்” என்று கூறி விடை பெற்றார் வாக்காளர் சாமி.

கணவரை இழந்த பெண்ணுக்கு ரூபாய் 80 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

https://theconsumerpark.com/insurance-claim-pre-existing-disease-dr-v-ramaraj-order-consumer-court

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles