Friday, August 1, 2025
spot_img

இயற்கை அழகு சூழ்ந்த தமிழகத்தின் இந்த கிராமத்துக்கு செல்ல அரசு அனுமதி வேண்டும் எந்த ஊர் தெரியுமா?

இயற்கை எழில் கொஞ்சும்  கிராமம்

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி வட்டத்தில் நீலகிரி மலை அடிவாரத்தில் மேற்கு மலை தொடர்ச்சியையும் கிழக்கு   மலை தொடர்ச்சியும் இணைக்கும் திப்பம் மலைப்பகுதியில்   முதுமலை தேசியப் பூங்காவின் கிழக்கு எல்லைப்பகுதியாக,  முதுமலை புலிகள் சரணாலயத்துக்கும்  சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துக்கும் மத்தியில் இயற்கை எழில் கொஞ்சும்   சீகூர் பீடபூமியில் மோயார் பள்ளத்தாக்கில் உள்ள ஏழு பழங்குடியின கிராமங்களில் மிகப்பெரியதாக தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ளது.  தெங்குமரஹாடா ஊராட்சியில் அள்ளி மாயாறு, கல்லாம்பாளையம் மேலூர் மற்றும் கீழூர் ஆகிய கிராமங்கள் அருகருகே உள்ளன. 

மூன்று பக்கங்களில் அடர் வனம், மலைகளும் ஒரு பக்கத்தில் முதலைகள் அதிகம் உள்ள மோயார் என்ற  ஆறும் இந்த கிராமத்தை சூழ்ந்துள்ளது.  இந்த கிராமம் யானைகளின் வலசைப்பாதையாக உள்ளதுடன் இந்த கிராமத்தின் ஒரு பக்கம் உள்ள மாயாற்றில்  முதலைகளும் தெங்குமரஹடா கிராமத்தை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் புலி, யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டு முயல், செந்நாய் உள்ளிட்ட விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் ஆற்றில் ஓடும் நீரின் ஓசையும் பல வகையான பறவைகளின்  ஓசையும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பச்சை போர்த்திய விவசாய நிலமாக பசுமையான நெல் வயல்கள்,  செவ்வந்தி பூந்தோட்டங்கள், வாழை தோட்டங்கள்   உள்ளிட்டவை காணப்படுகிறது.  தெங்குமரஹாடா ‘நீலகிரியின் நெல் கிண்ணம்’ என்று அழைக்கப்படுகிறது. இயற்கையை விரும்பும், மாசற்ற பகுதியை விரும்பும்  மக்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பகுதியாக இந்த கிராமம்   உள்ளது. தமிழகத்தில் பலரும் அறிந்திராத ‘தெங்குமரஹடா’ என்ற இந்த தனித்தீவிற்குள்   அனுமதி இல்லாமல் அவ்வளவு எளிதாக யாரும் உள்ளே நுழைந்து விடமுடியாது. 

கிராமம் உருவான வரலாறு

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் உணவு உற்பத்தி முன்மாதிரி கிராமங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் தெங்குமரஹடா.  தெங்குமரஹடாவுக்கு அருகில் உள்ள அல்லிமாயார், கல்லாம்பாளையம் கிராமங்களில் இருளர் பழங்குடியின மக்களும் தெங்குமரகடாவில் இருளர், படுகர்,   குறும்பர் பழங்குடியின மக்களும் கர்நாடகாவில் இருந்து புலம் பெயர்ந்த ஒப்புலிய கவுண்டர் இன மக்களும் வசித்து வருகிறார்கள். தற்போது 497 பழங்குடியின மக்கள் குடும்பங்கள் இந்த கிராமத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்முதல் செய்ய தெங்குமரஹாடா கூட்டுறவு பண்ணை சங்கம் 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.   இந்த சங்கத்துக்கு 100 ஏக்கர் நிலம் பயிரிடுவதற்காக அரசால் முதலில் வழங்கப்பட்டது. பின்னர் 500 ஏக்கர் நிலம் வனத்துறையால் குத்தகைக்கு வழங்கப்பட்டது.  கீழ்கோத்தகிரி, சோலூர்மட்டத்தை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 142 பழங்குடியின மக்களை தேர்வு செய்து தெங்குமரஹாடா கூட்டுறவு பண்ணை சங்கத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு ஏக்கர் நஞ்சை மற்றும் ஓர் ஏக்கர் புஞ்சை நிலம் தெங்குமரஹாடாவில் வழங்கப்பட்டது. இந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் பணி செய்ய கோபி, ஈரோடு, சத்தியமங்கலம் பவானிசாகர் பகுதியில் உள்ளவர்களை பணியமர்த்தினர். விவசாயத்துக்கான நிலம் மற்றும் தண்ணீர் வசதி இருந்ததால் நாளடைவில் தெங்குமரஹாடா செழிப்பான பூமியாக மாறியது. 

கரடு முரடான பயணம்

நீலகிரி மாவட்டத்தில் இருந்த போதிலும் நீலகிரி மலை அடிவாரத்தில் ஈரோடு  மாவட்ட எல்லைக்கு அருகாமையில் உள்ள தெங்குமரஹாடா கிராமத்தை சாலை மார்க்கத்தில் அடைய   பவானிசாகரில் இருந்து 35 கிலோ மீட்டர் வடமேற்கே பயணிக்க வேண்டும். தெங்குமரஹாடாவிற்கு செல்ல கோத்தகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, மாலை என இரண்டு அரசுப் பேருந்துகள் மட்டும் உள்ளன. பவானிசாகரில் இருந்து 5  கிலோமீட்டர் மட்டுமே தார் சாலை உள்ளது அதற்கு பின்பு   கராச்சிக்கொரையிலிருந்து தொடங்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியாக இக்கிராமத்திற்கு ஒரே குண்டும் குழியுமான   சாலையில்தான் காடுகளுக்கு இடையே பயணம் செய்ய வேண்டும்..  வாகனங்களிலும் பயணிக்கும் போது வழி முழுக்க கருங்குரங்குகள், புள்ளிமான்கள், யானைகள், மிளா போன்றவற்றையும் சிறுத்தை, புலி, கரடிகளின் கால் தடங்களையும் காணமுடியும். 

சாலை மார்க்கத்தில் தெங்குமரஹாடா கிராம நுழைவாயிலாக மாயாறு ஓடுவதால் ஆற்றின் ஒரு கரையில் பேருந்து நிறுத்தப்பட்டு விடும்.  ஆற்றை  பரிசல் மூலமாக கடந்து சிறிது தூரம் நடந்து இந்த கிராமத்தை அடைய முடியும்.  எஸ்யூவி கார், ஜீப் மூலமாக தண்ணீரின் குறுக்கே வாகனத்தை ஒட்டி   ஆற்றை கடந்து   கிராமத்தை அடையலாம்.  இந்த கிராமத்தில் விளையும் பொருட்களை ஆற்றில் லாரிகளை ஓட்டி எடுத்துச் செல்கிறார்கள். முதலைகள் அதிகமாக உள்ள மாயாற்றில் எப்போது நீர்வரத்து அதிகமாக இருக்கும் எப்போது குறைந்து காணப்படும் என்பது அந்த உள்ளூர் மக்களாலே கணிக்க  முடியாததாக உள்ளது.   ஊருக்கும் வனப்பகுதிக்கும் இடையேயுள்ள சுமார் 50 மீட்டர் நீளமுள்ள   மாயாற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக செல்லும் போது மக்கள்   ஊருக்குள்ளேதான் முடங்கிக் கிடக்க வேண்டும்.

நீலகிரி மாவட்ட மலைகளில் உள்ள கொடநாடு, சிரூர், ஆனைகட்டி, மாசினகுடி ஆகிய ஊர்களில் இருந்தும் மலைப்பாதை வழியாக நடந்து   இந்த கிராமத்துக்கு செல்லலாம். கொடநாட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தூரம் மட்டுமே உள்ள தெங்குமரஹாடாவிற்கு மலைக்காடுகள் வழியாக, மூன்றரை மணி நேரம் நடக்க வேண்டும். நீல-சாம்பல் மலைகளால் சூழப்பட்ட இந்த கிராமம்   மலையேற்றப் பயிற்சி மேற்கொள்பவர்களின் சொர்க்கமாகும்.

செல்வதற்கு சிறப்பு அனுமதி தேவை

பவானிசாகரில் இருந்து பேருந்தில் செல்லும் போது இந்த கிராமத்துக்கு சுமார் 30 கிலோமீட்டர்   வனப்பாதையின் நுழைவாயிலில் கராச்சிக்கொரை என்ற இடத்தில் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினரின் சோதனை சாவடி உள்ளது.  சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு, உள்ளே இருக்கும் பயணிகள் உள்ளூர் மக்கள்தானா? என சரிபார்க்கப்பட்ட பிறகே பேருந்துகள் புறப்பட அனுமதிக்கப்படுகிறது. வெளியில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமல்ல  உள்ளூர் மக்களுக்கும் பல கட்டுப்பாடுகளும் சோதனைகளும் நடத்தப்படுகிறது.

நண்பர்களோ அல்லது உறவினர்களோ வசித்தால் நீங்கள் தெங்குமரஹடாவை சுற்றிப்பார்க்க செல்லலாம்.   அதற்கும் வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த ஊருக்கு செல்லும் போது பாதி வழியில் உள்ள ஒரு கோயிலுக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சாவடியிலேயே கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.  ஒரு சுற்றுலாவாசியாக இந்தப் பகுதிக்கு செல்வதற்கு சத்தியமங்கலத்தில் உள்ள வன பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். தெங்குமரஹாடா பகுதிக்கு மலையேற்றப் பயிற்சி மேற்கொள்பவர்கள் உதகமண்டலம் வடக்கு மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதிபெற வேண்டும். வனத்துறை வழிகாட்டிகள் மூலம் மட்டும் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள முடியும். தெங்குமரஹாடாவில் உள்ள வனத்துறை அலுவலவகத்துக்குச் சொந்தமான விடுதியில் தங்கிக்கொள்ள முன் அனுமதி பெறவேண்டும்.

இங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்ட காடுகளின் வழியாக, வனத்துறை ஐந்து மணி நேர சஃபாரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் இந்த பயணத்திற்கு வனத்துறை தடை விதிக்கலாம். இந்த கிராமத்துக்கு பயணிப்பது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை தரும்.

கிராமத்தை காலி செய்யும் திட்டம்

இயற்கை எழில் வாய்ந்த வளம் மிக்க இந்த கிராமத்தின் மறுபக்கம் மிக சோகமானது.  பத்தாம் வகுப்பு வரை படிப்பதற்கான பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவை இந்த ஊரில் இருந்தாலும் கூட அவசர மருத்துவ   வசதியைப் பெற எளிதில் நகரில் உள்ள   மருத்துவமனைகளுக்கு வர முடியாது.  முற்றிலும் போக்குவரத்து வசதிகளில் புறக்கணிக்கப்பட்ட கிராமமாக இருப்பதால் உயர் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை இங்கு வாழ்பவர்களுக்கு அரிதாக உள்ளது.  கடந்த 70 ஆண்டுகளாக மாயாரில் பாலம் கட்டுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் கோரிக்கையை  வைத்தும் இன்னும் பாலம் கட்டப்படவில்லை.  இந்த கிராமத்திலும் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வனவிலங்குகளால் மக்கள் தாக்கப்படுவதும்  தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது.

இங்கு உள்ள நிலங்களில் மக்கள் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தாலும் விவசாய நிலங்கள் அவர்களுக்கு சொந்தமானதல்ல என்பது கவனிக்கத்தக்கது.  கூட்டுறவு சங்க நிலங்களில் குத்தகைதாரர்களாகவே அவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு இப்பகுதியை முற்றிலும் வனப்பகுதியாக மாற்றும் வகையில் குத்தகைக்கு வழங்கிய நிலங்களை திரும்ப பெற்று இங்குள்ள மக்களை இடமாற்றம் செய்து, கிராமத்தை ஒட்டுமொத்தமாக காலி   செய்து வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வனத்துறையினர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள்   மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இந்த பகுதியில் உள்ள 497 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 15 லட்சத்தை வழங்கி அவர்களுக்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை கடந்த 2022 அக்டோபரில் அரசுக்கு சமர்ப்பித்தனர்.   மக்களை காலி செய்யம்   திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை மத்திய அரசு புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஒதுக்க வேண்டும். புலிகள் பாதுகாப்பு ஆணையம் அதனை தமிழ்நாட்டின் வனத்துறை தலைமை பாதுகாவலருக்கு வழங்க வேண்டும். தமிழக   வனத்துறை மக்களிடம் பணத்தை செலுத்தி ஊரை காலி செய்ய வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனை அமல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் வனத்துறை செயலாளர் இந்த கிராமத்துக்கு சென்று நிலவரங்களை அறிந்து வந்துள்ளார்.

இங்கு பல காலமாக வசிக்கும் தங்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்றும் வேறு ஊர்களுக்கு சென்று தங்களால் வாழ இயலாது என்றும் இந்தப் பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.  ஒரு சிலரோ கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு மக்கள் இடம் மாற்றம் செய்யப்பட்ட பின்னர்   வாக்குறுதிகள் நிறைவேற்றப்படா விட்டால் நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும் என்று தெரிவிக்கின்றனர். மாயாற்றின் குறுக்கே பாலம் அமைத்துக் கொடுத்து பவானிசாகர் வரை தார் சாலை அமைத்துக் கொடுத்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது பழங்குடியின மக்களின்   கருத்தாக உள்ளது. (“நுகர்வோர் பூங்கா”  https://theconsumerpark.com/ இணைய இதழில் 10 பிப்ரவரி 2024 -ல் வெளியான கட்டுரையின் மறு பதிப்பு)

பூங்கா இதழ் (The News Park) கருத்து: இயற்கை அழகைக் காண தெங்குமரகடா ஒரு சிறந்த இடம்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles