Advertisement

பாண்டிச்சேரியை தமிழகத்துடன் இணைக்க முடியுமா? என்பதைப் போல

நானும் வாக்காளர்சாமியும் கடந்த வாரம் பாண்டிச்சேரிக்கு சென்று இருந்தோம்.  அங்கு டீ கடைக்குச் சென்ற போது இருந்த பிரபலமான தமிழ் நாளிதழ் ஒன்றில் விக்கி ஆனந்தா சாமியார் என்பவர் யூகித்து சொல்லும் செய்தியை படிக்க நேர்ந்தது. “புதுச்சேரியில் சமீபத்தில் தொடங்கிய கள், சாராயக்கடை ஏலம் டல் அடிச்சுதாம். சாராயக்கடை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டாததால் ஏலத்தில் அரசு எதிர்பாராத வருவாய் கிடைக்கலையாம். இதனால் டென்ஷனான முதல்வரான புல்லட் சாமி கடைகளை மூடி விடலாமா? என்ற சிந்தனையில் இருந்தாராம். அப்செட் ஆன புல்லட் சாமி நமது அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க மதுவிலக்கை கொண்டு வந்து விடலாமா? என எதிர் தரப்பு திகைக்கும் வகையில் பேசியதோடு துறையின் உயர் அதிகாரிகளையும் அவர்கள் முன்னிலையில் செல்போனில் அழைத்து கருத்தும் கேட்டாராம்” என அந்த பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை படித்த நான் உடன் இருந்த வாக்காளர்சாமியை பார்த்து, “மதுவிலக்கு பாண்டிச்சேரியில் கொண்டு வந்து விடுவார்களா? என கேட்டேன்.  “பாண்டிச்சேரியை தமிழகத்துடன் இணைக்க முடியுமா? என்னைப் பார்த்து வாக்காளர்சாமி கேட்டார். ஒரு கேள்வியை கேட்டால் சம்பந்தம் இல்லாத மற்றொரு கேள்வியை இந்த வாக்காளர்சாமி கேட்பதே வழக்கமாகிவிட்டது என்ற எரிச்சல் எனக்கு வந்தது.  அவரது கேள்விக்கு சரியான பதிலை சொல்லி மூக்கை உடைக்க வேண்டும் என கருதினேன்.

“தமிழகத்தில் உள்ள சிறிய மாவட்டத்தை விட குறைந்த பரப்பளவை கொண்டுள்ள பாண்டிச்சேரி ஒரு சிறிய மத்திய ஆட்சி பிரதேசமாக உள்ளது. இதனை நிர்வகிப்பதால் மிகுந்த செலவு ஏற்படுகிறது.  பாண்டிச்சேரியில் இருந்து வெகு தொலைவில் கேரளாவில் இருக்கும் மாகி மற்றும் ஆந்திராவில் இருக்கும் ஏனாம் பகுதிகளை பாண்டிச்சேரியில் இருந்து நிர்வகிப்பது சிரமமானது. அங்கு வாழும் மக்கள் தலைநகருக்கு வருவது சிரமமான ஒன்றாக உள்ளது. தமிழ் பேசும் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை தமிழகத்துடனும் மலையாளம் பேசும் மாகி பகுதியை கேரளாத்துடனும் தெலுங்கு பேசும் ஏனாம் பகுதியை ஆந்திரத்துடனும் இணைப்பதே நல்லது” எனக் கூறிவிட்டு புத்திசாலித்தனமாக பதில் கூறியதாக கருதி வாக்காளர்சாமியின் முகத்தை பார்த்தேன்.

வாக்காளர்சாமியோ என்னை ஏளனமாக பார்த்து பேசத் தொடங்கினார். “இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை பிரிட்டிஷார் ஆட்சி செய்தது போல தற்போது புதுச்சேரி பிரதேசமாக உள்ள பாண்டிச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சுமார் 280 ஆண்டுகள் பிரான்ஸ் நாடு ஆட்சி செய்தது. கடந்த 1954 நவம்பர் முதல் தேதியில் இந்த பகுதிகளை பிரான்ஸ் நாடு இந்தியாவிற்கு வழங்கிய போதிலும் கடந்த 1963 ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டு புதுச்சேரி சுதந்திரம் பெற்றது” என்றார் வாக்காளர்சாமி.

மீண்டும் வாக்காளர் சாமி தமது ஞானப் பிரச்சாரத்தை என்னிடம் தொடர்ந்தார். “கடந்த காலங்களில் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகியவற்றை தமிழ்நாட்டுடனும், மாஹேயை கேரளாத்துடனும் இணைக்கவும், யானத்தை ஆந்திரத்துடனும் இணைக்க மத்திய அரசு பரிசீலித்தது. ஆனால், புதுச்சேரி பகுதிகளை பிரான்ஸ் இந்தியாவுக்கு வழங்கிய போது பிரான்சுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் உள்ள சில ஷரத்துக்கள் இணைப்புக்கு தடையாக உள்ளது. பாண்டிச்சேரியின் தனி அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும் அதன் நிலையில் எந்த மாற்றமும் பிரெஞ்சு அரசாங்கத்துடன் முன் கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஷரத்து கூறுகிறது”

என்னதான் சரித்திரத்தை வாக்காளர் சாமி கூறினாலும் அவருக்கு மூக்கு உடையும்படி பதில் கூற வேண்டும் என்று மீண்டும் நினைத்தேன். “ஹலோ சாமி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று ஒப்பந்தம் செய்துதான் காஷ்மீர் இந்தியாவில் இணைந்தது. தற்போது மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டு மாநிலத்தை மூன்றாக பிரித்து மூன்று யூனியன் பிரதேசங்களை உருவாக்கவில்லையா?” என கேட்டேன்.” உனக்கு எல்லாம் விளக்கம் சொல்லி புரிய வைக்க முடியாது” என வாக்காளர் சாமி என்னை பார்த்து கூறிவிட்டு அமைதியாகிவிட்டார்.

“சாமி இதற்கெல்லாம் கோபித்துக் கொள்ளாதீர்கள். நான் கேட்டது பாண்டிச்சேரியில் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா? என்று. அதற்கு ஏன் சம்பந்தமில்லாத விளக்கத்தை பேசுகிறீர்கள்?” என்று வாக்காளர் சாமியை பார்த்து கேட்டேன். “எப்படி பாண்டிச்சேரியை தமிழகத்துடன் இணைக்க முடியாதோ, அதேபோலவே பாண்டிச்சேரியில் மதுவிலக்கு கொண்டு வர இயலாத சூழல் நிலவுகிறது என்பதை புரிந்து கொள்” என கூறி என்னை முறைத்துப் பார்த்தார். “சரி சாமி, விடுங்க, நம்ம வந்த வேலையை பார்க்க செல்வோம்” என்று அவரிடம் இருந்து பேச்சை மாற்றி வேலையை கவனிக்க சென்றோம்.

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles