உலகில் மனித குலம் தோன்றியபோது மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை இயற்கையின் முக்கிய சக்திகளாக ஆதி கால மனிதர்கள் அடையாளம் கண்டார்கள். அவர்களுக்கு இயற்கையைத் தவிர வேறு எந்த சிந்தனைகளும் தோன்றவில்லை. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட போது மனிதர்கள் இயற்கை சக்திகளை வழிபட தொடங்கினார்கள். வழிபாடு என்ற சொல்லை வழி+படு என பிரித்துப் பார்க்கும் போது வழிப்படுத்துதல் என்று அர்த்தத்தை தருகிறது. வழிபடு என்பதற்கு வணங்குதல், பின்பற்றுதல் என்ற பொருள்களை தமிழ் அகராதிகள் தெரிவிக்கின்றன. பழந்தமிழர்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என அழைத்து வழிபட்டுள்ளார்கள்.
நிலம்
நிலத்திற்கு உயிர்ப்பு உண்டு என்று பழந்தமிழர்கள் கருதி எந்த ஒரு வேளாண்மை பணியை தொடங்கினாலும் நிலத்தை வழிபட்டு தொடங்கினார்கள். தற்போதும் நாட்டுப்புற கிராமங்களில் வேளாண் நடவு பணிகளை தொடங்கும் முன்பு நிலத்தை வழிபடும் வழக்கம் நிலவுகிறது. வேளாண் நிலங்களில் அறுவடை முடிந்ததும் கொண்டாடப்படும் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா நிலத்தை வழிபடும் வழிபாட்டு முறைக்கு சிறந்த சான்றாகும்.
நீர்
நீரின்றி உலகில்லை என்பதை எவராலும் மறுக்க முடியாது. மனிதன் வாழ குடிநீர் அவசியம் என்பதோடு வேளாண் உணவு உற்பத்திக்கு நீர் பாசனம் மிகவும் அவசியமானதாகும். கடல் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கடலில் இருந்து மீன்பிடித்தல், முத்து குளித்தல் போன்ற பல தொழில்களை செய்தனர். கடல் சீற்றங்களில் இருந்து தம்மை காத்துக் கொள்ள கடலை வழிபட்டனர். கடல் இல்லாத பிரதேசங்களில் ஆற்று நீரையும் குளத்து நீரையும் மக்கள் பாசனத்துக்கு பயன்படுத்தினர். இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியதோடு ஆறுகளையும் குளங்களையும் வழிபட்டனர்.
நெருப்பு
விலங்குகள் இயற்கையில் இருந்து கிடைக்கும் உணவுகளை உண்ணும் நிலையில் நெருப்பின் மூலம் இயற்கையிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களை நெருப்பில் சமைத்து உண்ணத் தொடங்கிய பின்னரே விலங்குகளிலிருந்து மனிதன் வேறுபட்டான். மனிதனின் வாழ்க்கைக்கு நெருப்பு அவசியமானதாக இருப்பதோடு நெருப்பு மிகுந்த வலிமையானது என்பதையும் அறிந்து கொண்டு நெருப்பிலிருந்து ஏற்படும் ஆபத்துகளில் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இயற்கையான நெருப்பை மனிதன் வழிபட தொடங்கினான்.
காற்று
காற்று இல்லாத இடம் கிடையாது. காற்று இல்லை எனில் மனிதனின் மூச்சு நின்றுவிடும். பல கண்டுபிடிப்புகளின் தாயகம் காற்று. இதே காற்று பலத்த வேகத்தில் வீசினால் பல அழிவுகளும் உருவாகின்றன. காற்றை வழிபடுவது அதன் இயற்கை சீற்றத்தை தணிக்கும் என மக்கள் நம்பியதால் காற்றை வழிபட தொடங்கினர்.
ஆகாயம்
வானில் இருந்து தோன்றும் இடி, மின்னல், மழை மக்களுக்கு மிகுந்த நன்மையும் ஏற்படுகிறது தீமையும் ஏற்படுகிறது. மிகுந்த மழைப்பொழிவை ஏற்படுத்தி அழிவை தராமல் ஆகாயம் இருக்க வேண்டும் என்றால் ஆகாயத்தை வழிபடுவது அவசியம் என்று முன்னோர் கருதினார்கள். ஆகாய வழிபாட்டில் இருந்து தோன்றியதே சூரிய வழிபாடு, சந்திர வழிபாடு போன்றவைகளாகும்.
பஞ்சபூத வழிபாடு
இயற்கை வழிபாட்டின் நீட்சியாக இறைவழிபாடு உருவெடுத்து ஆக்கலும் அழித்தலும் இறைவன் சிவபெருமான் என மக்கள் கருதியதன் அடிப்படையில் பஞ்சபூத சிவாலயங்களாக நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் திருத்தலங்கள் அமைந்துள்ளன.
எண் | இயற்கை | கோவில் | இடம் | லிங்கம் |
1 | நிலம் | ஏகாம்பரநாதர் கோயில் | காஞ்சிபுரம் | பிருத்வி லிங்கம் |
2 | நீர் | ஜம்புகேசுவரர் கோயில் | திருவானைக்காவல், திருச்சி | அப்பு லிங்கம் அல்லது ஜம்பு லிங்கம் |
3 | நெருப்பு | அண்ணாமலையார் கோயில் | திருவண்ணாமலை | அக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்கம் |
4 | காற்று | காளத்தீசுவரர் கோயில் | திருக்காளத்திசித்தூர் அருகில், ஆந்திரா | வாயு லிங்கம் |
5 | ஆகாயம் | நடராசர் கோயில் | சிதம்பரம் | ஆகாச லிங்கம் |
இயற்கை பாதுகாப்பு
இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது தற்போதைய அவசிய தேவையான உள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்கள் கிடைக்க தகுந்த முன்னேற்பாடுகளை செய்வதும் அவசியமானதாகும். இயற்கையை பாதுகாக்க தவறினால் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நிலைமை கேள்விக்குறியாகும். தமிழர்களின் பண்பாடான இயற்கையை வழிபடுவோம்! இயற்கையை பாதுகாப்போம்!
எடிசன் தனது அறுபத்தைந்தாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கையில், அவரைப் பேட்டி கண்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர், “இத்தனை கண்டுபிடிப்புகளை உங்களைச் செய்யத் தூண்டிய ஆண்டவரின் கருணையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?” என்று கேட்டதும், எடிசன் சிரித்துக் கொண்டே சொன்னார், “இன்று மதியம் நான் உண்ட உணவில் அற்புதமான மீன் கறி ஒன்றை எனக்குப் பரிமாறினார்கள். எனக்கு கிடைத்த மதிய உணவு கடவுளின் கருணை என்றால், அந்த மீனுக்கு கடவுள் காட்டிய கருணை என்ன.? நான் உண்ட மீனையும் அந்தக் கடவுள்தானே படைத்திருக்க வேண்டும்…?” என்று கேட்டுச் சிரித்தார். தொடர்ந்து அவரே சொன்னார், “இயற்கைதான் கடவுள். இயற்கைக்குக் கருணையோ, கொடூரத் தன்மையோ எதுவும் கிடையாது. இயற்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. அது தன் போக்கில் எல்லாச் செயல்களையும் செய்து முடிக்கிறது!” என்றார் எடிசன். |
பஞ்சபூத சிவாலயங்களின் அழகு மிகுந்த படங்களை காண கீழே உள்ள படத்தை தொடவும்.