Thursday, April 10, 2025
spot_img

பெற்றோரை கவனிக்காத மகனுக்கும் மகளுக்கும் நேர்ந்த பேரிடி ….? மனதை சுடும் கதை படிக்க தவறாதீர்கள்!

சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர். சுந்தரி மாமிக்கு வயது 51. அவர்களின் ஒரே மகன்  பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான்.

சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவன் பரத்வாஜ். குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது தெரிந்து, தான் நன்றாக படித்தால்தான் குடும்பம் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து, எப்போதும் பாடப் புத்தகமும் கையுமாக அலைவான். வகுப்பில் எப்போதும், அவன்தான் முதல் மாணவன். பிளஸ் 2-வில் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண்ணும், மாவட்ட அளவில் மூன்றாவது இடத்திலும் வந்தான். இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து விட்டாலும், அந்த நான்கு ஆண்டுகள் படிப்பு முடிவதற்குள், சுந்தரம் குருக்கள் மிகவும் திண்டாடித்தான் போய்விட்டார்.

பேங்க் லோன் கிடைத்திருந்தாலும், கல்லூரி கட்டணம் போக மீதி செலவுகளான புத்தகம், உணவு, விடுதி கட்டணம் என மற்றவற்றுக்கெல்லாம் பல இடங்களில் கடன் வாங்கியும், இருந்த ஒரே ஒரு ஓட்டு வீட்டையும் விற்றும் சமாளித்தார். எப்படியோ ஒரு வழியாக நல்ல மதிப்பெண்ணுடன் பரத்வாஜ் இன்ஜினியரிங் முடித்தான். அதற்குப் பின், சென்னையில் உள்ள, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், “அப்ரென்டிஸ்’ ஆகச் சேர்ந்தான்.

இரண்டு வருட பயிற்சிக்குப்பின், பணி நிரந்தரம் செய்யப்பட்டு, நிறுவனத்தின் டெக்ஸாஸ் கிளைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டான் பரத்வாஜ். படிக்கும் காலத்தில், பரத்வாஜுக்கு பெரும்பாலும் ரசம் சாதம், தயிர்சாதம் தான். பல நேரங்களில குருக்களும், அவர் மனைவியும், தாங்கள் சாப்பிடாமல் கூட இருந்து விடுவர் ஆனால், மகனுக்கு எப்படியாவது, எதையாவது மூன்று வேளையும் சாப்பிடக் கொடுத்து விடுவர்.

கண்காணாத இடத்திற்கு போய், மகன் சாப்பாட்டிற்கு கஷ்டப்படக் கூடாது. சுந்தரம் குருக்களுக்கும், சுந்தரி மாமிக்கும் ஒரே எண்ணம்தான். ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று. மருமகள் பவித்ரா ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். அவள் அப்பா ஒரு ஓட்டலில் சமையல்காரர், பிளஸ் 2 முடித்து இருந்தாள். வரதட்சணை, நகை, சீர் எதுவும் கேட்காமல், இவர்களே திருமண செலவுகளை செய்து, திருமணத்தை முடித்தனர்.

திருமணமான ஒரே வாரத்தில், பரத்வாஜ், மனைவி பவித்ராவுடன் டெக்ஸாஸ் சென்று விட்டான். போன புதிதில், அவ்வப்போது போன் செய்து பேசிக் கொண்டிருந்த மகனும், மருமகளும். அதன் பின், மாதம் ஒரு முறை … இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்று பேசலாயினர். திருமணத்திற்குப் பின் டெக்ஸாஸ் சென்ற பரத்வாஜ் ஒரு முறை கூட பணம் அனுப்பவில்லை. அதற்குப் பின், பரத்வாஜிடமிருந்து பணம் பற்றி எந்தப் பேச்சும் கூட வந்தது கிடையாது.

சுந்தரம் குருக்களுக்கும், சுந்தரி மாமிக்கும், மகன் பணம் அனுப்பவில்லையே என்ற கவலையெல்லாம் இல்லை. அவன் நன்றாக இருந்தால், அதுவே போதும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மகன் இதோ இப்போதுதான் சொந்த ஊர் வருவதாக போன் செய்திருந்தான். அதற்குதான் சுந்தரி மாமி தடபுடலாக பட்சணங்கள் எல்லாம் செய்து அமர்க்களப்படுத்தி கொண்டிருக்கிறாள்.

சுந்தரி மாமியிடம் மகன் போனில் பேசும் போதெல்லாம், “அம்மா இங்க சொர்க்கம் மாதிரி இருக்கும்மா. பெரிய வீடு, தோட்டம் எல்லாம் இருக்கு. வீடு பெருக்க, பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க எல்லாவற்றிருக்கும் மிஷின் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் இங்கேயே வந்து, எங்க கூடவே தங்கிடுங்கம்மா. அங்கே என்ன இருக்கு?’ என்று அடிக்கடி கூப்பிடுவான்.

“அப்பா கோவிலை விட்டுட்டு வருவார்ன்னு தோணலைப்பா, நீ இங்கு வரும்போது, அது பற்றி பார்க்கலாம்…’ என்று கூறி வந்தாள் சுந்தரி மாமி. மகன் சொல்லிச் சொல்லியே சுந்தரி மாமிக்கு, அந்த ஆசை அடி மனதில் தங்கி விட்டது. எப்போதும் சுந்தரம் குருக்களிடம் வாய் ஓயாமல் கூறத் தொடங்கி விட்டாள். ஒரு மாதமாவது டெக்ஸாஸ் போய் மகனுடன் அக்கடாவென்று இருந்து விட்டு வர வேண்டுமென்று. இப்போது மகன் வரும் தகவல் கிடைத்ததிலிருந்து அவளுக்கு கை, கால் ஓடவில்லை. எப்போது மகன் வந்து, தங்களை அவர்களுடன் கூட்டிப் போவான் என்றே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

பரத்வாஜ் வரும் அன்று, மீனம்பாக்கம் விமானநிலையம் சென்று, அவர்களை கூட்டி வர வேண்டும் என்றுதான் சுந்தரி மாமிக்கு ஆசை. ஆனால் பரத்வாஜ், “அம்மா நீங்க சிரமப்பட வேண்டாம். கஸ்டம்ஸ் கிளியரன்ஸ், மற்ற பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிய நேரமாகும். அதனாலே, நாங்களே வந்துடறோம்…” என்று கூறி விட்டதால், வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்து கொண்டிருந்தாள். காலையிலிருந்து சாப்பிடாமல் இருவரும் காத்திருக்க, ஒருவாறு மாலை மூன்று மணிக்கு வந்து சேர்ந்தனர் பரத்வாஜும், பவித்ராவும்.

ரெடியாக வைத்திருந்த ஆரத்தியை சுற்றி, வீட்டுக்குள் அழைத்தாள் சுந்தரி மாமி. சுந்தரம் குருக்கள், “”காலையில் இருந்து அம்மா சாப்பிடாம உங்களுக்காக தான் காத்திருக்காள். வாப்பா, ஒரு வாய் சாப்பிடலாம்.” “இல்லைப்பா, நாங்க பவித்ரா வீட்டுலியே சாப்பிட்டுட்டோம். அம்மா, உன் கையாலே, ஒரு வாய் காபி குடும்மா. அது போதும்.” அப்போதுதான், அவர்களுக்கு உறைத்தது, அவர்கள் இருவர் கையிலும் லக்கேஜ் எதுவும் இல்லாதது. மகனையும், மருமகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த ஆனந்தத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டனர். பெத்த மனமல்லவா! 

பவித்ரா தன் கையில் வைத்திருந்த துணி பையை மாமியாரிடம் கொடுத்தாள். அதில் சில சாக்லேட் வகைகளும், ஒரு புடவை ஜாக்கெட், வேட்டி துண்டும் இருந்தது. சுந்தரி மாமிக்கு பசியில் மயக்கமே வரும் போலிருந்தது. பார்த்து பார்த்து சமைத்து வைத்திருந்த அத்தனை உணவு வகைகளும் சீண்டுவாரற்று, அங்கே கிடந்தது. காபி சாப்பிட்ட சிறிது நேரத்தில், “”சரிப்பா நாங்க கிளம்பறோம். அங்கே பவித்ரா வீட்டுல தங்கிக்கிறோம். நான் அடிக்கடி வந்து பார்த்துக்கறேன். ஒரு மாசம் லீவு இருக்கு இல்ல,” கூறியவாறே கிளம்பி விட்டான் பரத்வாஜ்.

மறக்காமல், மாமியார் செய்து வைத்திருந்த பட்சணங்களை ஒன்று விடாமல் உரிமையுடன், “பேக்” செய்து கொண்டு கூடவே கிளம்பி விட்டாள் பவித்ரா. சாமர்த்தியகாரியாக மாறிவிட்டவள் அல்லவா! இவர்கள் இருவரும், அதை ருசி கூட பார்த்திருக்கவில்லை. இருவருக்கும் மிகவும் வருத்தமாக இருந்தாலும், சுந்தரம் குருக்கள் வெளியில் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை.

சுந்தரி மாமி, அவர்கள் கிளம்பியவுடன் மனம் தாளாமல் புலம்பி தள்ளி விட்டாள்.  “ஒரே பையன்னு ஆசையா வளர்த்தோம். இப்ப அவன் யாரோ மாதிரி வந்து அரைமணி நேரத்துல ஓடறான். எனக்கு மனசு சங்கடமா இருக்குங்க.” சுந்தரம் குருக்கள்தான் அவளை பலவாறு தேற்றி சாப்பிட வைத்தார். இரண்டு நாட்கள் கழித்து, மறுபடியும் வந்த பரத்வாஜ், அப்பாவிடம் மட்டும் பேசினான்.

“அப்பா, பவித்ராவுக்கு, அவ அம்மாவை டெக்ஸாசுக்கு கூட்டிக்கிட்டு போய், ஒரு மாசம், கூட தங்க வைச்சுக்க ஆசைப்பா. அவ அம்மாவும் பாவம், சின்ன வயசிலிருந்து குடும்பம், குழந்தைகள்னு உழைச்சு ஓடாயிட்டா. அதனால, அவங்களை நாங்க இப்ப கூட்டிக்கிட்டு போகப் போறோம். நீங்க எல்லாத்தையும் சரியா புரிஞ்சிப்பீங்க. அதனாலதான், உங்ககிட்ட சொல்றேன்.அம்மாவுக்கு எப்படியாவது சொல்லி புரிய வைக்கறது உங்க பொறுப்புப்பா”.

“அப்புறம்… பவித்ராவுக்கு தனியா இருக்கிறதுதான் பிடிச்சிருக்குப்பா. அம்மாவுக்கும், பவித்ராவுக்கும் ஒத்துப் போகாதுப்பா. அதனால, நீங்க போன் கூட செய்யாதீங்க. நானே, அப்பப்ப சமயம் கிடைக்கும் போது, உங்களுக்கு போன் செய்றேன்.” அத்தோடு டெக்ஸாசுக்கு கிளம்பும் அன்றுதான் இருவரும் வந்து ஐந்து நிமிடம் இருந்து, விடை பெற்றுக் கிளம்பினர்.

அன்று இரவு, “என்னங்க நான் உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு வந்ததிலிருந்து, எதுக்கும் ஆசைப்பட்டதில்லை. ஆனால், நம்ம பையன் வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம், ஒரு மாசமாவது அங்கே போய் இருக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். அது நிராசையாயிடுச்சு சரி, வாங்க தூங்கலாம். நீங்க நாலு மணிக்கு எழுந்து குளிச்சு கோவிலுக்கு போகணும்.”

ஆறு மாதங்கள் உருண்டோடிய பின், டெக்ஸாசில் ஒரு நாள்… என்னங்க, நான் கர்ப்பமாக உள்ளேன் என்று டாக்டர் சொல்லி விட்டார். பேசாம உங்க அம்மாவை வரவழைச்சா என்னங்க? பிரசவம் முடியற வரை, இங்கேயே இருந்து, எனக்கு வேண்டியதை சமைச்சு போடட்டுமே.” என்று பவித்ரா தன் கணவன் பரத்வாஜிடம் கூறுகிறாள். “நீ தானே நமக்கு பிரைவசி தேவை, அவங்க… இங்கே வந்தா சரிப்படாதுன்னு சொன்னே. இப்பக் கூப்பிட்டா எப்படி வருவாங்க?” என்று பரத்வாஜ் கூறுகிறான். 

சரி, எனக்கு மனசு சரியில்லை. இங்கு புதுசா கட்டப்பட்ட அம்மன் கோவிலுக்கு போன வாரம் கும்பாபிஷேகம் நடந்தது இல்ல. அங்கு சென்று வரலாம். இவர்கள் போன போது அந்த கோவிலில் சற்றுக் கூட்டமாக இருந்தது. அப்போதுதான் அம்மனுக்கு அலங்காரம் முடித்து, திரை விலகி தீபாராதனை காட்டப்பட்டது. கண்களை மூடி கை குவித்து இறைவனை வணங்கி, கண்களை திறந்தால், தீபாராதனை தட்டுடன் அருகில் வந்த குருக்களைப் பார்த்து அதிர்ந்தான் பரத்வாஜ்.

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

அங்கே நிற்பது யார்? அப்பாவா? கண்களை கசக்கி விட்டுக் கொண்டு மீண்டும் பார்த்தான். “அப்பா…” அவனை அறியாமல் வாய் முணுமுணுத்தது. “கொஞ்சம் இருப்பா. இதோ வரேன்.” அங்கிருந்த வேறொரு குருக்களிடம் ஏதோ சொல்லி விட்டு வந்த அப்பா, “அதோ, அது தான் நம்ம குவார்ட்டர்ஸ் வாங்க, போகலாம்,” சுந்தரம் குருக்கள் முன்னே வந்து நடக்க, பேச்சற்று பின் தொடர்ந்தனர் பரத்வாஜும், பவித்ராவும். போனவுடன் வீட்டை பார்த்து அசந்து போய் விட்டான். 2 பெட் ரூம் ஹால் பிளாட். வீட்டில் இவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற சுந்தரி மாமி, “சென்னையில் அப்பா வேலை பார்த்த கோவில் தர்மகர்த்தாவின் பொண்ணும், மாப்பிள்ளையும் இங்கேதான் இருக்காங்க. அவர்கள் கட்டிய கோவிலுக்கு, பூஜை விதிமுறைகள் தெரிஞ்ச தலைமை குருக்கள் வேணும்ன்னு, அப்பா கிட்ட கேட்டுகிட்டாங்க. தர்மகர்த்தாவும், நீங்க டெக்ஸாசுக்கு கிளம்புங்க. நான், இங்கே வேறு ஆளை பார்த்துக்கறேன்”னு சொல்லிட்டார்.

“அப்பாவும் சென்னையில நமக்கு யாரிருக்கா? தெய்வ கைங்கரியத்தை எங்கேயிருந்து செய்தா என்னன்னு புறப்பட சொல்லிட்டார். இங்கே அப்பாவுக்கு மாத சம்பளம், ஐந்து லட்சம் ரூபாய்,” கட கடவென கூறி முடித்தாள் சுந்தரி மாமி. “அம்மா, இப்ப உங்க மருமகள் தாய்மை அடைஞ்சிருக்கா … அவளுக்கு வாய்க்கு ருசியா சாப்பிடணும்ன்னு தோணுதாம்; அவ அம்மா, இப்ப வர முடியாத சூழ்நிலை. நீங்க ரெண்டு பேரும் எங்க கூட பிரசவம் வரை இருந்தா நல்லாயிருக்கும்மா” பரத்வாஜ் கூறுகிறான். “அது சாத்தியப்படாதுப்பா, அப்பா பூஜை முடிச்ச மீதி நேரத்துல, இங்கே இருக்கிற வேத பாடசாலையில் வேதம் சொல்லிக் கொடுக்கிறார். அதுக்கு இங்கே இருக்கிறதுதான் சவுகரியம்.”

“அம்மா … அப்பா வரமுடியலைன்னா பரவாயில்லை. நீ மட்டுமாவது வாம்மா.” இல்லைப்பா அப்பாவுக்கும் வயசாகிறது. அவரை பார்த்துக்கறதுதான் என் முதல் கடமை. அது மட்டுமில்லாம, தினமும் கோவில் பிரசாதங்களை செய்கிற வேலையும் எனக்கு கொடுத்திருக்காங்க. வேதம் கத்துக்கறவங்களுக்கும், கடவுளை தரிசிக்க வர்றவங்களுக்கும், மதிய உணவு செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கு. இதுக்காக எனக்கு இரண்டு லட்சம் ரூபாய கிடைக்கிறது. பரத்வாஜ், இவ்வளவு நாள் உனக்காகவே நாங்க ரெண்டு பேரும் வாழ்ந்தோம். பசியும் பட்டினியுமா இருந்து உன்னை ஆளாக்கி, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தோம். இது உனக்கு நன்கு தெரியும். ஆனால், கல்யாணம் ஆனவுடன் உனக்கு நாங்க தேவையற்று போயிட்டோம். கலங்கி நின்ன எங்களுக்கு தொப்புள் கொடி உறவு போனா என்ன, வேற புதிய உறவுகளை ஏற்படுத்தி தர்ரேன்னு, கடவுள் புதிய பந்தங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இனிமேல், அந்த பந்தங்களை எங்களால விட முடியாது. மேலும் பூஜை பண்டிகை என்று நாங்கள் இருவரும் அடிக்கடி நியூஜெர்சி, கலிஃபோர்னியா செல்வோம்.  அங்கு உள்ளவர்கள் இவரை அழைப்பார்கள்.  இதில் எங்களுக்கு நல்ல வருமானம்.  எங்கள் சேமிப்பு போக மீதம் உள்ளதை சென்னையில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு அனுப்புகிறோம். பணத்திற்கு இப்போது எங்களுக்கு பஞ்சம் இல்லை. சென்னையில் வளசரவாக்கத்தில் ஒரு வீடு வாங்கி உள்ளோம். ஒரு காலத்தில் உன் அன்புக்காக ஏங்கி கொண்டு இருந்தோம். மூன்று வேளை உனக்கு சாப்பாடு போட்டு விட்டு நாங்கள் பட்டினி கிடப்போம். ஆனால் இப்போது உன்னை பற்றி நினைக்க எங்களுக்கு நேரம் இல்லை. உனக்கு உதவ முடியாது. இப்ப மதிய உணவு நேரம் நெருங்கிடுச்சு. நான் போய் பரிமாறணும்” என்று கூறி அரக்க பறக்க கிளம்பினாள் சுந்தரி மாமி.

போகும்போது பவித்ராவிடம், “எங்களுக்கு பல பணக்கார பெண்களின் ஜாதகம் வந்தது. ஆனால் நீ எழை குடும்பத்தில் பிறந்தவள் , எங்களை எல்லாம் கை விட மாட்டாய் என்று நினைத்து ஏமாந்து போய் விட்டோம். என் மகனை இப்படி மாற்றி விட்டாய். அவனை உனக்கு அடிமையாக்கி விட்டாய். நாளைக்கு உனக்கும் ஒரு மகன் பிறப்பான், பிற்காலத்தில் உங்களையும் இப்படி நடத்துவான். கடவுள் உனக்கு தக்க தண்டனை கொடுப்பார்”. மாமியாரின் அனல் பறக்கும் பேச்சு அவளை ஈட்டியால் குத்துவது போன்று இருந்தது. மகனிடம் “போகும் போது அப்பாவிடம் எதுவும் பேசாதே, அவர் எரிமலை போல் வெடித்து விடுவார். எதுவும் பேசாமல் கிளம்பு. அப்புறம் நீ அடிக்கடி இங்கு வருவது அவருக்கு பிடிக்கவில்லை. என்னை பார்ப்பது என்றால் மதிய உணவு வேளையில் கோவிலில் பார். சாப்பாடு போட்டு அனுப்புகிறேன்”. மாமி பொரிந்து தள்ளி விட்டு கிளம்பி விட்டாள். 

மாமியிடம் குருக்கள்  “ராம்ஜியை 5 மணிக்கு கார் எடுத்து கொண்டு வர சொல். புரொஃபசர் பாலுவை ஒரு பூஜை விஷயமாக பார்க்க வேண்டும்”. பெற்றவர்களின் அன்பை உணர முடியாமல், மனைவியின் சுயநல போக்கிற்கு அடிமையாகி, அவர்களை உதாசீனப்படுத்தி இப்போது, அதே அன்பிற்கு ஏங்கிய பரத்வாஜ், சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அப்பாவின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கக் கூசி, அங்கிருந்து தன் மனைவியுடன், தளர்ந்த நடையுடன் வெளியேறினான்.

பரத்வாஜுக்கும், பவித்ராவுக்கும் தலை சுற்றுகிறது. பவித்ராவுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. அம்மாவின் பேச்சு அவர்கள் இருவருக்கும் சாட்டையால் அடிப்பது போல் இருந்தது. வைராக்கியம் உள்ள அப்பா அவர்களை பார்க்காமல், கண்டு கொள்ளாமல் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார்!

பூங்கா இதழ் (The News Park) கருத்து: திருமணத்துக்கு பின்னும் ஒவ்வொரு மகனும் அப்பா, அம்மாவை தெய்வமாக பாருங்கள்! மாமனார், மாமியாரை மருமகள்கள் தெய்வமாக பாருங்கள்!

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles