பதில் சொல்லுங்க பார்ப்போம்!
ஒரு மலைக்கு மேல இரண்டு ஊர் இருக்கு. அதுல ஒரு ஊர்ல இருக்கிற மக்கள் எல்லாம் உண்மையை மட்டும் தான் பேசுவாங்க பொய் பேசவே மாட்டாங்க. இன்னொரு ஊர்ல இருக்கிற மக்கள் எல்லாருமே பொய் மட்டும் தான் பேசுவாங்க உண்மையை பேசவே மாட்டாங்க.
இப்போ நீங்க உண்மைய பேசுற ஊருக்கு போகணும். அங்க மொபைல் போன் அப்புறம் கூகுள் மேப் எதுவுமே வேலை செய்யாது. நீங்க போய்ட்டு இருக்குற இடத்துல இரண்டு பாதை பிரியுது. ஆனா, இப்போ உங்களுக்கு உண்மை பேசுற ஊருக்கு போறதுக்கான பாதை எதுனு தெரியாது.
அப்போ, அங்க ஒருத்தர் இருக்காரு. அவரு உண்மை பேசுற ஊருக்காரரா இருக்கலாம் அப்படி இல்லன்னா பொய் பேசுற ஊர சேர்ந்தவரா இருக்கலாம். நீங்க இப்போ அவர்கிட்ட தான் அந்த ஊருக்கு போவதற்கான வழி எதுனு கேட்கணும். அவர் உண்மை பேசுற ஊர்க்காரரா இருந்தா கரெக்டான வழிய காட்டுவாரு. பொய் பேசுற ஊர்க்காரரா இருந்தா தப்பான வழியை காட்டுவாரு.
ஆனா, அவர்கிட்ட நீங்க ஒரே ஒரு கேள்வியை தான் கேட்கணும். நீங்க போயிட்டு சேர வேண்டிய கரெக்டான ஊருக்கு போயிட்டு சேரணும். என்ன கேள்வி கேட்பீங்க? உங்கள் பதிலை கீழே உள்ள பதிலுக்கான பகுதியில் பதிவு செய்யலாம்.
முல்லாவின் அழுகைக்கு காரணம் கேட்ட நபருக்கு வந்த மயக்கம்
முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார். அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு எனது அத்தை இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன் 50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்” கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.
நேர்மறை சிந்தனையின் சக்தியை உணருங்கள்
வயது என்பதற்கு எந்த வேலியுமில்லை. அவை எண்கள் மட்டுமே. வாழ்க்கையில் எல்லோரும் ஒன்றுதான். என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப் பட கத்துக்குவோம்.
நார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் “நேர்மறை சிந்தனையின் சக்தி – The power of positive thinking” என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார். தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார். தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப்பட்டு செய்யும் செயல்கள் கூட துன்பமயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.
பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார். கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் எழுதச் சொன்னார். வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார்.
சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது. இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார். அதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போக வில்லையே என்று கூறினார். இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.
தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?” என கேட்ட கேள்விக்கு என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள் என்றார். எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு சாப்பிடாமல் நான் இருந்ததில்லை என்று பதிலளித்தார். உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்ற போது என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு என் வீடு பத்திரமாகத் தான் இருக்கிறது என்று பதில் கூறினார்.இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப் புறம் நிரம்பியிருந்தது. இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.
கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. அது போல முழுக்க முழுக்க துன்பமயமான நிகழ்ச்சியைகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை. இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால், சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்…

கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக் கூடாது. அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளு பலகையாக இருக்க வேண்டும். என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள். மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும். வாசிக்கிறதை நிறுத்தி விட்டு பேனாவையும் துண்டு காகிதத்தையும் எடுத்து கோடு போட ஆரம்பிச்சிட்டீங்களா? மகிழ்ச்சியாய் எழுத ஆரம்பியுங்கள். வலது பக்கம் நிரம்பட்டும். இடது பக்கம் காலியாகட்டும்.
நீங்கள் இன்று எங்கே இருக்கிறீர்கள்? என்பது முக்கியம் இல்லை எங்கே போகிறீர்கள் என்பதே முக்கியம். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வயது ஒரு பொருட்டல்ல. நேர்மறை சிந்தனையின் சக்தியை உணருங்கள்! அதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியம்
பூங்கா இதழ் (The News Park) கருத்து: உங்களால் முடியும்! சாதிக்க வயது தடை இல்லை, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.