Advertisement

வழக்கறிஞர் தொழிலில்   அனுபவம் இல்லாதவர்களை நீதிபதிகளாக (மேஜிஸ்ட்ரேட்/முன்சீப்) பதவிகளில் நியமித்து வருவது சரியா?

நீதித்துறையில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் முன்சீப் கோர்ட்டுகளும் கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் மேஜிஸ்ட்ரேட்   கோர்ட்டுகளும் கீழமை நீதிமன்றங்களாக (subordinate courts) உள்ளன. மேஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் பதவி வகிப்பவர்கள் இளநிலை நீதிபதிகள் (Junior division judges) என அழைக்கப்படுகிறார்கள். முன்பெல்லாம் குறைந்தது மூன்றாண்டு காலம் வழக்கறிஞர்களாக பணியாற்றியவர்களே இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க இயலும் என்ற நிலை இருந்தது. 

கடந்த 1996 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கே ஜெகநாத ஷெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் இளநிலை நீதிபதிகளாக பதவி ஏற்க மூன்றாண்டு காலம் வழக்கறிஞர் தொழிலில் அனுபவம் வேண்டும் என தெரிவித்தது. இந்நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டில் அகில இந்திய நீதிபதிகள் சங்கம் தாக்கல் செய்திருந்த வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இளநிலை நீதிபதிகளாக தேர்வு செய்ய மூன்றாண்டு கால வழக்கறிஞர் தொழில் அனுபவம் தேவையில்லை என்று தெரிவித்து புதிதாக சட்ட பட்டம் பெற்றவர்களையும் இளநிலை நீதிபதிகளாக தேர்வு செய்ய அனுமதி வழங்கியது. இந்தத் தீர்ப்பின் காரணமாக கடந்த 2001 முதல் நாடு முழுவதும் வழக்கறிஞர் தொழிலில் எவ்வித அனுபவமும் இல்லாத   சட்ட பட்டம் பெற்றவர்கள் பலர் இளநிலை நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டு நீதித்துறை பணியில் இணைந்துள்ளார்கள்.

அகில இந்திய பார் கவுன்சில் தரப்பில் குறைந்தது மூன்றாண்டு காலம் வழக்கறிஞர்களாக பணியாற்றியவர்களே இளநிலை நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பலமுறை உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தி வந்தது. இதைப்போலவே தமிழகத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பும் (Federation) தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு குழுவும் JAAC) குறைந்தது மூன்றாண்டு கால வழக்கறிஞர் அனுபவம் படைத்தவர்களையே இளநிலை நீதிபதிகளாக தேர்வு செய்ய வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக கோரி வந்துள்ளது.

அரசியலமைப்பில் அனைவரும் சட்டத்தின் முன்பு சமம் என கூறப்பட்டுள்ள கோட்பாட்டிற்கு ஏற்ப சட்ட பட்டத்தை (LL.B., graduate) படித்த அனைவரும் இளநிலை நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் தொழிலில் அனுபவம் இல்லாதவர்களுக்கு நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் பயிற்சி வழங்கினால் போதுமானது என்றும் ஒரு சாரார் கருத்து தெரிவித்து வந்தனர்.  சட்ட பட்டம் மட்டும் நீதிபதியாக பணியாற்றுவதற்கு போதுமானது அல்ல என்றும் வழக்கறிஞராக தொழில் புரிந்து அனுபவம் பெற்றவர்களால்தான் நீதிமன்ற நடைமுறைகளை தெரிந்து கொண்டு தகுந்த நீதியை வழங்கும் திறமையை (skill for justice delivery) பெற இயலும் என்றும் அனுபவம் இல்லாதவர்களை நீதிபதிகளாக நியமிப்பதன் மூலம் சரியான நீதி கிடைப்பதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்றும் பெரும்பாலான வழக்கறிஞர்கள் சங்கங்கள் வாதிட்டு வந்தன.

சட்டத்தின் முன்பு வேறுபாடு காட்டக் கூடாது என்றால் வழக்கறிஞர் தொழிலில் எவ்வித அனுபவமும் இல்லாத சட்ட பட்டம் பெற்றவர்களை மாவட்ட நீதிபதிகளாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும் ஏன் நியமிப்பது இல்லை? என்ற கேள்வியை வழக்கறிஞர்கள் சங்கங்கள் கேட்டு வந்தன. மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட சட்ட பட்டம் பெற்றுள்ளதுடன் ஏழு ஆண்டுகள் வழக்கறிஞர் தொழிலில் அனுபவம் மிக்கவராகவும் உயர்நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட 10 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2021 ஜூன் மாதத்தில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் இளநிலை நீதிபதிகளுக்கு தேர்வு செய்வதற்கான விதிகளை திருத்தி, இளநிலை நீதிபதிகளாக பணியாற்ற விண்ணப்பம் செய்பவர் குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றிய இருக்க வேண்டும் அல்லது மூன்றாண்டு கால வழக்கறிஞர் தொழில் அனுபவம் இல்லாதவராக இருப்பின் சட்ட பட்டப்படிப்பில் 70 சதவீத மதிப்பெண் பெற்றவராக (தாழ்த்தப்பட்ட/பழங்குடியின பிரிவினராக இருப்பின் 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றவராக) இருக்க வேண்டும் என்ற விதிகளை உருவாக்கியது. 

கடந்த 2001 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தெரிவித்த தீர்ப்புக்கு மாறாக வழக்கறிஞர் தொழில் அனுபவம் வேண்டும் என்ற தகுதியை இளநிலை நீதிபதி தேர்வுக்கு நிபந்தனையாக மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் இயற்றிய விதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் பங்கேற்ற கூட்டத்தில் கேரளாவில் இளநிலை நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட சட்ட பட்டம் பெற்றுள்ளதுடன் குறைந்தது மூன்று ஆண்டு கால வழக்கறிஞர் தொழில் அனுபவம் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் இளநிலை நீதிபதியாக பணியாற்றுவதற்கான விதிமுறைகள் திருத்தப்பட்டு குறைந்தது மூன்று ஆண்டு கால வழக்கறிஞர் தொழில் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே இளநிலை நீதிபதி தேர்வுக்கு தகுதி வாய்ந்தவர் என்ற நிலை ஏற்படும் என்று மூத்த வழக்கறிஞர்கள் பல கருத்து தெரிவித்துள்ளார்கள். 

தமிழகத்தில் இளநிலை நீதிபதியான பணியிடங்கள் பல காலியாக உள்ள நிலையில் அடுத்து வரும் இளநிலை நீதிபதி தேர்வுகளுக்கு உயர் நீதிமன்ற விதிமுறைகள் மாற்றப்பட்டு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்களா? அல்லது சட்ட பட்டம் மட்டும் படித்து எவ்வித வழக்கறிஞர் தொழில் அனுபவம் இல்லாதவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெ.ஜீவகுமார்
வெ.ஜீவகுமார்
வெ.ஜீவகுமார், வழக்கறிஞர்

Related Articles

1 COMMENT

  1. குற்றவாளிகளுக்கு வாதாடும் வழக்கறிஞர் பற்றி உங்கள் கருத்து?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles