Advertisement

அழிகிறதா? அழிக்கப்படுகிறதா? நொய்யல் ஆறு

நாகரிகத்தின் முக்கிய அடையாளமாக உள்ள ஆறுகள் மக்கள் வாழ்வில் மிக முக்கிய பங்களிப்பை பெற்றுள்ளது. மனிதன் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு புலம்பெயரவும், வணிகம் மேற்கொள்ளவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாக ஆறுகளே இருந்தன. தமிழ்நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பல்வேறு முதன்மை ஆறுகளும் அதன் கிளை ஆறுகளும் பரவி இருந்தன. சில ஊற்றுக்களும் இயற்கையாக பிறப்பெடுத்து ஆங்காங்கே ஆறுகளாக உருவெடுத்தன. தற்போது இத்தகைய ஊற்றுகளோ, ஆற்று படுகைகளோ காணப்படுவது குறைந்து கொண்டே வருகின்றது.  இதில் ஒன்றுதான் நொய்யல் ஆறு. 

தொம்பிளிபாளையம்

பல்வேறு சிறு ஓடைகள் ஒன்று சேர்ந்து தொம்பிளிபாளையம் என்ற இடத்தில் நொய்யல் என்ற பெயருடன் கோவை, போரூர், திருப்பூர், கொடுமணல் வழியாக கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் என்ற கிராமத்தில் காவிரி நீருடன் கலக்கிறது. இந்த ஆறு சுமார் 180 கிலோமீட்டர் நீளமும், 30 அடி அகலமும் கொண்டுள்ளது.

சோழர்கள் 

அரசர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த பொழுது ஆறுகளுக்கும் அதில் கட்டப்படும் அணைகளுக்கும் முக்கியத்துவம் தந்தனர். சோழர்கள் நொய்யல் ஆற்றை அடிப்படையாகக் கொண்டு 32 அணைக்கட்டுகளை எழுப்பி உள்ளனர். தற்போது இதில் 23 மட்டுமே செயல்படுகிறது. இவர்கள் காலத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தற்பொழுது 31 மட்டுமே தக்க வைக்கப்பட்டுள்ளது.

மசவொரம்பு

தீத்திப்பள்ளம், சென்னனூர் பள்ளம், ஸ்பிக் பள்ளம், இருட்டு பள்ளம் ஆகிய 34 ஓடைகள் ஏற்கனவே அழிந்த நிலையில் தற்போது மசவொரம்பு என்ற நொய்யலின் துணையாறு அழிவின் விளிம்பில் நிற்கிறது. மசவரம்பு ஆற்றில் மழைக்காலங்களின் பொழுது வரும் தண்ணீர் நொய்யலில் கலக்கின்றது. இந்த ஆறு கால்வாய் நீரினால் மாசடைந்து உள்ளது. இயற்கை ஆர்வலர்கள் பலராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆற்றின் விளிம்பில் கால்வாய் வெட்டி கழிவு நீர்கள் தற்பொழுது சேமிக்கப்படுகின்றது. கழிவு நீர் கலக்க கட்டப்பட்ட கான்கிரீட் கால்வாய் ஆற்றின் விளிம்பில் உள்ளதால் எப்பொழுதும் ஆறு பாதிக்கப்படும் சூழலிலேயே உள்ளது.

அபாயம்

மலைகளில் இருந்து கீழே இறங்கும் நொய்யலாறு சின்னாரும் பெரியாரும் கலக்கும் இடத்தில் தூய்மையாக இருக்கிறது. ஆனால், இரண்டாவது சிறு ஆறுகள் கூடும் இடமான பெரியாரும் காஞ்சிமா நதியும் சேரும் ஆலந்தூர் பேரூராட்சியில் பூவளம் பட்டி என்ற இடத்தில் மொத்த கழிவு நீரும் திடக் குப்பைகளும் ஆற்றில் கொட்டப்படுகிறது. மத்வராயபுரத்தில் ஆற்றின் அருகே ஒரு மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது.  இங்கு ஆற்றின் கரையோரத்தில் ஈமச்சடங்கு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆற்றின் படுகையின் மேல் வளரும் ஆகாய தாமரை செடிகளை சுத்தம் செய்வதும் அவசியமான ஒன்றாக உள்ளது.  இந்த ஆற்றை நம்பி உள்ள அஞ்சூர் கிராமம் முதல் நொய்யல் கிராமம் வரை சுமார் 20,000 ஏக்கர் விவசாயம் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது. 

சாயப்பட்டறைகள்

திருப்பூர் மற்றும் கரூர் போன்ற பகுதியில் உள்ள பனியன் ஆலைகளில் இருந்து வெளிவரும் சாயக் கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுவது அதிகரித்துள்ளது. சில நிறுவனங்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து ஆற்று நீரை பாதுகாக்கின்றனர். எனினும் சில நிறுவனங்கள் அப்படி இல்லை. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரிப்பு ஆலைகள் மூலமே வெளியேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடும் நிலைப்பாட்டை கூறியுள்ளது. எனினும் சாயப்பட்டறைகள் சாய கழிவுகளை ஆற்றில் கலந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அரசாங்கமே முன்வந்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தருவதன் அடிப்படையில் இந்த பிரச்சனை குறைய வாய்ப்புள்ளது. 

பாதுகாப்பு

ஆறுகளை காப்பாற்ற அரசாங்கம் மட்டுமல்ல மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பினை அளிக்க வேண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, குப்பை கிடங்குகளாக குளங்களும் ஆறுகளும் மாறுவதை தடுப்பது, கழிவுநீர் தொழிற்சாலை அமைப்பது, உபரி நீர் மாசுபாட்டை குறைப்பது, இயற்கையாக நீர் மேற்பரப்பில் உருவாகும் ஆகாயத்தாமரை போன்றவற்றை கட்டுப்படுத்துவது  உள்ளிட்ட பணிகள் உடனடி தேவையாக உள்ளன. இல்லை எனில் இந்த தலைமுறையினர் அனுபவிக்கும் நீர் ஆதாரங்களை அடுத்த சந்ததியினர் அறிவது அபூர்வமாகிவிடும். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles