அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வணக்கம் கூறி “என்ன சாமி செய்திகள்” என்றேன் நான். “இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு விவசாயத்திற்கும் குடிதண்ணீருக்கும் பஞ்சம் ஏற்படாமல் இருக்கச் செய்யும் கொடையாளியாக உள்ள பிரமபுத்திரா நதி சீனாவின் ஆட்சியில் உள்ள இமயமலையில் தொடங்கி இந்தியாவுக்குள் நுழைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்நிலையில் பிரம்மபுத்திரா இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்பாக ஆற்றின் குறுக்கே ரூபாய் 11 லட்சம் கோடி செலவு செய்து உலகிலேயே மிகப்பெரிய அணையை கட்ட சீனா தயாராகி வருகிறது. இவ்வாறு நடந்தால் இந்தியாவுக்கு பல்வேறு ஆபத்துகள் உள்ளன. இதுகுறித்து பூங்கா இதழில் சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதுங்கள்” என்ற கோரிக்கையை முன் வைத்தார் வாக்காளர் சாமி.
“அப்படியே, ஆகட்டும் சாமி!” என்று நான் கூறியதை கண்டும் காணாதது போல அடுத்த செய்திக்கு தாவினார் அவர். “மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது. 2019 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பானது கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஆயத்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட் உதவி பெறும் பயனாளிகளின் பட்டியல் போன்றவை பழைய மக்கள் தொகை அடிப்படையில் தயாரிக்கப்படுவது பல தீமைகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்” என்றார் வாக்காளர் சாமி.
“பாஜக வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தவறுகளை செய்கிறது. அதை தடுத்து நிறுத்துங்கள் என்று ஆர் எஸ் எஸ் தலைவருக்கு ஆம் ஆத்மி தலைவர் கேசரிவால் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பொய்கள் பேசுவதை நிறுத்தங்கள் என்று பாஜக பதில் கடிதம் எழுதியுள்ளது புத்தாண்டின் தொடக்கத்தில் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“சாமி! தமிழக அரசியல் பக்கம் கொஞ்சம் வாருங்கள்” என்றேன் நான். “எப்போதும் உனக்கு அவசரம்தான்” என கூறிவிட்டு செய்திகளை வழங்க தொடங்கினார் வாக்காளர் சாமி.
“அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் தொடர்பான முதல் தகவல் அறிக்கை மூலமாக மாணவியின் பெயர் வெளியில் வந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. ஆனால், மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய தகவல் மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் காரணமாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த தவறு நடந்து விட்டதாக அந்த அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனால், மத்திய அமைப்பான தேசிய தகவல் மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது தெரியவில்லை” என்றார் வாக்காளர் சாமி.
“அரசியல் கட்சியில் தொண்டர்களின் உழைப்பை வைத்து தேர்தல் களம் கண்ட மக்களாட்சி முறை சமீப காலமாகவே மாறத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அஇஅதிமுக, திமுக, பாமக, விஜயின் கட்சி போன்றவை கார்ப்பரேட் நிறுவனங்களை தேர்தல் வியூபத்துக்கும் பணிகளுக்கும் அமர்த்தும் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. மக்கள் அரசியலாக கார்ப்பரேட் அரசியலா? என்பதை மக்களே அறிந்து கொள்ள வேண்டும்” என்றார் வாக்காளர் சாமி.
“வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறிவரும் நிலையில் 234 தொகுதிகளிலும் அக்கட்சி நேரடி வேட்பாளர்களை நிறுத்தினால் மட்டுமே இந்த நிலையை உருவாக்க வாய்ப்புகள் இருக்கலாம். அப்படி என்றால் திமுகவின் கூட்டணிக் கட்சியின் நிலை என்ன? என்பது தெரியவில்லை” என்றார் வாக்காளர் சாமி.
“ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தால் விசிக -ல் இருந்து வெளியேற்றப்பட்டார் ஆதவ் அர்ஜுனன். அதே குரலை தற்போது கட்சியின் தலைவர்களில் ஒருவரான வன்னியரசு வலியுறுத்துகிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை அஇஅதிமுகவும் வரவேற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது என்ன பலன் அளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்றார் வாக்காளர் சாமி.
“இரட்டை இலை சின்னம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக நடைபெற்ற நடைபெறும் விசாரணையில் எங்கே இரட்டை இலை முடக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் அக்கட்சியின் தலைவரும் முடக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கட்சியின் முன்னாள்கள் மூவரும் இருந்து வருவது அஇஅதிமுக தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“கேரளா தீவிரவாதிகள் மாநிலம் என்றும் தீவிரவாதிகளின் ஆதரவால் கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்றும் மகாராஷ்டிரா பிஜேபி அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“கடந்த வாரம் பாமகவில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனரும் தலைவரும் நேரடியாக மோதிக்கொண்டது கட்சித் தொண்டர்களுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியதோ இல்லையோ கட்சியின் நிறுவனருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், கட்சியின் தலைவரோ கூட்டத்தில் கூறியபடி அவரது சென்னை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஆலோசனைகளை நடத்த தொடங்கிவிட்டார். கட்சி நிறுவனரிடம் இருந்து தலைவரின் கட்டுப்பாட்டில் மாறத் தொடங்கி விட்டதோ? என பலரும் எண்ணுகின்றனர்” என்றார் வாக்காளர் சாமி.
விஜய் கட்சியின் முதல் மாநாட்டில் ஆளுநர் பதவி தேவையில்லை என்று அவர் முழங்கினார். ஆனால், அண்ணா பல்கலை விவகாரத்துக்கு பின்னர் ஆளுநரை அவர் சந்தித்தது ஆச்சரியம் ஒன்றும் கிடையாது. ஆளுநர் பதவி இருக்கும் வரை இருக்கிற அமைப்பில் பணியாற்றித்தான் ஆக வேண்டும் என்பது அவருக்கு தெரியாமல் இல்லை என்பதற்கு இது உதாரணமாகும். அதே சமயத்தில் ஆளுநரை சந்தித்து விட்டு வெளியில் வரும்போது செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றது அவர் மேல்மட்ட (எலைட்) அரசியல் செய்கிறாரா? என்ற கேள்விகளை சிலர் எழுப்பி உள்ளதை பலரும் நியாயமாக கருதுகிறார்கள்” எனக் கூறிவிட்டு விடை பெற்று சென்றார் வாக்காளர் சாமி.
பூங்கா இதழ் (The News Park) கருத்து:
அரசியல் செய்திகளை அறிந்து கொள்வது அவசியமே. அரசியல் இன்றி அணுவும் உலகில் அசையாது என்பதுதான் தத்துவம்.
பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!