கடந்த 1938 டிசம்பர் மாதத்தில் வேதியியல் விஞ்ஞானிகள் ஓட்டோ ஹான்ஸ் மற்றும் ஃபிரிட்ஸ் ஸ்ட்ராஸ்மேன் என்பவர்கள் அணுக்கரு பிளவை (Nuclear Fusion) கண்டுபிடித்தனர். அதாவது, ஒரு அணுவை பிரிக்கவும் சேர்க்கவும் முடியும் என்று கண்டுபிடித்து அணுசக்தி ஆற்றலை உலகுக்கு வழங்கினார்கள். யுரேனியம் அணுக்கரு நியூட்ரான்களால் தாக்கப்படும்போது அது பேரியம், கிரிப்டான் ஆகிய அணுவெடை குறைந்த அணுக்கருக்களாகப் பிளந்து 200 மெகா எலெக்ட்ரான் வோல்ட் அளவு ஆற்றல் உருவானதை கண்டறிந்தனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட அணுசக்தி பல நன்மைகளையும் தீமைகளையும் வழங்க கூடியதாக அமைந்தது.
நீர், காற்று, சூரிய சக்திகள் மூலம் உருவாக்கப்படும் மின்சாரத்தை விட எளிதாக அதிக மின்சாரத்தை அணுமின் திட்டங்கள் உருவாக்க முடிகிறது. மற்ற மின் திட்டங்களில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை விட அணு மின் திட்டத்தில் பாதிப்பு குறைவு என்பதோடு மின்சார உற்பத்திச் செலவும் குறைவானதாக உள்ளது. அணு ஆற்றல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மருத்துவ உலகிலும் இந்த சக்தி பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது அதே நேரத்தில் அணு ஆயுதங்களின் உற்பத்தியும் கடந்த 50 ஆண்டுகளாக பெருகி உள்ளது.
ஒரு அணுவில் ஆற்றல் மிக்க ஒரு பொருளின் துகள்களை மோதச் செய்யும்போது, அது அந்த அணுவினை இரண்டு சிறிய அணுக்களாகவும் மற்றும் சில நியூட்ரான்களாகவும் பிரிக்கும். பின்னர், அந்த நியூட்ரான்கள் மற்ற அணுக்களை தாக்கும் இது ஒரு சங்கிலித் தொடரை (chain reaction) ஏற்படுத்துகிறது. இந்த செயலில் மிக அதிகமான வெப்பம் உருவாக்கப்படுகிறது இந்த வெப்பமானது அணு உலையில் உள்ள தண்ணீருக்கு மாற்றப்பட்டு நீராவியாகிறது அந்த நீராவி விசையாழிகளின் மூலம் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தை உலகம் மறக்க இயலாது. இங்கு நான்கு அணு உலைகள் இருந்தன. அவற்றில் ஒன்றின் நீர் குளிர்வு சாதனம் செயல்படாததன் காரணமாக, வெப்பம் அதிகரித்து, அணு உலையின் மையம் உருக ஆரம்பித்தது. அதனால் சுமார் 20 வகையான கதிர் வீச்சுப் பொருள்கள் காற்று மண்டலத்தில் புகுந்தன. காற்று மண்டலத்தில் புகுந்த இக்கதிர் வீச்சுப் பொருள்கள் அங்கிருந்த நிலத்தில் விழுந்து சிதறின. இந்த கதிரியக்க வீழ் பொருள்கள் பத்து ஹிரோஷிமாக் குண்டுகளுக்கு சமமானதாக கருத்தப்படுகின்றது. ஜப்பானில் வீசப்பட்ட இரண்டு அணுகுண்டின் கதிர்வீச்சை காட்டிலும் கிட்டத்தட்ட 400 மடங்கு கதிரியக்கத்தை அந்த விபத்து வெளியிட்டது. இதனால் நேரடியாக 30 பேர் உயிரிழந்தனர் என்றும் 2000 பேர் மறைமுகமாக உயிரிழந்தனர் என்றும் கூறப்பட்ட போதிலும் உண்மையாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கலைக்கப்பட்ட சோவியத் ரஷ்ய அரசுக்கு மட்டுமே தெரியும். பிப்யாட் நகரத்தை சுற்றி இருந்த 1,15,000 மக்கள் வெளியேற்றப்பட்டுஅணு உலை சுற்றி இருந்த 1,50,00 சதுர கிலோமீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த தாவரங்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் அழிவுக்குள்ளானது.
அமெரிக்காவும் ரஷ்யாவும் மிக அதிக அளவில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து உலகில் 90 சதவீத அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடிய நாடுகளாக இருக்கின்றன. இதனைத் தவிர சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளது. 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில், அமெரிக்கா ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது இரண்டு அணுகுண்டுகளை வெடிக்கச் செய்தது. குண்டுவெடிப்புகளில் 1,50,000 முதல் 2,46,000 பேர் வரை கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலுக்கும் ஈரான், லெபனான், சிரியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையேயான மோதல் மூன்றாம் உலகப்போரை உருவாக்கி விடுமோ? என்ற அச்சம் கடந்த ஓராண்டு காலமாக இருந்து வருகிறது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் பெரும்பாலான நாடுகள் ஈடுபட்டதை போல இரண்டு அணிகளாக நாடுகள் பிளவுபட்டு உலகப்போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை. அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் உலகில் மனிதன் மட்டுமல்ல எந்த உயிரினமும் உயிருடன் இருக்க முடியாது. அத்தகைய ஆபத்து கொண்டுள்ள அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகள் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் எவரும் உலகில் உயிர் வாழ முடியாது என்ற உண்மையை தெரிந்து வைத்திருப்பதால் மூன்றாம் உலகப்போர் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. அதாவது, மூன்றாம் உலகப்போரை போர் ஏற்படாமல் தவிர்க்கும் சக்தியாக அணு ஆயுதங்களே விளங்குகின்றன என்றால் மிகையாகாது.
ஆக்கத்தில் உதவி: இரா.இராஜஹரிஹரன், பூங்கா இதழ் & நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் பயிற்சி கட்டுரையாளர்/கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்
கடன் வழங்க மறுத்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு https://theconsumerpark.com/loan-rejection-compensation-dr-v-ramaraj-namakkal-consumer-court