சேர்வராயன் மலைத்தொடர் மஞ்சவாடி கணவாய் அருகே திருமணிமுத்தாறு உற்பத்தியாகி சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் திருமணிமுத்தாறு சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூரில் நன்செய் இடையாறு என்ற இடத்தில் காவிரியுடன் கலக்கிறது. திருமணிமுத்தாறு ஏரியின் கரையில் ஒன்றான சேலம் நகரம் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்களால் வழிபட்டதாக கூறப்படும் திருமணிமுத்தாறு படுகையில் அமைந்த சுயம்பு லிங்கங்களில் முதலாவதாக சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
காவிரி ஆற்றின் துணை நதியாக விளங்கும் திருமணிமுத்தாறுக்கு போதமலையின் தெற்கு சரிவில் உற்பத்தியாகும் ஏளூர் நதியும், கஞ்சமலையின் சிற்றோடையான பவுனாறு அல்லது தங்கநதியும் துணை ஆறுகளாகும். பொன்னி ஆறு, கன்னிமார் ஓடை, வறட்டாறு, ராஜவாய்க்கால் ஆகியவை திருமணி முத்தாற்றின் கிளை ஆறுகளாக உள்ளன. மிகவும் பழமையான, புனிதம் நிறைந்த இந்த நதி, மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்றெல்லாம் அழைக்கப்பட்டது.
ஒரு காலத்தில் திருமணிமுத்தாறானது வற்றாத ஜீவநதியாக இருந்தது. தற்போது, சேலம் மாநகரில் சாக்கடை கழிவுகளை தாங்கிச் செல்லும் ஆறாக மாறிவிட்டது. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்து எடுக்கப்பட்டது பிரசித்திப் பெற்ற செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
சேலம் நகருக்குள் செல்லும் திருமணிமுத்தாற்றில் குப்பையில் குப்பைகள் கொட்டப்படுவதாலும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கப்படுவதாலும் இந்த ஆறு மிகுந்த மாசுபட்டுவிட்டது. திருமணிமுத்தாறு மாசு மாசுபடுவதை தடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தால் கடந்த 2022 ஜூலை மாதத்தில் வழங்கப்பட்டது. திருமணிமுத்தாறு நதி நீரின் தரம், திருப்திகரமாக இல்லை.எனவே, திருமணிமுத்தாறு மாசுபடுவதை தடுக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க, சுற்றுச்சூழல், நகராட்சி நிர்வாகம், நீர்வளம், நிதி ஆகிய நான்கு துறைகளின் செயலர்கள் அடங்கிய, கண்காணிப்பு குழுவை, தமிழக அரசின் தலைமை செயலர் உடனடியாக அமைக்க தலைமைச் செயலருக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டில் இந்திய சர்வே துறை எடுத்த நில அமைப்பு வரைபட தரவுகளின்படி திருமணிமுத்தாற்றிக்கு சிற்றோடைகள் பல இருந்துள்ளது ஆனால், வேகமான நகரமயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் திருமணிமுத்தாற்றின் சிற்றோடைகள் காணாமல் போய்விட்டன. போதிய அகலத்துடன் இருந்து வந்த இந்த ஆற்றின் இரு பக்கங்களிலும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு இந்த ஆறானது பல இடங்களில் ஓடை போல மாறிவிட்டது. நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் செல்லும் இந்த ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் பல கிராமங்களில் வீடுகள் கட்டப்பட்டு விட்டன. திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை. ஒரு காலத்தில், வாழ்வாங்கு வாழ்ந்தது திருமணிமுத்தாற்றின் நதிக்கரை நாகரீகம். மக்களை வாழ்வாங்கு வாழ்வித்த அந்த ஆறு இன்று இல்லை.
சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான காவேரி – திருமணிமுத்தாறு – பொன்னியாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றினால் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம் கிணறுகளிலும் ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மாசுபட்டு ஆக்கிரமிக்கப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ள திருமணிமுத்தாற்றை பாதுகாத்தால் பொதுமக்களின் விவசாய, குடிநீர் தேவைக்கும் மிகுந்த பலன் அளிக்கும்.
திருமணிமுத்தாறை பாதுகாப்போம்! மண்வளமும் மக்கள் வளமும் காண்போம்! மாநில அரசும் சேலம் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் திருமணிமுத்தாறை காக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய வேண்டியது உடனடி தேவையாகும்.
ஒரு ரூபாய்: உரிமைக்காக போராடி வெற்றி பெற்ற சாமானியர்
https://theconsumerpark.com/judgement-for-common-man-dr-v-ramaraj-namakkal-consumer-court