Advertisement

அரசியலமைப்பு கூறும் மக்களவைத் துணை சபாநாயகர் பதவி காலியாக இருக்கலாமா? எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அரசியலமைப்பு அந்தஸ்து ஏன் வழங்க கூடாது?

இந்திய தேசத்துக்கு ஒரு குடியரசுத் தலைவர், ஒரு துணை குடியரசுத் தலைவர் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெரிவிக்கிறது.  குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவரின் தேர்வு முறை, அதிகாரங்கள் உள்ளிட்டவற்றை அரசியலமைப்பு விரிவாக எடுத்துரைத்துள்ளது. இதைப் போலவே தேசத்தின் பிரதம அமைச்சர் மற்றும் அமைச்சரவை குறித்தும் நமது அரசியலமைப்புச் சட்டம் விவரித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில்   பத்து சதவீத எண்ணிக்கைக்கு குறையாமல் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவையில்   10 சதவீதமான 55 உறுப்பினர்களை கொண்ட பெரிய கட்சி இல்லாத காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து யாருக்கும் வழங்கப்படவில்லை. தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு மத்திய அமைச்சருக்கான அந்தஸ்து வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் நிழல் பிரதமரை போன்ற அந்தஸ்து உடையவர். தேசிய மனித உரிமைகள் ஆணையம், லோக்பால், மத்திய தகவல் ஆணையம், மத்திய கண்காணிப்பு ஆணையம், இந்திய தேர்தல் ஆணையம் போன்ற  பல முக்கிய உயர் அமைப்புகளில் உள்ள முக்கிய பதவிகளுக்கு நியமனம் செய்யும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இடம் பெறுகிறார். நாடாளுமன்ற மக்களவையின் பல்வேறு துணை குழுக்களில் எதிர்க்கட்சித் தலைவரின் பங்கு முக்கியத்துவம் உடையதாகும். 

நாடாளுமன்ற ஜனநாயகம் சிறப்பாக செயல்பட எதிர்க்கட்சித் தலைவர் தூணாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்திய   அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருக்க வேண்டும் என்றும் அவருடைய பணிகள் என்ன என்றும் விரிவாக தெரிவிக்கப்படவில்லை. மக்களாட்சியை வலுப்படுத்த தகுந்த அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு   அரசியலமைப்பில் உரிய அந்தஸ்தை வழங்க வேண்டிய நேரம் இதுவாகும். 

இந்திய அரசியலமைப்பின் 93 ஆம் கோட்பாடு நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஒரு தலைவரும் ஒரு துணை தலைவரும் (அதாவது சபாநாயகரும் துணை சபாநாயகரும்) இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவது வழக்கமான மரபாக இருந்து வரும் நிலையில் துணை சபாநாயகர் பதவியை காலியாக வைத்திருப்பது சரியானது அல்ல. எனவே, துணை சபாநாயகர் பதவிக்கு ஒரு நாடாளுமன்ற மக்களவை   உறுப்பினரை   உடனடியாக தேர்வு செய்வது அவசியமானதாகும். ஜனநாயக மாண்புகளை பின்பற்ற எதிர்க்கட்சியைச் சார்ந்தவருக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்குவது ஒன்றும் தவறல்ல.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles