மதுரைக்கு அருகில் வாழ்ந்து வந்த வலிமை மிக்க ஒரு அரசரை அங்குள்ள மக்கள் மிகவும் அதிகமாக நேசித்தனர். அரசரின் மகன் தனது அப்பா போலவே, சிறந்த பெயர் வாங்க விரும்பினான். ஆனால் இளவரசன் நிறைய தவறுகள் செய்தான். அந்த மாகாண அமைச்சர் மிகவும் புத்திசாலியாக இருந்தார். அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தார்கள். இளவரசர் அமைச்சரிடம், “நான் அடிக்கடி வருத்தம் கொள்கிறேன். என் மனதை ஒழுங்கு செய்ய விருப்பம் கொள்கிறேன். தாங்கள் எனக்குக் கற்றுக் கொடுப்பீர்களா?” என்று கேட்டான்.
அமைச்சர், “அதற்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டி இருக்கும்; உங்களால் இயலுமா?“ என்றார். இளவரசர் பெருமையோடு, “அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. நான் இந்த ராஜ்ஜியத்தின் இளவரசன். பணத்துக்குப் பஞ்சம் கிடையாது“ என்றான். அமைச்சர், “நான் உங்களை சில வேலைகளை செய்யச் சொல்வேன். அந்த வேலைகளை எந்தவிதமான கேள்விகளுக்கும் இடமின்றி நீங்கள் செய்து முடித்திட வேண்டும்” என்றார். இளவரசன், “நீங்கள் கூறுவது போல செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்றான்.
அமைச்சர், “நீங்கள் மார்க்கெட்டுக்கு தனியாகச் சென்று, பழைய இரும்புக் கடைக்குப் போய் கொஞ்சம் இரும்பு வாங்கி வாருங்கள்” என்றார். இளவரசன் தயக்கத்துடன் மார்க்கெட்டைக் கடந்து பழைய இரும்புக் கடையை அடைந்து, வேகமாக இரும்பை வாங்கினான். இரும்பின் மீது தூசி படிந்து இருந்ததால், அவனுடைய ஆடைகளும் அழுக்கடைந்து விட்டன. இளவரசன் மன வருத்தம் அடைந்து தன்னைத் தானே சபித்துக் கொண்டே அமைச்சரை நோக்கிச் சென்றான்.
அமைச்சர், “இப்போது நகரத்தின் மறுபக்கம், ஒரு கரி உலை ஒன்று இருக்கிறது. இந்த இரும்பினை, அங்கே கொண்டு சென்று உருக்கி புதியதாக ஒரு பாத்திரம் செய்து வாருங்கள்” என்றார். இளவரசன் உலைக் களத்தை அடைந்து உபகரணங்களை தயார் செய்ய ஆரம்பித்தான். இளவரசன் மகிழ்ச்சியுடன் அமைச்சரிடம் சென்று பாத்திரங்களைக் காண்பித்தான்.
பாத்திரத்தைப் பார்த்த அமைச்சர், “இளவரசே, இப்போது நீங்கள் உணர்கின்ற நிலையில் இருக்கின்றீர்கள். இந்தப் பாத்திரம் உங்களது அகங்காரம். ஓ.கே! இப்போது நீங்கள் செய்ய வேண்டிய இறுதியான செயல் இதோ. அதன் பிறகு நான் அந்த ரகசியத்தை உங்களுக்கு சொல்வேன்” என்றார். அமைச்சர், “நீங்கள் மார்க்கெட்டுக்குப் போய் அங்கே இருக்கின்ற மக்களிடம் கேளுங்கள், நீங்கள் சிறிது நேரத்திற்கு முன்பு இங்கே என்னைப் பார்த்தீர்களா? என்னைப் பார்த்த போது என்ன நினைத்தீர்கள்?“ என கேட்கச் சொன்னார்.
இளவரசனும் மார்க்கெட்டில் உள்ள முதல் கடைக்காரரிடம், “நான் இந்த வழியாக காலையில் சென்றேன். நீங்கள் என்னைப் பார்த்தீர்களா?” என்று கேட்டான். கடைக்காரர், “எனக்கு நேரம் இல்லை. காலை நேரம் சுறுசுறுப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களும் இருப்பார்கள். நான் உங்களைக் கவனிக்கவில்லை” என்றார். இதே போல மற்றவர்களைக் கேட்ட போதும், ஒருவரும் இளவரசனை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தவில்லை என்பதை உணர்ந்தான்.
அமைச்சரிடம் சென்று முழுக்கதையையும் விவரித்தான். அமைச்சர், “யாரும், நம்மை நெருக்கமாகப் பார்ப்பது இல்லை. நம்முடைய குறைபாடுகளை, தவறுகளை நாம் பார்ப்பது போல மற்றவர்கள் பார்ப்பது இல்லை. நாம்தான், நமக்கான விமர்சகர்கள். நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்று நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இதனை முதலில் கைவிடுங்கள். ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள்” என்றார் அமைச்சர்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: பிறர் பார்வைக்கு பிழையாய் இருப்பது கண்டு வருத்தம் வேண்டாம். மற்றவர்கள் பிழையாய் கருதுவதை எல்லாம் திருத்தம் செய்ய நாம் பிறக்கவில்லை. ஒப்பிடுதலும் மதிப்பிடுதலுமே அவரவர் வாழ்வை சீர்குலைத்து விடுகின்றன. அதனால் உங்களை வைத்து பிறரையும் பிறரை வைத்து உங்களையும் ஒப்பிடுவதையும் மதிப்பிடுவதையும் இப்போதே நிறுத்தி விடுங்கள்.