Advertisement

பொதுமக்களுக்கு எதிராக சட்டங்கள் உள்ளதால்தான் எதிர்க்கிறோம் -வழக்கறிஞர் தலைவர் இரா. அய்யாவு சிறப்பு பேட்டி. கூட்டமைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை குழுவின் போராட்டக் குழு  விபரங்களுடன்

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம் மற்றும் இந்திய சாட்சி சட்டம் ஆகியவற்றை முற்றிலும் நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட மூன்று சட்டங்கள் கடந்து ஜூலை முதலாம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளன. இவற்றை திரும்ப பெற வேண்டுமென கடந்த மூன்று வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி போராட்டம் நடத்திய வருகிறார்கள். 

இந்தச் சட்டங்களை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி புதுடில்லியில் வரும் 26 ஆம் தேதி அன்று போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் வரும் 29 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழுவும் அறிவித்துள்ளன.

வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்துக்கான ஒருங்கிணைப்பு குழு தலைவராக இரா. அய்யாவு (நாமக்கல்) அவர்களும் N.சிவராசன் (வேலூர்), M.K.M.முத்துராமலிங்கம் (தேனி), விஷ்வபாரதி (கிருஷ்ணகிரி), T.மைக்கேல் ஸ்டானிஷ்பிரபு (தூத்துக்குடி), K.K.பாலசுப்பிரமணியம் (நாமக்கல்), S.பாலமுருகன் (திருவள்ளூர்), அருள்முருகன் (ஈரோடு), D.பழனிச்சாமி (செங்கல்பட்டு), J.M.இமயவர்மன் (சேலம்), M.காளிதாஸ் (விழுப்புரம்), E.L.கண்ணன் (காஞ்சிபுரம்), R.T. சங்கர் (பாண்டிச்சேரி) ஆகியோர் உறுப்பினர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள இரா. அய்யாவு அவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலின் உறுப்பினராகவும் கௌரவச் செயலாளராகவும் உள்ளார் என்பதோடு நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். பூங்கா இதழின் சார்பாக அவரை சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம். இந்த சிறப்பு நேர்காணலின் கேள்விகளும் பதில்களும் பின்வருமாறு

பூங்கா இதழ்: அமலுக்கு வந்துள்ள மூன்று சட்டங்களையும் தாங்கள் எதிர்க்க காரணம் என்ன?

இரா. அய்யாவு: இந்த சட்டங்களில் காவல்துறையினருக்கு தேவைக்கு அதிகமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக, புகாரை ஒருவர் சமர்ப்பித்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று இருந்த சட்டம் புகாரை ஒருவர் சமர்ப்பித்தால் விசாரணை நடத்தி 14 நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என புதிய சட்டத்தால் மாற்றப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்குள் சாட்சியங்களை குற்றம் புரிந்தவர்கள் அழிக்க வாய்ப்புகள் உள்ளது. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாமல் தடுக்க செல்வாக்கு உள்ளவர்கள் காவல்துறையில் தலையிடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அரசுக்கு எதிரான சில குற்றங்களில் காவல்துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டால் குற்றம் சாட்டும் காவல்துறையினர்தான் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் புரிந்துள்ளார் என்று சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும் என இருந்து வந்த சட்டம் மாற்றப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என புதிய சட்டம் தெரிவிக்கிறது இத்தகைய கடுமையான சட்டங்கள் மூலம் அரசுக்கு எதிரான நியாயமான போராட்டங்கள் நசுக்கப்படும்.

பூங்கா இதழ்: காவல் துறையினருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதற்காகத்தான் வழக்கறிஞர்கள் புதிய சட்டங்களை எதிர்க்கிறார்களா?

இரா. அய்யாவு: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த ஒரு தகவலைத்தான் உதாரணமாக தெரிவித்தேன். இதைப்போல பல மாற்றங்கள் நடைமுறை சிக்கல்களையும் பிரச்சனைகளையும் உருவாக்கக்கூடியவனாக புதிய இந்திய தண்டனைச் சட்டத்திலும் குற்றவியல் விசாரணை முறை சட்டத்திலும் சாட்சிய சட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதால் காவல்துறை அதிகாரிகள் அவற்றை தவறாக பயன்படுத்துவார்கள் என்பது எங்கள் கருத்தல்ல. ஒரு சில அதிகாரிகள் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தும் போதும் ஆளும் அரசியல் கட்சிகள் அழுத்தம் தரும்போதும் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரங்கள் பொதுமக்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கும் என்பதே எங்கள் கருத்தாகும். 

பூங்கா இதழ்: வழக்கறிஞர்களுக்கான உரிமைகள் பறிபோவதால் இந்தப் போராட்டம் நடத்துவதாக சிலர் தெரிவிக்கிறார்களே?

இரா. அய்யாவு: இத்தகைய கருத்து ஒரு சிலரின் விஷம பிரச்சாரம் ஆகும். புதிய சட்டங்களின் மூலமாக வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, மருத்துவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரிவினருக்கு உள்ள சிறப்பு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. வழக்கறிஞர்களிடம் கட்சிக்காரர்கள் கூறும் தகவல்கள் கட்சிக்காரர்களின் நலம் சார்ந்தவை என்பதால் அவற்றை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை தவிர வேறு எங்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை மாற்றப்பட்டு வழக்கறிஞர்களிடம் கட்சிக்காரர்கள் கூறுவதை காவல்துறையினர் கேட்டால் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தகவல்களை மறைத்ததாக வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதிய சட்டம் தெரிவிக்கிறது.

இதைப்போலவே மருத்துவர்கள் தங்களது நோயாளிகள் குறித்த தகவல்களை தனியுரிமை (right of privacy) என்ற அடிப்படையில் வேறு எவருக்கும் தெரிவிக்க கூடாது என்ற நிலைமை மாற்றப்பட்டு மருத்துவர்களிடம் நோயாளிகள் கூறுவதை காவல்துறையினர் கேட்டால் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தகவல்களை மறைத்ததாக மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று புதிய சட்டம் தெரிகிறது.  இதே போல பலதரப்பட்ட பிரிவினருக்கு இந்த சட்டம் நியாயமற்ற கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது. 

பூங்கா இதழ்: வழக்கறிஞர்கள் தொடர்ந்து நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?

இரா. அய்யாவு: வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். முதலாவதாக, வழக்கறிஞர்கள் உரிமைகள் பாதிக்கப்படும் போதும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போதும் நடத்தும் போராட்டங்கள். இரண்டாவதாக, பொதுமக்களின் நலனை பாதிக்கக்கூடிய புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் போது அதனை எதிர்த்து வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டங்கள். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் பொதுமக்களின் நலனுக்கான போராட்டமாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் எங்களது போராட்டத்துக்கு மிகுந்த ஆதரவு உள்ளது. இன்னொன்றை சொல்ல வேண்டும் என்றால் கூட்டாட்சி நடைபெறும் இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டு வரும் நிலையில் சட்டத்தின் பெயரை சமஸ்கிருத மொழியில் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்.

பூங்கா இதழ்: புது தில்லி போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தாங்கள் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பை வழங்கினால் அதனை ஏற்று பணிபுரிய தயாராக உள்ளீர்களா? 

இரா. அய்யாவு: கூட்டமைப்பின் முக்கிய நிர்வாக பொறுப்பில் இருக்கிறோமா? அல்லது இல்லையா? என்பதல்ல பிரச்சினை. வழக்கறிஞர்களின் நலனுக்கு எதிரான – பொதுமக்களின் நலனுக்கு எதிரான போராட்டங்களில் எப்போதும் நான் முன்னணியில் இருக்கிறேன். 

தில்லி போராட்டத்துக்கான ஆலோசனைகள், பயண முன்பதிவுகள் ,தங்குமிட வசதிகளை செய்தல் உள்ளிட்ட பணிகளில் பரபரப்பாக இருந்த சூழ்நிலையில் பூங்கா இதழுக்கு நேரம் ஒதுக்கி பேட்டி அளித்த வழக்கறிஞர் இரா. அய்யாவு அவர்களுக்கு பூங்கா இதழ் சார்பில் நன்றியை தெரிவித்து விடை பெற்றோம். இன்னும் சில வினாக்களுக்கு பதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு வழக்கறிஞர்கள் கூட்டுக் குழுவின் நிர்வாகிகளை விரைவில் சந்தித்து நேர்காணல் செய்து பூங்கா இதழில் வெளியிட உள்ளோம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் வரும் 29 ஆம் தேதி அன்று புது தில்லியில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள போராட்டக் குழுக்களின் விவரம் பின்வருமாறு.

ஆதரவு திரட்ட குழு-1:

V.K சுப்பிரமணியன், குழு தலைவர்/ ஒருங்கிணைப்பாளர். உறுப்பினர்கள்: திரு.நெடுஞ்செழியன், மதுரை,  ஆர்.பாலகிருஷ்ணன் கோயம்புத்தூர், வி டி சின்னராஜ் புதுக்கோட்டை, ராஜு விருதாச்சலம், மாதேஷ் தர்மபுரி, ராஜசேகர் கும்பகோணம், ஜெயக்குமார் நாகர்கோயில், காலத்திநாதன், கோபி, ஜெயராஜ் ஸ்ரீவில்லிபுத்தூர், நாகக்குமார் திருவண்ணாமலை, உமர் வாணியம்பாடி, காமராஜ் தஞ்சை, இப்ராஹிம் ராமநாதபுரம், பிரபாகரன் நாமக்கல், சீனிவாசன் மேட்டுப்பாளையம்

டெல்லிக்கு அணிதிரட்டி வர ஏற்பாடுகளை செய்ய குழு-2

பாலசுப்பிரமணியம் திருச்சி, குழு தலைவர் /ஒருங்கிணைப்பாளர். உறுப்பினர்கள்: மோகன் குமார் மதுரை, சுதீஷ் கோயம்புத்தூர், ஆனந்த முனிராஜ் திண்டுக்கல், ராஜேஸ்வரன் நெல்லை, புஷ்ப தேவன் விருதை, சீனிவாசன் வேலூர், சந்தானகிருஷ்ணன் தேனி, பால ஜனாதிபதி நாகர்கோயில், சுரேஷ் குழித்துறை, சுரேந்திரன் ராணிப்பேட்டை, அபிராமன் திருவண்ணாமலை, சிவராஜ பூபதி நாகர்கோயில், குருசாமி ஈரோடு, மது திருப்பத்தூர், சிவக்குமார் தென்காசி, மோகன்ராஜ் நாமக்கல், சிவராமன் மேட்டூர், அருள்செல்வன் திருத்துறைப்பூண்டி, இளங்கோ நாகப்பட்டினம், சித்ராசாமி சிவகங்கை, ரகமதுல்லா மேட்டுப்பாளையம், விஜயகுமார் விருதாச்சலம், நல்லப்பெருமாள் விருதுநகர், மகாதேவன் ஊட்டி.

வழக்கறிஞர்கள் போராட்டம் குறித்த இதர கட்டுரைகளை  படிக்க:

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles