ஒரு பேராசிரியர் தன்னுடைய வகுப்பில் ஒரு கதையை விவரித்துக் கூறிக்கொண்டு இருந்தார். நடுக்கடலில், ஒரு பெரிய கப்பலில் விபத்து நேரிட்டது. கப்பலில் பயணம் செய்த பயணிகளை கப்பலை விட்டு வெளியேற்றும்படி கேப்டன் உத்தரவிட்டார்.
வரிசையாக அனைவரும் நின்று, உயிர் காப்புப் படகில் ஏறிக்கொண்டு இருந்தனர். அந்தக் கப்பலில் ஒரு இளஞ்ஜோடி இருந்தனர். இந்த இளம் ஜோடி படகில் ஏறும் தருணத்தில் ஒருவருக்கு மட்டும்தான் படகில் இடம் இருந்தது. அந்த சமயத்தில் அந்த மனிதன் தன்னுடைய மனைவியை வரிசையை விட்டு நீக்கி விட்டு, அவன் முன்னால் வந்து படகில் குதித்தான். மூழ்கிக்கொண்டு இருக்கும் கப்பலில் நின்று கொண்டு இருந்த அந்த பெண்மணி தன்னை விட்டுச் சென்றுகொண்டு இருக்கும் கணவனைப் பார்த்து உரத்த குரலில் ஒரு வாக்கியத்தைக் கூறினாள். “நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், அந்தப் பெண் தன் கணவனிடம் என்ன கூறியிருப்பாள்?”
மாணவர்களில் பெரும்பாலானோர், “அந்தப் பெண் – நான் உன்னை வெறுக்கிறேன்!“ சில மாணவர்கள் கூறினார்கள் – “நீ செய்து கொண்டு இருக்கும் செயல் சரியானது அல்ல“ சில மாணவர்கள் கூறினார்கள் – நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். கிட்டத்தட்ட அனைத்து பதில்களும் இந்த மாதிரியாகத்தான் இருந்தன. அந்த பேராசிரியரின் கவனம் ஒரு மாணவன் மீது விழுந்தது. அவன் மிகவும் அமைதியாக இருந்தான். இதுவரை அவன் எந்த பதிலும் கொடுக்கவில்லை. பேராசிரியர் நம்பிக்கை நிறைந்த பார்வையோடு அவனிடம் கேட்டார், “நீ எனக்கு பதில் கூறு. நீ என்ன நினைக்கிறாய், அந்த மனைவி அவள் கணவனிடம் என்ன கூறியிருப்பாள்?” அந்த பையன் கூறினான் “நான் நினைக்கிறேன், அந்தப் பெண் கண்டிப்பாக, நமது குழந்தையை கவனித்துக் கொள்ளுங்கள்! என்று கூறியிருப்பாள்.” அந்தப் பேராசிரியர் வியப்படைந்தார், அவர் அந்த மாணவனிடம் “நீ இந்தக் கதையை முன்பே கேட்டு இருக்கிறாயா?”
அந்தப் பையன் “இல்லை, ஆனால் என் அம்மா சுகவீனத்தால் இறக்கும் தருவாயில் என் அப்பாவிடம் கூறியவைதான் இவை” என்றான். பேராசிரியர் “உன்னுடைய பதில் மிகவும் சரியானது!” என்றார். பேராசிரியர் கதையைத் தொடர்ந்தார். அந்தக் கப்பல் மூழ்கி விட்டது, அந்தப் பெண் இறந்து விட்டாள். கணவர் கடற்கரையை அடைந்து விட்டார். அந்த கப்பல் மூழ்கும்போது அந்தக் குழந்தை தன் பாட்டியுடன் இருந்தது. தன் வாழ்க்கையின் மீதி நாட்களை தன் ஒரே மகளை வளர்ப்பதில் செலவிட்டார். அந்த மனிதர் இறந்து பல ஆண்டுகள் சென்ற பிறகு, ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கும்போது, அவரது மகள் அவளது அப்பாவின் டைரி ஒன்றைக் கண்டாள்.
அந்த டைரியில் இருந்து அவள் தெரிந்து கொண்டாள். அவளது பெற்றோர்கள், கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த அந்த சமயத்திலேயே அவளது அம்மா தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த நிலைமையில், மிக மோசமான நோயால், அவதிப்பட்டுக்கொண்டு இருந்தாள். இன்னும் சில நாட்களே அவள் உயிர் வாழ்வதற்கான காலமாக இருந்தது. அப்படிப்பட்ட இக்கட்டான சமயத்தில் அவளது அப்பா ஒரு கடினமான முடிவை எடுத்து அந்த வாழ்க்கைப் படகில் குதித்தார்.
அவளது அப்பா டைரியில் எழுதி வைத்து இருந்தார் “நீ இல்லாமல் என் வாழ்க்கையில் எந்தவித அர்த்தமுமே இல்லை, நானும் உன்னோடு சேர்ந்து சமுத்திரத்தில் மூழ்கிவிடலாம் என்றே நான் விரும்பினேன். ஆனால் அப்போது நமது அருமைக் குழந்தையைப் பற்றிய எண்ணம் எனக்கு வந்தது. எனவே, உன்னைத் தனியாக விட்டுவிட்டு நான் படகில் குதித்துவிட்டேன்”. அந்தப் பேராசிரியர் கதையை முடித்த போது, அந்த வகுப்பு முழுவதுமே அமைதியில் மூழ்கியது.
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் எடுக்கும் முடிவுகள் காரண காரியமாக அல்லது சூழ்நிலை காரியமாக இருக்கக்கூடும் அந்த முடிவுக்கு சங்கதிகளை பற்றி தெரியாமல் தனிநபர்களின் நடவடிக்கைகளை விமர்சித்துக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு சம்பவம் நடக்கும் சூழ்நிலையின் ஆழத்தைப் பற்றி அறியாமல், மேலோட்டமாக மட்டும் பார்க்கும்போது, அதை நாம் தெள்ளத் தெளிவாக உறுதி செய்ய முடியாது.