Advertisement

இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் மன நோய் – அதிர்ச்சி தகவல்!

இந்தியாவின் மதிப்பு இன்று உலக அரங்கில் இளைஞர்களின் எண்ணிக்கையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இந்த இளைஞர்களில் 60  சதவீதத்தினர் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஆச்சரியம் கலந்த உண்மை. ஒருபுறம் தேவைக்கு அதிகமான வருமானம் ஒரு சாராருக்கு கிடைப்பதும் இன்னொரு புறம் ஒரு சாராருக்கு கிடைப்பதும் வருமானமின்மையும் வறுமையும் நிலவுவதேஇதற்கான அடிப்படை காரணமாகும். 

இளைஞர்களில் பெரும்பாலானோருக்கு இருக்கும் மனஅழுத்தம் ஒரு வித மன நோயை அவர்களுக்கு உருவாகுகிறது. இத்தகைய மனநோய் பலருக்கும் குறைந்த அளவிலும், சிலருக்கு சற்றே அதிகமாகவும், மிகக் சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கிறது.  அதிகப்படியான வேலைப்பளுவினாலோ அல்லது மேலதிகாரிகளின் கண்டிப்பினாலோ அல்லது குடும்பப் பிரச்னைகளினாலோ மன அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வேலையை செய்யும்போது கவனமின்மை, தாழ்வுமனப்பான்மை, எதிர்காலத்தை குறித்த பயம்,  அதீத கற்பனைகள், உணவு உண்ணுவதில் வெறுப்பு,  தூக்கமின்மை போன்றவை ஏற்படுகிறது. 

ஆண்டுக்கு ஆண்டு மனநலம் பாதித்தவரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு இருக்கிறது. 2001-ல் எடுக்கப்பட்ட உலக சுகாதார கணக்கெடுப்பில் நான்கில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 2017-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் உலகம் முழுவதும் 7,920 கோடி  மக்கள் தீவிர மனநோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   மனநோய் என்பது மனஅழுத்தம், ஆர்வகோளாறு, மதுவால்பாதிப்பு,  மது அல்லாத இதர போதைப் பொருட்களால் பாதிப்பு,  சித்த பிரம்மை,  பை-போலார் எனப்படும் மூளைக்கோளாறு என்று  பல வகைப்படுகிறது.  இந்த பாதிப்புகளை சரியான தொடர் சிகிச்சை மூலம் சரி செய்யாவிட்டால் இறுதியில் பாதிப்புக்குள்ளான 20 சதவீதத்தினர் தற்கொலை உந்தப்படுகிறார்கள்.

இதில் ஆச்சரியப்பட வைக்கின்ற விஷயம் என்னவென்றால் உலகில் வெற்றி பெற்றவர்கள் வரிசையில் பலரும் மனநோயாளிகளாக இருந்திருக்கின்றனர். 2015-ல்    நடைபெற்ற கணக்கெடுப்பில் அமெரிக்காவில் புதிதாக நிறுவனம் தொடங்கிய  49 சதவீதம் பேருக்கு மனநோய் இருந்தது கண்டறியப்பட்டது. உலக அளவில் இசை துறையில் இருந்த  71.1  சதவீதம் பேருக்கு மனநோய் இருந்திருக்கிறது. ஆனால், இந்த மனநோய் அவர்களை எதையாவது சாதிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி வெற்றியுடன் கைகோர்த்து விட்டது.

அமெரிக்க அதிபராக இருமுறை பதவி வகித்த ஆபிரகாம் லிங்கன் மெலங்கெலி என்ற மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். உலக புகழ்மிக்க நடனக்கலைஞர் ஆல்வின் அய்லே அமெரிக்காவில் நடனக்கூடத்தை ஏற்படுத்தி இலட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு நடனத்தை கற்றுத்தந்தவர். இவர் பை- போலார் என்ற  மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இருமுறை பேஸ்பால் விளையாட்டில் சாதனைபுரிந்த பென் சோபிரிஸ்ட் என்பவர் ஆர்வக்கோளாறு என்னும் மனநோயினால்  பாதிக்கப்பட்டு இருந்தார். பீச்பாய்ஸ் என்ற உலக புகழ்மிக்க இசை ஆல்பத்தை தந்த பிரைன் வில்சன் சித்தபிரமையால் பாதிக்கப்பட்டிருந்தார். ப்ளு லாகூன் திரைப்பட நாயகி ப்ரூக் ஷீல்ட்  மனஅழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். உலக புகழ்பெற்ற ஹாரிபார்ட்டர் கதையினைத் தந்த ஜே.கே . ரௌலிங்,  சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளின் உள்ளிட்டோரும் மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் .

இன்று மன நோய் என்பது  ஒருவகை உடல் ஊனம் என சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாடு என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சர்வதேச மனித உரிமை ஒப்பந்தமாகும், இது மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 13 டிசம்பர் 2006 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.. 

இந்தியாவில் மனநோயாளிகளின் உரிமைகளைக் காக்க மனநலச்சட்டம், 1987 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்தது. இது போன்று ஊனமுற்றோருக்கான சமவாய்ப்புகள், சம உரிமைகள் மற்றும்  முழு பங்கேற்புக்கான 1995 ஆம் ஆண்டின் சட்டமும் நடைமுறையில் இருந்தது. மனநலம் பாதித்தவர்கள் மீது  சமூகம் பாகுபாடு காட்டுவதையும்  அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்படுகிற பொருளாதார சிக்கல்களை தீர்ப்பதையும்  மனநோய் பாதித்தவர்கள் விரைவில் குணமாக தகுந்த சூழ்நிலை ஏற்படுத்துவதையும் மையமாக வைத்து மனநலம் பாதித்தவர்களின் உரிமையை வலுப்படுத்த 2017 ஆம் வருடம் புதிதாக மனநல பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. 

கவலைப்படுவதால் கவலைகள் தீர்ந்து விடுவதில்லை. கவலைப்பட்டு மன அழுத்தத்தை வரவேற்க வேண்டிய அவசியம் இல்லை. தகுந்த உணவு பழக்கங்களாலும் சரியான தூக்கத்தை உடலுக்கு வழங்குவதாலும் மன நோயை உருவாக்கும் முக்கிய காரணியாக உள்ள மன அழுத்தத்தை சீராக பராமரித்துக் கொள்ள முடியும். கீதாஞ்சலியில் ரவீந்தரநாத் தாகூர் இறைவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது தனக்கு இன்பங்களையும் துயரங்களையும் இலகுவாக பாவிக்கும் மனதைத் தர கேட்கிறார். இளைஞர்கள் இந்தக் கருத்தை தமதாக்கிக்கொண்டால் மன நோய் வராமல் எளிதில்   தவிர்த்து விடலாம்.  மனதை சீராக்குவோம்! மன நோயாளிகளையும் மனிதர்களாக மதிப்போம்! மனநோயற்ற உலகை உருவாக்குவோம்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles