Advertisement

இயற்கை அழகுள்ள குட்டி இளவரசி எனப்படும் சிறுமலைக்கு படையெடுக்கும் சுற்றுலாவாசிகள்

அமைவிடம்

வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறுமலை கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் இறுதியில் 60,000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அரிய அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் களஞ்சியமாக உள்ள சிறுமலைத்தொடர்கள் வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் அரை பசுமையான காடுகளின் வெப்பமண்டல கலவையைக் கொண்டுள்ளன. 20 – 30,000 ஏக்கர் பரப்பளவில் காப்புக்காடுகளால் சூழப்பட்டுள்ள சிறுமலையில் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழைக்காலத்தில் சராசரியாக 120-132 செ.மீ மழை பெய்யும். குளிர் அதிகமாக இல்லாமலும் வெயிலும் அதிகமாக இல்லாமலும் மிதமான தட்பவெப்ப நிலையில் சிறுமலை பகுதியில் இருந்து வருகின்றன.

புள்ளிமான், குரைக்கும் மான், எலி மான் போன்ற மான் வகைகள் இங்கு காணப்படுகின்றன. காட்டுப்பன்றி, சோம்பல் கரடி, குள்ளநரி, மெல்லிய லோரிஸ் மற்றும் சிறுத்தை போன்ற காட்டு விலங்குகளும் வசிக்கின்றன. ஆண்டுமுழுவதும் நடுத்தரமான சூழலில் இருக்கக் கூடிய சிறுமலை காடுகளில் விதவிதமான செடிகளும் விலங்குகளும் வாழ்கின்றன.

வழித்தடம்

திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் மதுரையிலிருந்.து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 7 கி.மீ. சென்று வலதுபுறம் செல்லவேண்டும். மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியை கடந்து 18 கொண்டை ஊசி வளைவுகளில் பயணித்து சிறுமலை கிராமத்தை அடையலாம்.   நான்கு  கொண்டை ஊசி  வளைவுகளைக் கடந்ததும் மிதமான வெப்ப நிலையை உணர இயலும். சிறுமலை செல்லும் பாதையில் உள்ள இரண்டு பக்கங்களிலும் மனிதநடமாட்டமின்றி பசுமையாக கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து தென்மலைக்கு செல்லும் பேருந்துகளில் பயணிக்கலாம். சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது வழிநெடுக இயற்கை அழகை முழுமையாக ரசிக்க இயலும். வழியில் பலா, வாழைத் தோட்டங்களையும் காய்கறித் தோட்டங்களையும் பார்க்கலாம்.

மக்கள்

தமிழ் இலக்கியங்களிலும் மன்னர்களின் வரலாறுகளிலும் சிறுமலை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. “வாழையும் கமுகும் தாழ்தலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிதென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்” என்று சிலப்பதிகாரத்தில் சிறுமலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சஞ்சீவினி மூலிகையைத் தேடிக்கொண்டு வந்த அனுமன் அந்த மூலிகை எது என்பதை கண்டுப்பிடிக்க முடியாததால் மொத்த மலையையும் கையில் கொண்டு செல்லும் போது சிந்திய சிறு மண்ணே பிறகு சிறுமலை என உருவாகியது என அங்குள்ள மக்களால் கூறப்படுகிறது.

சிறுமலை ஊராட்சியில் தென்மலை, அகஸ்தியர்புரம், கடமான்குளம், தாழக்கடை, தவிட்டுக்கடை, வேளாண் பண்ணை, சிறுமலை புதூர், சிறுமலை பழையூர், அண்ணாநகர் ஆகிய சிற்றூர்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,831 மக்கள் வசிக்கிறார்கள். இயற்கை தாதுக்கள் அதிகம் கொண்ட சிறுமலை மலை வாழை என்று அழைக்கப்படும் வாழை வகை மலை உச்சியில் பயிரிடப்படுகிறது. சிறுமலையில் கொய்யா, மா எலுமிச்சை மற்றும் பலா பழங்கள் அதிகம் விளைவதோடு பல்வேறு வகையான மூலிகைகளும் கிடைக்கிறது. இங்கு தோட்டக்கலைத் துறையின் பண்ணையும் உள்ளது. சிறுமலையில் காய்கறிகள், மிளகு, ஏலம் போன்ற பணப்பயிர்களும் விளைகின்றன.

உயர் கோபுரம்

சிறுமலையின் 17வது கொண்டைஊசி வளைவில் ஒரு கண்காணிப்பு கோபுரம் உள்ளது. அங்கிருந்து கீழே திண்டுக்கல் நகரப்பகுதி முதல் சிறுமலையின் பிற மலைப் பகுதிகள் வரை தெரியும் அற்புதமான இயற்கை காட்சிகளைக் கண்டுகளிக்கலாம்.

வெள்ளிமலை

அகஸ்தியர் புரத்தில் உள்ள வெள்ளிமலை  சிறுமலையிலேயே மிக உயர்ந்த மலை. அகத்தியர் மலையில் உள்ள ஒரு சிறு பாறைகுன்றில் சித்தர்களில் மிக பிரசித்தி பெற்றவரான அகத்தியர் வந்து தங்கி இருந்து தவம் செய்ததாக கருதப்படுதால் இப்பகுதி அகஸ்தியர்புரம் என அழைக்கப்படுகிறது. மருத்துவ தாவரங்களும், மூலிகைச் செடிகளும் இங்கு அதிகம் காணப்படுகிறது. இம்மலையின் உச்சி முழுவதும் வெள்ளியாக இருந்தது. கலியுகத்தில் மக்களால் இது திருடப்பட்டுவிடும் என்பதால் அகஸ்தியர் இதனை பாறைக் கல்லாகி மாற்றி விட்டதாகக் கூறுகின்றனர். இம்மலையின் உச்சியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கத்தைக் காண 30-45 நிமிடங்கள் நடந்துசென்று இவ்வுச்சியை அடையலாம்.

சிறுமலை நீர்த்தேக்கம்

அடர்ந்துயர்ந்த மரங்களுக்கிடையே 2010 -ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறு நீர்த்தேக்கமாகும். இதில் வார இறுதியில் போதுமான நீர் இருந்தால் மட்டும் படகு சவாரி   அனுமதிக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்கள் உருவாக்கிய தெப்பமும் இங்குள்ளது.

கோவில்கள்

மலையைச் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் வழிபடக்கூடிய வெள்ளிமலை முருகன் கோவில் சமவெளியிலிருந்து 45 நிமிடங்கள் நடந்து செல்லும் தூரத்தில் மலையில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் சரிவான பகுதியில் அன்னை வேளாங்கன்னி தேவாலயம் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. செப்டம்பர் மாதம் ஆரோக்கி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெறும். நீள் வட்ட வடிவில் சின்னமலைக்கும் திண்டுக்கல்லுக்கும் நடுவில் இயற்கை எழில்மிகு பார்வையில் செல்வி கோவில் அமைந்துள்ளது.

சாதியாறு

சிறுமலையிலிருந்து புறப்படும் இந்நதி தென்புறமாக ஓடி வைகையில் கலக்கிறது. இக்கழிமுகப் பகுதி 819 சதுர கி.மீ. (316 ச.மைல்). நீர் பாய்ச்சல் பரப்பு 4279.89 ஹெக்டேர் (10575.8 ஏக்கர்). வாடிப்பட்டி அருகில் இவ்வாற்றின் குறுக்கே சாதியாறு அணை விவசாய பாசனத்துக்காக கட்டப்பட்டுள்ளது.

கான்டிஜ் எஸ்டேட்

சிறுமலையில் 1000 ஏக்கர்களைக் கொண்டு அமைந்துள்ள கான்டிஜ் எஸ்டேட்டில் 3 ஆறுகளும் 2 நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. மருத்துவத் தாவரங்களை உள்ளடக்கிய இயற்கை வளமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் நிர்வாகத்தின் அனுமதியை பெற்று சுற்றியும் பார்க்கலாம்

எதிர்பார்ப்பு

இயற்கை சூழ்ந்த சிறுமலை  வனப்பகுதிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் குளிர்ந்த தட்பவெட்பத்தை எதிர்பார்த்து சிறுமலைக்கு செல்லக்கூடாது. இங்கு மிதமான வெப்பமே எல்லா காலங்களிலும் நிலவுகிறது. இயற்கை அழகையும் அமைதியும் இங்கு ரசிக்கலாம். இங்கு செல்வதற்கு ஏற்படும் பயண செலவு குறைவாக உள்ளது என்பதோடு இங்கு உள்ள தங்கும் விடுதிகளில் தங்குவதற்கும் குறைவான செலவை ஏற்படுகிறது. சிறுமலை பழையூர், புதூரில் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளும் உள்ளன.

கொடைக்கானல் மன்னவனூர் போல் சிறுமலையிலும் சுற்றுச்சூழல் பூங்கா, சிறுவர்கள் பூங்கா, தங்கும் விடுதிகள் போன்றவற்றை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதும் படகு குழாம், மலையேற்றம் (டிரெக்கிங்), பறவைகளைப் பார்த்தல் (பேர்ட் வாட்சிங்), மலைக் கிராம மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு தகுந்த ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வீடு வாங்க போனா எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க! கட்டாத வீட்டுக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம்! https://theconsumerpark.com/house-booking-cacellation-unfair-trade-practice

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles