தண்ணீரைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்குத் தனியாக பணம் செலுத்த வேண்டும்
ஒரு பெருமைமிக்க வழக்கறிஞர் தனது கிணற்றை ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு விற்றார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, வழக்கறிஞர் ஆசிரியரிடம் வந்து, “ஐயா, நான் உங்களுக்கு கிணற்றை விற்றுவிட்டேன், ஆனால் அதில் உள்ள தண்ணீரை அல்ல. நீங்கள் தண்ணீரைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்குத் தனியாக பணம் செலுத்த வேண்டும்” என்றார்.
ஆசிரியர் புன்னகையுடன், “ஆம், நானும் உங்களிடம் வரப் போகிறேன். என் கிணற்றிலிருந்து உங்கள் தண்ணீரை வெளியேற்றச் சொல்லப் போகிறேன், இல்லையெனில் நாளை முதல் நீங்கள் கிணற்றில் தண்ணீரை சேமித்து வைப்பதற்கு பணம் செலுத்த வேண்டும்” என்றார்.
இதைக் கேட்டதும், வழக்கறிஞர் பயந்து, “ஓ, நான் விளையாடினேன்!” என்றார். ஆசிரியர் சிரித்துக்கொண்டே, “மகனே, நான் உன்னைப் போன்ற பல குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களை வழக்கறிஞர்களாக்கியுள்ளேன்!” என்றார்.
பணக்காரன் ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது
பில்கேட்ஸ் கம்பிப்யூட்டர் உலகின் ஜாம்பவான் உலகின் முதல் பணக்காரனாக இருந்தபோது ஒரு தடவை இந்தியா வந்திருந்தார். பில்கேட்ஸ்சை பார்த்து ஒருவர் கேட்டார்.உங்களை விட பணக்காரர் வேறு யாராவது இருக்கிறாரா?
பில்கேட்ஸ்: ஆம் ஒருவர் இருக்கிறார்..
யார் அவர்?
பில்கேட்ஸ்: பல வருடங்களுக்கு முன் நான் வேலையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணப்பட்டேன். நியூயோர்க் விமான நிலையம் சென்றேன். நாளிதழ்களின் தலைப்புகளை படித்துக்கொண்டு இருந்தேன். நாளிதழ் ஒன்றை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை எனவே அதை விடுத்தேன் அப்போது ஒரு கறுப்பினச் சிறுவன் என்னை அழைத்து அந்த நாளிதழ் பிரதி ஒன்றை கொடுத்தான். என்னிடம் சில்லறை இல்லை என கூறினேன். அதற்கு அந்த சிறுவன். பரவாயில்லை இலவசமாக கொடுக்கிறேன் என்றான்.
மூன்று மாதம் கழித்து நான் அங்கு சென்றேன். மறுபடியும் அதே கதைதான் நடந்தது. நாளிதளை இலவசமாக கொடுத்தான். ஆனால் நான் வாங்க மறுத்துவிட்டேன். அதற்கு அந்த சிறுவன். பரவாயில்லை வாங்குங்கள். இன்று எனக்கு கிடைத்த லாபத்தில் இருந்து தருகிறேன் என்று சொல்லி கொடுத்தான்.
19வருடங்கள் கழிந்தன நான் பணக்காரன் ஆகிவிட்டேன். அந்த சிறுவனை மறுபடியும் காணும் ஆவல் எனக்கு மேலோங்கியது. ஒன்றரை மாதம் தேடுதலுக்கு பின் அவனை கண்டுபிடித்துவிட்டேன். நான் கேட்டேன் என்னை தெரிகிறதா என்று? ஆம் தெரிகிறது… நீங்கள் புகழ்வாய்ந்த பில்கேட்ஸ். பல வருடங்களுக்கு முன் இரண்டு முறை எனக்கு இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய், தற்போது நீ என்னவெல்லாம் விரும்புகிறாயோ அதை எல்லாம் உனக்கு கைமாறாக தர விரும்புகிறேன் என்றேன்..
உங்களால் அதற்கெல்லாம் ஈடுசெய்ய முடியாதே என அந்த கறுப்பு இன இளைஞன் கூறினான். ஏன் என்றேன்? நான். அதற்கு அந்த கறுப்பின இளைஞன், நான் ஏழையாக இருந்தபோது கொடுத்தேன் ஆனால் நீங்கள் பணக்காரன் ஆன பின்பே எனக்கு கொடுக்க வருகிறீர்கள். ஆகவே நீங்கள் எவ்வாறு அதை சரிக்கட்ட முடியும் என்றான். அன்றே உணர்ந்தேன் என்னை விட பணக்காரன் அந்த கறுப்பின இளைஞனே என்பதை. கொடுப்பதற்கு நீ பணக்காரனாகவோ, இல்லை பணக்காரன் ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது.
உதவுவதற்கு ஏழையாகவோ பணக்காரனாகவே நல்லநேரம் பார்த்தோ உதவவேண்டும் என்பது கிடையாது.
அவர் எதிர்பார்த்ததை விட பாலும் நிறையவே கிடைத்தது. ஆனால்…
அவன் மோசம், இவன் ஒண்ணுக்கும் ஆக மாட்டான், மகா மட்டமான ஆள, பலவாறாகப் பிறரை மதிப்பீடு செய்து கொண்டே நாட்களை நகர்த்துவதே பலரது வாடிக்கை. ஒருவரைப் பற்றி ஒரு விரல் நீட்டி விமர்சிக்கும் போது மூன்று விரல்கள் விமர்சிப்பவரின் நெஞ்சுக்கு நேரே சுட்டுவது பல பேருக்கு புரிவதில்லை
நண்பர் ஒருவர் நாட்டுப் பசு மாடு வாங்க வேண்டும் என நினைத்தார். பசுவைப் பற்றி முழுவதும் அறிந்த ஒருவரை தேடிப்பிடித்து, பசு வாங்குவதற்கான நல்ல நாள், நேரம், சகுனம் எல்லாம் பார்த்து, மாட்டினுடைய நிறம், அதனுடைய சுழி, அதனுடைய கொம்பு அமைப்பு என எல்லாவற்றையும் கவனித்து கடைசியில் பசுவும் வாங்கினார்.
அவர் எதிர்பார்த்ததை விட பாலும் நிறையவே கிடைத்தது. ஆனால், கறந்த பால் கெட்டுப் போனது. காரணம் புரியாது கலங்கினார். எல்லா விபரங்களையும் அலசிப் பார்த்த அவர் பாலை வைத்த பாத்திரத்தில் அழுக்கு இருந்ததை கவனிக்காமல் விட்டுவிட்டார். எனவே, பால் கெட்டு விட்டது.
மழைநீர் ஆகாயத்திலிருந்து வரும் போது நல்ல நீராகவே வரும். நிலத்தில் அந்த நீர் விழுந்த பின்பு அந்த நிலத்தினுடைய தன்மைக்கேற்ப அதனுடைய நிறம், இயல்பு, ருசி மாறுகிறது. அப்படித்தான் காற்றும் நல்ல மலர்களும் மூலிகைகளும் நிறைந்த சோலைகள், தோட்டங்கள், காடுகள், மலைச்சரிவுகள் வழியே வரும் காற்று அங்குள்ள நறுமணங்களையும் சுமந்து வரும். சாக்கடை, கழிவுப் பொருட்கள், தொழிற்சாலைப் புகை மண்டலங்கள், தூசுகள் இப்படிப்பட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய காற்று துர்நாற்றங்களில் புகுந்து அவைகளை சுமந்து வருவதால் அந்தத் துர்நாற்றம் நம்மை கிறங்கடித்து விடுகிறது.
அப்படித்தான் நமக்குள் ஆசை, அவலம், கோபம், பாவம், வஞ்சகம், பொறாமை போன்ற உள் மனஅழுக்குகள் இருந்தால் நமது எண்ணங்களும் அசுத்தமாகத்தான் இருக்கும். எனவே, முதலில் நமது மன அழுக்குகளை நீக்கினால் நமது எண்ணங்கள் தூய்மையாகும். எண்ணங்கள் தூய்மையானால் மனமும் தூய்மையாகும். மனம் தூய்மையானால் நாமும் நல்லவர்களாக ஒளிர்வோம்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: சிரிக்க உதவும் சங்கதிகளில் சிந்திக்க உதவும் சங்கதிகளும் உள்ளன.