வாழ்வதும் இறப்பதும் நம் கைகளில் இல்லை
ஒரு இளம் தம்பதிகள் மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்றுக் கொண்டிருந்தது பேருந்து ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள முடிவு செய்து பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.
ஆளில்லாத வனாந்திரம், மான்களும் மயில்களும் குயில்களின் இசையோடு விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால், அவர்கள் மனம் அதில் லயிக்கவில்லை. இறங்கிய இடத்திலிருந்து சற்றுத் தள்ளி இருந்த பாறையில் ஏறினர். உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல்கள் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி கரங்களைப் பற்றிக் கொண்டனர். வனக்குரங்குகள் மரங்களிலிருந்து இவர்களை நோக்கி க்ரீ….ச்சிட்டன. “அப்போது, மிகப் பெரிய சப்தம்”. திரும்பிப் பார்த்தார்கள்!
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது மலையிலிருந்து மிகப் பெரிய பாறை விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது. ஒருவரும் உயிருடன் தப்பவில்லை. இவர்கள் இருவரைத் தவிர. பாறைக்கு அடியில் அனைவருமே சமாதி ஆகி இருந்தனர். குயிலோசை இல்லை. மான்களும் மயில்களும் ஒடுங்கி நின்றிருந்தன. வனக்குரங்கு கள் மலை உச்சிக்கு பயந்து தாவி ஓடின. இளம் தம்பதிகள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவரும் சொல்லிக் கொண்டார்கள். “நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கவே கூடாது”. ஏன் அப்படிச் சொன்னார்கள்? உங்களால் யூகிக்க முடிகிறதா? அவர்கள் அந்தப் பேருந்தில் இருந்து இறங்கி இருக்காமல் பயணித்து இருந்தால் சில நிமிடங்களுக்கு முன்னரே அந்தப் பேருந்து அந்த இடத்தைக் கடந்திருக்கும். பாறை விழும் பேராபத்தில் இருந்து அனைவரும் உயிருடன் தப்பி இருப்பார்கள்.
தற்கொலை செய்துக் கொள்ள வந்த இளம் தம்பதிகள் உயிரோடு இருக்கிறார்கள். வாழும் சிந்தனையுள்ளவர்கள் விபத்தில் பலியானார்கள். “வாழ்வதும் இறப்பதும் நம் கைகளில் இல்லை”. முடிவைத் தேடி நாம் ஒரு போதும் செல்லக்கூடாது.
கரையேரதும் சாமர்த்தியம் தான்
ராஜன் இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள். அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது. எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது.
நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது. கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது. வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்தது அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது. கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலுங்கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது. சோகமே உருவாகி விட்டான்.
ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான் ராஜன். மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது. அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள். “ஐயா ஏன் சாமி எதுக்கு கலக்குறீங்க?, இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே, அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே” என்றாள்.
புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகுவெட்டி ஆனான், அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது. வீட்டில் தினமும் பொரியல், குழம்பு சமையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது. ஒருநாள் ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள். “அத்தான்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகம் இருப்பதுபோல் தெரியுதே? என்ன அது?” விறகு வெட்டியான நம்ம கொல்லன் ராஜன் சொன்னான்.
“பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் பொரியலும் கறிக் கொழம்புமாய் இருக்கும், இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதான்டி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு, இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலையே” என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள்.
“வேணாஞ்சாமி வேணாம், நீங்க ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக, என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே, அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம், காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம், கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும் என்றாள்.
மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகு வெட்டியானவன் விறகுக்கடை முதலாளியானான். வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான். ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டு விடுமா? என்ன, வந்தது கெட்ட நேரம், விறகு கடையில் தீ விபத்து! அத்தனை மூலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.
தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி. நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்தலாம் என்று. எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள். மனைவி வந்தாள். கண்ணீரை துடைத்தாள். அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியனைத்தாள்.
“இப்போ என்ன ஆயிடுச்சுன்னு ஏன் சாமி அழுகுரீக?, விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு, கரியாத்தானே ஆகியிருக்கு, ( ஏதோ … அவனது நேரம் விறகுகள் எரிந்து சாம்பல் ஆகவில்லை ) நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்” தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது. ஊக்குவிக்கற வனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான். – கவிஞர் வாலி.
ஆற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் போது கரையை கடக்க எதிர் நீச்சல் போட்டு ஆற்றோட வேகத்துக்கு தகுந்த மாதிரி கரையை அதோட போக்குல போய் கடந்து கரையேரதும் சாமர்த்தியம் தான். யாருடைய வாழ்க்கையில் தான் பிரச்சினைகளும் சோதனைகளும் இல்லை. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் உண்டு. பிரச்சினைகளை நாம் எதிர் கொள்கின்ற விதம்தான் முக்கியம்!
வெற்றியைத் தரும் தன்னம்பிக்கையும் ஊக்கமும்
மனிதப் பண்புகளில் உற்சாகம் என்பது இன்றியமையாத ஒன்று. எந்தச் செயலையும் உற்சாகத்தோடு செய்தால். அதில் பெறக்கூடிய வெற்றிக்கும் ,மன நிம்மதிக்கும் ஈடு இணையே கிடையாது. உற்சாகம்தான் சிறந்த உந்து சக்தி ! முறையான உற்சாகத்தை கொண்டால் நம்பிக்கைத் தளிர்கள் தானாக வெற்றியை கொடுக்கும்.
தேனீக்கு தேன் சேகரிப்பது ஒரு கட்டாயமான பணி அல்ல. இங்கு மங்கும் ஆனந்தமாக பறந்து மலர்களில் தேனை உறிஞ்சி அதனால் பரவசம் அடைந்து அரிய மருத்துவ குணம் கொண்ட பொருளை அதனால் சேகரிக்க முடிகிறது . விவேகம் இல்லாத உற்சாகம் என்பது தப்பியோடும் குதிரையை போன்றது. ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால், உற்சாகத்தை மட்டும் ஒரு போதும் இழக்க் கூடாது.
எண்ணற்ற வெற்றிகளை எல்லையில்லா வானம் போல் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆர்வம் என்கிற அடித்தளம் இல்லாமல் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது. இந்த உலகின் மிகப்பெரிய சொத்து ஆர்வம் தான். வெற்றி பெற வேண்டுமானால் நம்மைச் சார்ந்தவர்களையும் உடன் பணி புரிபவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் ஒத்துழைப்பும் உதவியும் கிடைத்து வெற்றி எனும் சிகரத்தில் சாவகாசமாக அமர முடியும். பிறரை ஊக்கப்படுத்தும் முன்பு நம்மை நாமே முதலில் ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: உற்சாகம் எப்போதும் சிறப்பாக பணியாற்ற உதவிடும் என்ற கருத்தையும் எல்லா முடிவுகளும் நம் கைகளில் இல்லை என்ற கருத்தையும் வலியுறுத்தும் கதைகள் எப்போதும் மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை.