Monday, July 21, 2025
spot_img

பள்ளிகளில் முன்னாள் மாணவர் சங்கங்களை ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல் + இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாய்மண் தமிழ்நாடே – சி. விமலா

பள்ளிகளில் முன்னாள் மாணவர் சங்கங்களை ஒரு இயக்கமாக நடத்த வேண்டும்

பழனியில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. முன்னாள் மாணவர்களின் சார்பாக பள்ளியின் நூற்றாண்டு விழாவிற்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் தலைமை ஆசிரியரும் முன்னாள் மாணவருமான வெ. மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் கலந்துகொண்டு பேசியதாவது.

பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி கடந்த நூறாண்டுகளாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி வழங்கியுள்ளது. இங்கு படித்த பலர் மக்கள் பிரதிநிதிகளாகவும் மத்திய, மாநில அரசில் பெரும் பதவிகளிலும் சிறந்த தொழில் முனைவோராகவும் வளர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களை உருவாக்கிய பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு நூற்றாண்டு விழாவை முன்னாள் மாணவர்கள் சார்பில் நடத்துவது அவசியமானதாகும். 

கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் நவம்பர் மாதத்தில் நூற்றாண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள்ளாக அனைத்து மாணவர்களுக்கும் அழைப்பு விடுத்து விழா ஏற்பாட்டு கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும். பழனி நகராட்சி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும் உள்ளூர் பொதுமக்களும் வெளியூரில் உள்ள கல்விக்கு ஆதரவு வழங்குபவர்களும் பழனி நகராட்சியின் நூற்றாண்டு விழாவிற்கு உதவ வேண்டுமென்று என்று ராமராஜ் கேட்டுக்கொண்டார். 

அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் சங்கங்களை தமிழகம்  முழுவதும் வலுப்படுத்த வேண்டும் இந்த சங்கங்கள் மூலம்  பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் சிறப்பாக படிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு  உதவும் வகையில் முன்னாள் மாணவர் சங்கங்களை மக்கள் தானாக முன்வந்து ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்தார்.

இந்த செய்தியை படிக்கும் பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்களும் பொது மக்களும் விழா குழுவினரை அணுகி தகுந்த ஆதரவை வழங்க வேண்டும். வேண்டுகோள் விடுத்தார்அரசின் கல்விக்கூடங்கள் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவர்களை உருவாக்கும் சக்தி என்பதை அனைவரும் உணர வேண்டும். என்று ராமராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் விழா மலர் அமைப்பு பற்றிய விளக்கத்தை சந்திரசேகர ஹரிஹர சுவாமிநாதன் எடுத்துரைத்தார். விழாவில் முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம், ஆசிரியர் நந்திவர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பி சிவனேசன் வரவேற்புரையும் இறுதியாக பழனி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் அழகிரி சாமி நன்றியுரை ஆற்றினார்கள். 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாய்மண் தமிழ்நாடே!  படைப்பு: சி. விமலா அரசு சட்டக் கல்லூரி மாணவி, நாமக்கல்

அனைவருக்கும் வணக்கம்.. நான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிட்டேன். நீங்க சொல்லலியா? ஆமா ஜூலை 18 தான் பிறந்தநாள். தமிழ்நாட்டுக்கு, நம்மை வாழவைக்கும் தமிழ்நாட்டை நாமும் வாழ்த்த வேண்டும். வாழ்த்துகள் தாய்மண் தமிழ்நாடே! வாழ்த்து கூற வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி.. சரி அடுத்து என்ன? 

அடுத்து வரலாறு தான். நமக்கு கிடைத்துள்ள ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு வரலாறு இருக்கும் அல்லவா? அதுபோன்று “தமிழ்நாடு”, தமிழ்நாடு என இப்பொழுது அழைப்பதற்கும் ஒரு வரலாறு உண்டு. தமிழ்நாட்டில் ஜூலை 18-ம் தேதி ”தமிழ்நாடு நாள்” கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு நாள் வரலாற்றில் இருக்கும் தியாகங்கள் என்ன என அறிந்துகொள்வோம். வாங்க!

சுதந்திரத்திற்கு முன்

ஆங்கிலேயர்கள் ஆட்சியில், இந்தியாவில் அவர்கள் கைப்பற்றிய இடங்களை மூன்று மாகாணமாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் தென் பகுதியில் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மக்களை கொண்ட பகுதி மெட்ராஸ் மாகாணம் என்று இருந்தது. 

சுதந்திரத்திற்கு பின்

1947-ம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின்பு, ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற ஆட்சி அமைப்பு சிறிது காலத்திற்கு அப்படியே பின்பற்றப்பட்டது. 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்படி, தமிழ் பேசும் மக்களை கொண்டு உருவான பகுதிதான், தற்போது தமிழ்நாடு. ஆனால், அப்பகுதிக்கு சூட்டப்பட்ட பெயர் ”மெட்ராஸ் ஸ்டேட்”, அதாவது மெட்ராஸ் மாநிலம்.

பெயருக்கு எதிர்ப்பு

மாநிலத்தின் பெயரும் மெட்ராஸ், தலைநகரின் பெயரும் மெட்ராஸ் என மாற்றப்பட்டது. இதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பெரியாரின் திராவிட தேசம் கருத்து, தமிழ் மக்களின் உரிமைகள் ஆகியவை சர்ச்சையை வலுத்துக்கொண்டே சென்றது. அப்போது, மெட்ராஸ் ஸ்டேட் பெயரை “தமிழ்நாடு” என மாற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கரலிங்கனார், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டார். 12 கோரிக்கைகளுடன் தொடங்கிய அவரின் பயணம் பெறும் கவனம் பெற்றது. பல அரசியல் தலைவர்கள் அவரை சந்தித்து, உண்ணாவிரத்தை கைவிட கோரிக்கை வைத்த நிலையிலும், தமிழ்நாடு பெயர் மாறும் வரை உண்ணாவிரதத்தை தொடர்வேன் என் உறுதியாக நின்றார்.

76 நாட்கள் உண்ணாவிரதம் போராட்டம் செய்த சங்கரலிங்கனார், உடல் நிலை மோசமாகி 1956-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் நாள் உயிர் நீத்தார். அவரின் போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 1957-ம் ஆண்டு திமுக சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தை கொண்டு வந்தது.

பெயர் மாற்ற போராட்டம்

1957-ம் ஆண்டு திமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 42 வாக்குகள் பதிவாகி தோல்வி அடைந்தது. தொடர்ந்து, மீண்டும் 1961-ம் ஆண்டு சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை பெயர் மாற்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை காமராஜர் தள்ளி வைத்தார். இதனை எதிர்த்து திமுக வெளிநடப்பு செய்தது. ஒரு மாத கால இடைவெளியில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம், காங்கிரஸ் கட்சியில் ஆதரவின்றி மீண்டும் தோல்வி அடைந்தது.

அண்ணாதுரையில் ஆதரவு

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த குப்தா என்பவர் மூலம் நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி மாற்றத்திற்கான தனிநபர் மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு அண்ணாதுரை ஆதரவு தெரிவித்தார். தமிழ் சங்க இலக்கியங்களில் தமிழ்நாடு என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் காட்டி வாதிட்டார். அப்போது, தமிழ் மண்ணில் சேர, சோல, பாண்டியன் என தனித்தனியாக இருந்தன. தமிழ்நாடு என பெயர் மாற்றத்தால் என்ன லாபம் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளை லோக்சபா மற்றும் ராஜ்யசபா என பெயர் மாற்றம் செய்து நீங்கள் என்ன லாபம் அடைந்தீர்கள் என வாதிட்டார் அண்ணாதுரை. 1963-ம் ஆண்டு மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதுவும் தோல்வி அடைந்தது.

முதலமைச்சர் அண்ணாதுரை

1967-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி அண்ணாதுரை மெட்ராஸ் ஸ்டேட் முதலமைச்சராக தேர்வானார். இதனைத் தொடர்ந்து, 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தை முதலமைச்சராக கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு வரவேற்பு கிடைத்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 1968-ம் ஆண்டு ஒப்பதல் வழங்கப்பட்டது. இறுதியாக 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி அதிகாரப்பூர்வமாக ” தமிழ்நாடு ” பெயர் மாற்றம் அரசிதழில் அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 1 Vs ஜூலை 18

நவம்பர் 1-ம் தேதி மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு “மெட்ராஸ் ஸ்டேட்”(Madras State) உருவானது. தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு வித்திட்ட ஜூலை 18 தான் தமிழ்நாட்டுக்கு பிறந்தநாள். அப்புறம் வரலாறு முடித்தது. போய் வாழ்த்துங்கள் தமிழ்நாட்டை! தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க வாழ்க வாழ்கவே!

பூங்கா இதழ் (The News Park) கருத்து: இரண்டு கட்டுரைகளிலும் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைவராலும் அறியப்பட வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles