பிச்சைக்காரனுக்கு வந்த அதிர்ஷ்டம். அவன் செய்த நன்றி மறந்த செயல்
ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்? அதற்கு அந்த பிச்சைகாரன்: “சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்”.
“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”“வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன். “உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”
“என்னது பிசினஸ் பார்ட்னரா…?” “ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்”.
‘முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு’ என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப் போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்” அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.
“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.“ஆமாம்ப்பா உனக்கு 90%. எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம் தேவையில்லை. நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காக தான்.”
“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்”. அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான். இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது. ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.
புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிசினஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்….
“என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான். அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்.
“உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்” என்று ரூல்ஸ் பேசினான். அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்? ஒரு செகண்ட் யோசிங்களேன் இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது. எல்லாம் நமக்கு கிடைக்கப்பெற்றாலும் காலம், நேரம், சூழல் மனிதர்களை எப்படி மாற்றுகிறது. தூக்கிவிட்டவர்களை எட்டி உதைப்பது என பல தருணங்களில் தற்போது நடக்கிறது அதையே சாமார்த்தியம் என்று பேசி புழங்காகிதம் அடைந்து விடுகிறார்கள்.
ரயில் பயணத்தில் பயந்த சிறுவனுக்கு உதவிய துண்டு சீட்டு
ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர். ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர். சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும், அந்த சிறுவன் நான் இப்போது வளர்ந்திருக்கிறேன். இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான். சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள்.
ரயில் நிலைய நடைமேடையில் நின்று, சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூற, “எனக்குத் தெரியும், நீங்கள் ஏற்கனவே என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறீர்கள்”என்றான் அந்த சிறுவன். ரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை காதுக்கருகில் மெதுவாக “மகனே, வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால், இது உனக்கானது” என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார். பயண சந்தோசத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை.
முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும், த்ரில்லாகவும் இருந்தது. ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான். கொஞ்ச நேரம் தான், கசகசவென சப்தம் அந்நியர்கள் வருவதும் போவதுமான சூழல், ஒருவருக்கு ஒருவர் உருவாக்கும் சப்தம், மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்குகிறான்.
அடுத்த ஊரில் அருகில் இருந்தவர் இறங்கிக் கொள்ள புதிதாக வந்தவரின் சோகமான முகமும், எதிரே வந்து அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும், நம் சிறுவனுக்கு சங்கடத்தைத் தருகிறது. இப்போது கொஞ்சம் பயப்படத் தொடங்குகிறான். வயிறு வலிப்பது போல் தெரிகிறது. ரயிலின் வேகத்தைப் போல தடதடவென இதயம் கொஞ்சம் வேகமாகத் துடிப்பது போல் இருக்கிறது. ஜன்னலோர இருக்கையில் தலையைத் தாழ்த்தி, மூலையில் பதுங்கிக் கொள்கிறான், அவன் கண்களில் கண்ணீர் எழுகிறது. அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது தந்தை, சட்டைப் பையில் எதையோ வைத்தது நினைவுக்கு வருகிறது.
நடுங்கும் கையால் அந்தக் காகிதத்தை எடுத்து பிரிக்கிறான், அதில்,“பயப்படாதே மகனே,நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்” என்று எழுதி இருந்தது. கற்பனை செய்யமுடியாத நம்பிக்கையின் அலை முகத்தில் எழுகிறது. பயம் அகன்று நம்பிக்கையின் புதிய கதிர் புன்னகைக்கிறது. பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி, அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து அமர்கிறான் . இதே சூழல்தான் எல்லோருக்கும் எல்லா வயதிலும் பிரச்சனைகளை சந்திக்கும் போது ஏற்படுகிறது. ஆனால், நம்பிக்கை மட்டும் சிக்கலான சூழலை வென்று வெற்றியைப் பெற்றுத் தருகிறது.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: நன்றி உணர்வுகள் இல்லாமலும் ஏன் உணர்வுகளே இல்லாத மனிதர்களாக மாறிவிடுகிறோம். நாம் பெற்ற ஒவ்வொன்றிற்கும் நன்றியையும் நன்றிஉணர்வோடும் வாழ கற்றுக் கொண்டால் வாழ்க்கை மேலும் மேம்படும். பயமும் அச்சமும்அடையாமல் இருப்போம். நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.