‘மாடு மாதிரி வளர்ந்து இருக்கிறியே தவிர மண்டையில மசால் கொஞ்சம் கூட இல்லையே! உன்னை வச்சு வேலை வாங்குறதுக்குள்ள என் உசுரு போயிரும் போலிருக்கு. இனி நீ வேலைக்கு வர வேணாம். ஒழுங்கா வீட்டுக்கு ஓடிப் போயிரு’. பலசரக்கு கடை முதலாளி விரட்டி விட்டதில் முகத்தில் டன் கணக்காக சோகத்தை சுமந்து வீட்டிற்கு வந்தான் நாகேந்திரன்.
அவனைப் பார்த்ததுமே அவனது மனைவிக்கு புரிந்து போனது. இந்த முறையும் வேலை காலி. ஒரு மாதத்திற்குள் ஒன்பது இடத்திற்கு வேலைக்கு போன ஒரே நபர் இவனாகத்தான் இருக்கும். வேலைக்கு வைத்திருப்பவர்கள் ஏதாவது ஒரு வேலை செய்யச் சொன்னால் அதற்கு எதிர்மாறான வேலையை செய்யச் சொல்லி இவனது மூளை கட்டளையிடும். விளைவு? வேலைக்கு சேர்ந்த வேகத்தோடு வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். வேலையில்லாமல் இவன் திரும்பி வருவது ஒன்றும் புதிதல்ல.
தவிர அவனது கூட்டாளிகள் எல்லோரும் பிக்பாக்கெட் மன்னர்கள். அவர்களோடு சுத்துவது தான் இவனது பொழுது போக்கே. வேலைக்கு செல்லாத நாட்களில் நண்பர்களோடு எங்கு போவான் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். அவனை வேலைக்கு சேர்ப்பதற்கும் கடைக்காரர்கள் தயங்கினார்கள். அதனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காய்கறி நறுக்கி கொண்டிருந்தவள் கண்களில் அந்த பேப்பர் விளம்பரம் பட்டது. அதில் பேங்க் செக்யூரிட்டிக்கு ஆள் தேவை என்று இருந்தது. அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு நாகேந்திரனிடம் சென்று பேசினாள்,
‘பேங்க் வேலைக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் வந்திருக்கு. அதனால உடனே பேங்குக்கு போயி அந்த வேலை சம்பந்தமாக விசாரிச்சிட்டு வாங்க’ பேப்பர் கட்டிங்கை எடுத்துக் கொண்டு பேங்கிற்கு கிளம்பினான் நாகேந்திரன். மேனேஜரை சந்தித்து பேசினான்.
மேனேஜர் சொன்னார், ‘ஆள் பார்க்க வாட்டசாட்டமா தான் இருக்கே. எங்க பேங்க் செக்யூரிட்டி வேலைக்கு உன்ன மாதிரியான ஆளு தான் தேவை. உன்ன நாங்க வேலைக்கு சேர்த்துக்கிறோம். இந்த ஃபார்மை ஃபில்லப் பண்ணி கொடு’
விண்ணப்பத்தை வாங்கியவன் வங்கி மேனேஜரிடம் சொன்னான், ‘சார் எனக்கு சரியா எழுத வராது. தப்பு தப்பா எழுதுவேன். அதனால நீங்க கேள்வி கேட்டுகிட்டே வாங்க . நான் பதில் சொல்றேன். நீங்களே அந்த பதிலை விண்ணப்பத்துல எழுதுங்க’
சரி என தலையசைத்து ஒவ்வொரு கேள்வியாக கேட்க ஆரம்பித்தார் மேனேஜர். ஒவ்வொரு கேள்விக்கான பதில் அளித்து கொண்டு வந்தவனின் காதுகளில் மேனேஜர் கேட்ட அந்த கேள்வி பட்டது. ‘நீங்கள் இதற்கு முன் சிறை சென்ற அனுபவம் உண்டா?’ ‘இல்லை’ என பதில் சொன்னான். மேனேஜர் எழுதினார். ‘என்ன காரணம்?’ என அடுத்த கேள்வி கேட்டார். மிகுந்த சந்தோஷத்தோடு உற்சாகமாய் பதில் சொன்னான், ‘காரணம் என்னன்னா… போலீசால ஒரு தடவை கூட என்னைப் பிடிக்க முடியலை’
முயலுங்கள்! முன்னேறுவீர்கள்!

வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். வெற்றி பெற வில்லும், அம்பும், வாளும், கேடயமும் தேவையில்லை. நம்பிக்கையும் மனத்திண்மையும் விடாமுயற்சியும் அடக்கமுமே அவசியம். இலட்சிய வெறிகொண்டு விடாமுயற்சியுடன் அணையா ஆர்வத்துடன் செயலாற்றியவர்களே வெற்றிச் சிகரத்தை முத்தமிட்டு இருக்கிறார்கள் என்பது உலக வரலாறு.
ஒரு செயலைத் தொடங்கினால் அதே சிந்தனையுடன் செயலாற்ற வேண்டும். துணி தைக்கும் ஊசி துணியை ஊடுருவிச் செல்வது போல் தடைகளை தகர்த்துக் கொண்டு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும். ஆழமாக சிந்திக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி மகுடம் சிரசை அலங்கரிக்கும்.
இடையறாத முயற்சிகளால்தான் டென்சிங்கும், ஹிலாரியும் எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதிக்க முடிந்தது. எண்ணிலா தோல்விகளையே சுவைத்த ஆபிரகாம் லிங்கனால் இறுதியில் வெற்றி பெற முடிந்தது அவரது முயற்சியால் தான். தொடர் தோல்விகளை சந்தித்த பிறகு தான் கியூரி அம்மையாரால் ரேடியம் கண்டு பிடிக்கப்பட்டது. எடுத்த எடுப்பில் எதையும் எடிசன் கண்டு பிடிக்கவில்லை. எண்ணற்ற தோல்விகள் துரத்தியபோதும். விடாமுயற்சியால் சாதனை நாயகனாக சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளார். தோல்விகளுக்கு இடையே தான் உலகம் முன்னேறி வந்திருக்கிறது.
சாமானிய மக்கள் எடுத்த முயற்சியில் “தோல்விகள்” என்று முடிவு செய்யும்போது சாதனையாளர்கள் அவற்றை “முயற்சிகள்” என்று கருதுகின்றனர். விடாமுயற்சியால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. தவறுகள் செய்யாமல் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. எடுத்த இலட்சியத்தை எட்டிப் பிடிக்க அதற்கான வழிமுறைகளை உணர்ந்து இடைவிடா முயற்சி, கடுமையான உழைப்பு ஆகியவற்றை ஆயுதங்களாகக் கொண்டு செயலில் இறங்க வேண்டும். இந்தியாவின் மீது 17 முறை படை எடுத்து தோல்வியுற்று பதினெட்டாவது முறை வெற்றி பெற்றாரே கஜினி முகமது. அவரது வெற்றிக்கு காரணம் விடா முயற்சியே.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்பதோடு நில்லாமல் வாழும் காலத்தில் தான் சார்ந்து வாழும் சமுதாயத்திற்கு என்ன செய்வோம் என்பதை இலக்காகக் கொண்டு முயலுங்கள்! முன்னேறுங்கள்!