Advertisement

இந்தியாவில் இத்தனை தற்கொலைகளா? இத்தனை காரணங்களா? நினைத்துப் பார்க்க முடியவில்லை

கடந்த 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஒரு லட்சத்து 77 ஆயிரம் மக்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்கள். இந்தக் கணக்கின்படி, ஒரு லட்சம் மக்களில் 12.4 நபர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் இவ்வாறான தற்கொலைகள், 2018 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் 27 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் ஆய்வு அறிக்கைகள் அதிர்ச்சிகரமான உண்மைகளை தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 67 சதவீதத்தினர் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டில், தேசிய குற்ற ஆவண பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட தற்கொலை குறித்த தரவுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடியனவாக இருக்கின்றன. 2019 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களில், 32.4 சதவீதத்தினருக்கு குடும்ப பிரச்சினைகளும் 17.1 சதவீதத்தினருக்கு உடல்நல பிரச்சனைகளும் காரணம் என்று இந்த அறிக்கையை தெரிவிக்கிறது. இவ்வாண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 5.6 சதவீதத்தினர் போதைக்கு அடிமையான காரணத்தால் என்ற புள்ளி விவரம் வேதனை அளிப்பதாக உள்ளது.

2019 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களில், பத்து சதவீதத்தினருக்கான காரணம் திருமணம் மற்றும் காதல் பிரச்சனைகள் ஆகும். தற்கொலை செய்து கொண்டவர்களில், கடன் பிரச்சனைகளின் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள் நான்கு சதவீதத்தினர். தற்கொலை செய்து கொண்டவர்களில், படிப்பில் தோல்வி, படிப்பதற்கான அழுத்தம், வேலைவாய்ப்பின்மை ஆகிய காரணங்களால் தற்கொலை செய்து கொண்டவர்கள் நான்கு சதவீதத்தினர். இந்த பிரிவினர் பெரும்பாலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களாக உள்ளனர் என்பது வேதனையாக உள்ளது.

2022 ஆம் ஆண்டு தற்கொலை நிகழ்வுகளில் மகாராஷ்டிரா முதலிடத்தையும் தமிழகம் இரண்டாவது இடத்தையும் மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டில் 1416 மாணவ – மாணவியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்களிடையே நடக்கும் ரேக்கிங், அவர்களுக்கிடையே நிலவும் பாரபட்சம், அவர்களது மன ஆரோக்கியமின்மை, பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பு, சக நண்பர்களின் தாக்கம் போன்ற காரணங்கள் மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைகின்றன.

மனதில் தோன்றும் எண்ணங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் மனதிற்குள்ளேயே போராட்டம் நடத்தி தீவிர மன அழுத்தத்தை அடைவது மாணவ மாணவியரின் தற்கொலைக்கு பிரதான காரணமாக உள்ளது. படிப்பிலும் போட்டி தேர்வுகளிலும் ஏற்படும் கடுமையான அழுத்தமும், குடும்பத்தில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளும், இதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் மன பதற்றத்தையும் யாரிடமும் பகிர்ந்து  கொள்ளாமலும் யாரின் உதவியை நாடாமலும் இருப்பதும் மாணவ, மாணவியரின் தற்கொலைக்கு முக்கியமான காரணங்களாக அமைகின்றன.

தற்கொலை எண்ணத்தை போக்க நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். வெற்றி ஏற்பட்டாலும் தோல்வி ஏற்பட்டாலும் ஏற்றுக்கொண்டு அன்றாட வேலைகளை செய்யுங்கள். மாணவர்களும் இளைஞர்களும் படிப்பிலும் போட்டி தேர்வுகளிலும் தோல்வி அடையும்போது கவலைப்படாதீர்கள். நன்கு படித்தவர்களும் வேலை கிடைத்தவர்களும் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று நினைத்து கொள்ளாதீர்கள். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் கவலைகளையும் குடும்பத்திலும் நண்பர்களிடமும் தெரிவித்து மனம் விட்டு பேசுங்கள். தினமும் ஏதாவது உடற்பயிற்சி அல்லது தியான பயிற்சி போன்றவற்றை மேற்க்கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உணவருந்துங்கள். ஒன்றாக பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். 

நல்ல புத்தகங்கள் கவலையை நீக்கும் மருந்தாக அமையும் என்பதை மனதில் கொண்டு புத்தக வாசிப்பை பழகிக் கொள்ளுங்கள். அதிகம் பேசாமல், சோர்வான மனநிலையில் தொடர்ந்து ஒருவர் இருப்பதாக  தோன்றினால் அவரிடம் பேசி உற்சாகமூட்ட வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல வாழ்க்கையின் மீதான பயத்தை வெல்லுங்கள்! வாழ்ந்து காட்டுங்கள்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles