சரியும் புத்தக வாசிப்பு – ஆர். லக்ஷிதா, சட்டக் கல்லூரி மாணவி
“ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் “– விவேகானந்தர், “புரட்சிப் பாதையில் கையில் துப்பாக்கியை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே” – லெனின் என பல அறிஞர்கள் புத்தக வாசிப்பதில் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமே இல்லை. இன்று புத்தகம் வாங்குவதை தேவையற்ற செலவாக கருதுகின்றனர். புத்தகம் படிப்பது முழு நேர வேலையாக இல்லாவிட்டாலும் பொழுது போக்கிற்காகவாவது புத்தகங்களை படிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைய தலைமுறை பாட புத்தகங்களையும் தன் துறை சார்ந்த புத்தகங்களையும் மட்டும் படிப்பதால் வேறு துறைகளை பற்றிய அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. மொழி, கலாச்சாரம், பண்பாடு ,வரலாறு போன்றவை புத்தகங்களின் மூலமாகவே அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இத்தகைய புத்தக வாசிப்பை நிறுத்தி விட்டால் அது அந்த தலைமுறையோடு அழிந்து விடும்.
குறிப்பிட்ட சதவீத மாணவர்களும் இளைஞர்களும் சமூக வலைதளங்களுக்கும் மதுவிற்கும் அடிமையாகி நேர்மறை சிந்தனைகளை இழக்கிறார்கள். தனிப்பட்ட மற்றும் வேறுபட்ட கருத்துக்கள் இல்லாமல் பெரும்பான்மையான கருத்துக்களையே பின்பற்றுகிறார்கள். கவன சிதறலோடு இருப்பதோடு தொலைநோக்குப் பார்வை இல்லாமலும் இருக்கிறார்கள். இதற்கு ஒரு காரணம் புத்தக வாசிக்கும் பழக்கம் இல்லாதது. இன்றைய இளைஞர்களும் வாசிக்கின்றார்கள், ஆனால், அவை முகநூல் பதிவுகள் ,சினிமா விமர்சனங்கள், ஃபார்வேர்ட் குறுந்தகவல்கள் போன்றவையாக இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் புத்தக வாசிப்பு சரிந்து விட்டது என்று பொதுப்படையாக கூறி விட முடியாது காரணம் மின்னணு புத்தகங்களும் தற்போது பயன்பாட்டில் உள்ளது இருப்பினும் அச்சு புத்தக வாசிப்பே மனநலனுக்கும் உடல் நலனுக்கும் உகந்ததாகும். புத்தகங்கள் நம்மை ஆறுதல் படுத்தும். அறிவுரை வழங்கும். நம்முள் பல கேள்விகளை எழுப்பும். சில கேள்விகளுக்கு பதில் தரும். அறிவை விசாலமாக்கும். பார்வையை விரிவுபடுத்தும்.
புத்தக வாசிப்பு சரிவால் அதிகரிக்கும் மனநல பிரச்சனைகள் – டி.எஸ்.கீர்த்தனா, சட்டக் கல்லூரி மாணவி
சமூக வலைத்தளங்களின் தாக்கம் தாறுமாறாக அதிகரித்த காரணத்தினால் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கம் கடும் வீழ்ச்சியை சந்திக்கிறது என்ற கவலை இருந்து கொண்டே தான் இருக்கின்றது. புத்தகம் அதிகம் படித்த காலகட்டத்தில் நமக்கு மனநிலையும் சரி, உடல் நிலையும் சரி, மிக சரியாக இருந்தது. ஆனால், “புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நாம் என்று கைவிட்டோமோ அன்றே நம் மன நிலையும் கெட்டுவிட்டது, உடல் நிலையும் கெட்டுவிட்டது”. செல்போனில் பல மணி நேரத்தை செலவழிக்கும் நாம், புத்தகங்களை வாசிப்பதற்கென்று ஒரு மணிநேரம் கூட செலவழிப்பதில்லை என்பது வேதனையானது.
நாம் மனசோர்வில் இருக்கும் பொழுதும், இறுக்கத்தில் இருக்கும் பொழுதும் நல்ல புத்தகங்களை அமைதியையும், தெளிவையும், வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்கும். வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதற்கு சில காரணங்கள் உள்ளன. பெற்றோர்களுக்கு வீட்டில் புத்தகங்களை எடுத்து படிக்கும் பழக்கம் இல்லாததால், பிள்ளைகளும் அப்படியே அமைந்து விடுகின்றனர். இணையவழி தோற்றங்களும் வாசிப்பு பழக்கத்தை குறைத்துவிட்டன. புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தினால், நம் மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதுடன் நிறைவாற்றல் திறனையும் அதிகரிக்கும் இதனால்,மறதி ஏற்படாமல் தடுக்கிறது.
அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தகங்களை வாசித்து வாழ்வில் மேன்மை அடைவோம் – – பா.பிரதி பாலா, சட்டக் கல்லூரி மாணவி
புத்தகங்கள் அதிகமாக வாசிப்பதன் மூலம் அதிகமான புதிய சொற்களை கற்றறிந்திட முடியும். புத்தகங்களை குறைவாக வாசிப்பதன் மூலம் மக்களின் சொற்களஞ்சியம் குறைந்து பேச்சு மற்றும் எழுத்து திறன் குறைகிறது. குழந்தைகளின் கற்பனை திறன் மற்றும் படைப்பாற்றல் திறனும் குறைகிறது. இதனால் புதிய கருத்துகளே உருவாக்கும் திறன் குறைகிறது. புத்தக வாசிப்பு கவனத்திறனை அதிகரிக்கிறது. குறைவான புத்தக வாசிப்பினால் குழந்தைகள் பாடங்களை கற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு அவர்களின் கற்றல் திறன் குறைகின்றது.பு த்தக வாசிப்பின் மூலம் பல்வேறு வகையான புதிய கருத்துகளை நாம் அறிந்து கொள்ள முடியும். புத்தகங்களை வாசிப்பதன் மூலம் மக்களுக்கு மன அழுத்தம் குறைந்து, தன்னம்பிக்கை ஏற்படுகிறது. நாம் அனைவரும் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ஒரு மணி நேரமாவது புத்தகங்களை வாசித்து நம்முடைய திறன் மற்றும் அறிவினை மேம்படுத்தி வாழ்வில் மேன்மை அடைவோம்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைவதால் ஏற்படும் உடல்நலம் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சனைகள் சொல்லித் தெரிவதில்லை. இதனால், புத்தக வாசிப்பை அதிகரிக்க தக்க நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.