Friday, September 19, 2025
spot_img

மறைந்துவிட்ட பல்லுயிர் காவலனான இட்டேரி சுற்றுச்சூழல் அமைப்பு – தமிழர்களின் பாரம்பரியம் – படித்து தெரிந்து கொள்ளலாமே!

சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன. இட்டேரி என்பது கொங்கு நாட்டு சொல்._ இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை.  இந்த இட்டேரி என்பது “ஒரு தனி உலகம். இதை இட்டேரி சுற்றுச்சூழல் அமைப்பு (Itteri eco-system) என்று அழைக்கலாம். 

இட்டேரியில் கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும். இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன.  இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன. கறையான் புற்றுகள், எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும்.  இவற்றை உணவாக கொள்ள வண்டுகள், நண்டுகள் பாம்புகள், பாப்பிராண்டிகள், உடும்புகள், ஓணான்கள்,கோழிகள், குருவிகள் அலுங்குகள், ஆமைகள், பருந்துகள், நரிகள் போன்ற பல உயிர்களும் இருந்தன.

மனிதர்களுக்கு கோவப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம், போன்ற சுவையான கனிவகைகளும், கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக்கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருட்களும், மூலிகைகளும் கிடைத்தன. ஏன் இன்று பணமழை பொழியும் கண்வலிப்பூக்கள் காய்கள் வேலியில்தான் ஆங்காங்கு படர்ந்திருக்கும். இந்த வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓனான்கள், தவளைகள்  பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழித்தொழித்தன. பாம்புகள், ஆந்தைகள்  எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையை பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின.  பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின.  “மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின.”

ஆனால், இன்று விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறியபோது இந்த வேலிகளும் அழிந்தன. வண்டித்தடங்கள் தார் சாலைகளாக மாறியபோது இட்டேரிகள் மறைந்தன. கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களுக்கு உயிர் வேலியை அழித்து காக்கா, குருவி கூட கூடு கட்டாத கம்பிவேலிகள் அமைக்கப்பட்டன. இதனால் எண்ணற்ற உயிரினங்கள் வாழ இடமின்றி போனது. அதில் முக்கியமானது குள்ளநரிகள்.  இவை மயில்களுக்கு முக்கியமான எதிரிகள். இவை மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக்கொள்ளும்.  இவற்றை நாம் எங்கும் காண முடியவில்லை. காடுகளில் மட்டும் ஓரிரு இணைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகின்றன.

விளைவு?? மயில்களின் எண்ணிக்கை பன்மடங்குப் பெருகி விட்டன. “நாம் விதைத்தது நாம் அறுவடை செய்கிறோம்.” நாம் பள்ளியில் குழந்தைகளுக்கு பல்லுயிரியம் பற்றி குழந்தைகளிடம் பாடம் எடுக்கிறோம்.  ஆனால், பள்ளிக்குச் செல்லாத நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பல்லுயிர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் வகையில் உயிர்வேலிகள் அமைத்தனர்??? நமக்கு பல்லுயிரியம் பற்றி என்ன தெரியும்? உலக அரசியல் தெரியாமல்,  சாதி அரசியல் பேசிக்கொண்டு, குரங்கு வித்தைகள், கேளிக்கைகள் ஆடம்பரம் இவற்றிற்கு பணம்  செலவு  செய்துகொண்டு,  மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள், பன்றிப்பால், சக்கைக் குடிநீர் இவற்றை உண்டு அடுத்தவர்கள் அனுப்பும் கேளிக்கைச் செய்திகளைப் பகிர்வதைத்தவிற வேறென்னத் தெரியும்? 

தமிழர்களின் பண்பாடும், வரலாறும் தெரியாத அளவிற்கு நம் வளர்ச்சி உள்ளது! கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொண்டால் புண்ணாகத்தான் செய்யும். பல்லுயிர் வளர்ச்சி நிலவிட, மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாறுங்கள். இல்லையேல் இழப்புகளை அனுபவிக்கத்தான் வேண்டும்…படித்ததில் பகிர்ந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles