பலவற்றை நாம் ‘பார்க்கிறோம்’ ஆனால் ‘கவனிப்பதில்லை’. பல விஷயங்களைப் ‘படிக்கிறோம்’ ஆனால் ‘மனதில் பதிய வைத்துக் கொள்வதில்லை’. சில விஷயங்கள் நம்மை ‘படபடக்க வைத்து சில விநாடிகள் உறுத்துகின்றன’ ஆனால் அதை அப்படியே ‘உதறித் தள்ளிவிடுகிறோம்’. இவற்றில் ஒன்றுதான் சமத்துவமின்மை. ஆம், நம் வீட்டில் இருந்து தொடங்கி, பின் ஒரு சமூக பிரச்சனையில் முடிகிறது சமத்துவமின்மை. வீடுகளில் ஆண் பிள்ளைகளுக்கு கிடைக்கும் சுதந்திரம் , பெண் பிள்ளைகள் என்று வரும் பொழுது சற்று மாற்றம் கண்டு விமர்சனத்துக்கு உள்ளாவது, என்பது நிதர்சனமான உண்மை! ஆண், பெண் பிள்ளைகள் இருவரையும் சமமாக நடத்துவதில் இருந்து தொடங்குகிறது சமத்துவம்.
பொருளாதார விடுதலை
பெண்கள் தான் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும், ஆண்கள் தான் சம்பாதித்து (Bread winner) குடும்பத்தை வழி நடத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. அந்த நிலை தற்போது பெரும் மாற்றத்தை கண்டுள்ளது என்றாலும் இன்றும் பல வீடுகளில் இந்த மாற்றம் ஏற்படவில்லை. ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான வேலையை செய்தாலும் ஆணுக்கு வழங்கப்படுவதை போல பெண்ணுக்கு சமமான சம்பளம் வழங்காமல் குறைந்த ஊதியம் வழங்கப்படுவது பெரும்பாலான இடங்களில் நிலவுகிறது.
தன்னுடைய இலக்கை (Goals) அடைய திருமணம் தடையாக இருக்கும், தாம் சுதந்திரமாக வாழ வேண்டும், உயர்கல்வி பெற வேண்டும் என்பது போன்ற காரணங்களால் சில பெண்கள் திருமணம் செய்ய மறுக்கின்றனர். திருமணத்திற்கு பின் சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளையும் குழந்தை பராமரிப்பையும் பெண்களே செய்ய வேண்டியுள்ளது. திருமணத்திற்கு பின் என்னை வேலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டாங்க. அதனால் எனக்கு பொருளாதார விடுதலை கிடைக்காது! போன்ற எண்ணங்கள் பெண்களின் மனதில் புதைந்து கிடக்கின்றன. அதுவே, ஒரு ஆண் என்றால் அவருக்கு திருமணத்திற்கு பின்பும் பெரிதும் எந்த மாற்றம் இல்லாத வாழ்க்கைதான், இலக்கை (Goals) அடையவதிலும், வேலைக்கு செல்வதிலும் எந்த கட்டுப்பாடும் சமூகத்தாலும் குடும்பத்தாலும் திணிக்கப்பட இல்லை. இந்த நிலை இன்றும் சமத்துவமின்மையை நீடிக்கவே செய்கிறதே தவிர சமத்துவத்தை ஏற்படுத்தவில்லை. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் என பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து பாதுகாக்க கல்வி பயின்றதும் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். எனவே, வீட்டில் பாலின சமத்துவத்தை அடையாமல் பணியிடத்தில் பாலின சமத்துவத்தை அடைய முடியாது
135 ஆம் இடம்
பாலின சமத்துவம் வழங்குவதில் இந்தியா 146 நாடுகளில் 135 ஆம் இடத்தில் உள்ளது என உலகப் பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ல், இந்த அமைப்பு வெளியிட்ட தகவலில் பாலின சமத்துவத்தில் 87 ஆம் இடம் பிடித்த இந்திய தற்போது 135 ஆம் இடம் பிடித்துள்ளது வேதனையாக உள்ளது. உலகப் பொருளாதார மன்ற கூற்றுப்படி, இந்தியாவை உள்ளடக்கிய தெற்காசிய மண்டலத்தில் பாலின இடைவெளியைக் களைவதற்குச் சுமார் 200 ஆண்டுகள் தேவைப்படலாம்!
அரசியல் அதிகாரம்
உலகளவில் பெண்கள் மத்தியில் இருக்கும் அரசியல் அதிகாரத்தை கருத்தில் கொண்டால், இந்தியாவில் பாலின சமத்துவ இடைவெளி அதிகமாக உள்ளது. 27 வருட கால வரலாறு கொண்டது பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவின் நோக்கம் மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்காக ஒதுக்குவதே ஆகும். பத்து வருடங்களுக்கொருமுறை நடத்தப்படும் சென்சஸூக்கு பிறகு, லோக்சபா மற்றும் ராஜ்யசபை தொகுதி மறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும், 2029 பொதுத் தேர்தலில் போதே பெண்கள் இட ஒதுக்கீடு நிகழும் என்று பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதா எப்போது நடைமுறைக்கு வரும்? என்பதை உறுதியுடன் கூற முடியாது.
தேர்தலில் மிகவும் குறைவான அளவில்தான் பெண்கள் போட்டியிடுகின்றன. அவர்களும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு,துன்புறுத்தல், அச்சுறுத்தல் ஆகியவற்றை சந்திக்க நேரிடுகிறது. எனவே பல பெண்கள் அரசியலில் தன்னை இணைத்து கொள்வதில் இருந்து பின் செல்கின்றனர். அரசியல் அர்ப்பணிப்பும், போதுமான சட்டம் கட்டமைப்புகள், கொள்கைக் கட்டமைப்புகளும் இருந்தால் மட்டுமே பெண்கள், ஆண்கள் இருவருக்கும் சமமான களத்தை வழங்கக்கூடிய மாற்றம் சாத்தியப்படும்.
ஆண்களுக்கான சமத்துவம்
பல இடங்களில் ஆண்களுக்கு சட்டத்தில் சம உரிமை வழங்கப்படவில்லை . உதாரணமாக, தவறான அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளை ஆண்கள் மீது சுமத்துவது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் மூலம் அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது. ஆண்களும் சில தருணங்களில் பெண்களால் அச்சுறுத்தி கற்பழிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பாதிக்கப்படும் ஆண்கள் புகார் செய்தால் சம்பந்தப்பட்ட பெண்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு சட்டத்தில் இன்றளவும் இடமில்லைஎன்பதும் சமத்துவமின்மையே. பெண்களுக்கு முன்னுரிமை என்ற பெயரில் ஆண்களுக்கு சமத்துவம் வழங்கப்படாத அநீதியும் சில நிகழ்வுகளில் தொடர்ந்து இருந்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.
தந்தையர் விடுப்பு
பெண்களுக்கு குழந்தை பிரசவத்தின் போது மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்த குழந்தையை பராமரிப்பது மட்டுமல்லாமல் வீட்டு வேலைகளையும் குழந்தை பெற்றெடுத்த பெண் செய்ய வேண்டிய நிலையே உள்ளது. குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு ஓய்வு வழங்க வேண்டும் என்ற கருத்துக்கு மாறாக வீடுகளில் சூழல் நிலவுகிறது. இதனை மாற்றுவதற்கு குழந்தையை பெற்றெடுத்த பெண்ணுக்கு ஓய்வு அளித்து வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்யவும் குழந்தையை பராமரிக்கவும் பிறந்த குழந்தையின் தந்தையான ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்குவது அவசியமாகும். குழந்தை பிறக்கும் போது மனைவியுடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் குழந்தை பிறந்த பின்பு சில காலத்திற்கு குழந்தையையும் மனைவியும் கவனிக்க வேண்டும் என்ற மனம் படைத்த ஆண்களுக்கு மகப்பேறு விடுப்பு இல்லாதது சமத்துவமின்மையை காட்டுகிறது.
என்று முடியும் இந்த சமத்துவமின்மை? பாலின சமத்துவம் என்பது மாயைதானோ?
படைப்பு: பல்கீஸ் பீவி. மு, பூங்கா இதழ் & நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் பயிற்சி கட்டுரையாளர் மற்றும் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவி.
Super….. yes definitely right male are not treat equal….. Your article is very good. Keep it up
Such a great work balkis beevee.Well said about paternity leave.keep doing good 👍👏
Great initiative, congratulations 👏👏