Advertisement

அரிய விழாவான முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பது எப்படி? – விரிவான தகவல்கள்

சரித்திரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்க்கடவுள் முருகனின் மூன்றாம் படைவீடான   அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ள பழனி என்னும் திருத்தலம் சங்க காலத்தில் ‘பொதினி’ என்றும் ‘பழனம்’ என்றும்அழைக்கப்பட்டுள்ளது. பழனி முருகனைத் தேவாதிதேவர்களும், முனிவர்களும், கருட வாகனத்தில் திருமாலும், இடப வாகனத்தில் உமையும் சிவனும், ஐராவதத்தில் இந்திரனும் இந்திராணியும் வந்து தரிசித்த வண்ணமாக இருக்கிறார்கள் என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் கூறியுள்ளார். 

சிவகிரி, சக்திகிரி எனக் கயிலாயத்தில் இருந்தனவற்றைச் சிவபெருமான் அகத்திய முனிவருக்குக் கொடுக்கும் பொருட்டு அவற்றைப் பொதிகைக்குக் கொண்டு போக இடும்பாசுரனிடம் ஆணையிட, அவற்றைக் கொண்டுபோகும் வழியில் களைப்படைந்து இப்பொழுது பழனி மலையில் இருக்கும் இடத்தில் இடும்பன் இறக்கி வைக்க, அங்கு முருகன் கருணையால் அவ்விடத்திலேயே அம்மலைகள் பொருந்தின என பழனி தலபுராணம் கூறுகிறது.

முருகன் மலை

நிலப்பரப்புக்கு மேல் 450 அடி உயரம் உடைய முருகன் மலை கோயிலுக்கு செல்ல 697 படிக்கட்டுகள்   கொண்ட படிக்கட்டு பாதை, யானை பாதை, இழுவை ரயில் பாதை (winch car) மற்றும் கம்பி வட ஊர்தி பாதை (rope car) ஆகியன உள்ளன. இந்த மலையை சுற்றி மூன்று கிலோமீட்டர் தொலைவு கொண்ட மலை பிரகாரம் உள்ளது. மலையடிவாரத்திலுள்ள பாத விநாயகர் கோயிலை வலம் வந்து மலைவீதி  சுற்றிப் பின்னர் மலை ஏறுவது  பக்தர்களின் வழக்கமாக உள்ளது.

முத்தமிழ் முருகன் மாநாடு

இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாகச் முருக வழிபாடு சிறந்து விளங்கும் நிலையில்  உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் இந்து சமய துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முத்தமிழ் முருகன் மாநாடு – 2024  வரும் 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நடைபெற உள்ளது.

குறிக்கோள்கள்

முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல், முருகனை அடைவிக்கும் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிந்து அருளேற்றம் பெற உதவுதல், மேன்மை பொலியும் முருகனடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல், முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து  ஆழ்ந்தெடுத்து அதன் முத்துக்களை உலகறிய பரப்புதல், அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகக் கோட்பாடுகளை இளைஞர்கள் மனத்தில் பதித்து வைத்து உலகை உயர்த்த வழி வகுத்தல் ஆகியன மாநாட்டின் நோக்கங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி விவரம்

இவ்விழாவில் கலைநிகழ் அரங்கம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க  ஆய்வரங்கம், கந்தன்  புகழ் பேசும் கண்காட்சி,  மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில்  வேல்கோட்டம் மற்றும் தமிழ்க்கடவுள் முருகனின்  பெருமைகளைப் பறைசாற்றும் வகையில்  மாநாடு  பந்தல் அமைக்கப்பட உள்ளது. இம்மாநாட்டில் முருகனடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமயச்  சொற்பொழிவாளர், திருப்பணி மேற்கொண்டவர்கள், திருக்கோயிலுக்குத்  தொண்டு புரிந்தோர், ஆன்மிக இலக்கிய படைப்பாளிகள் ஆகிய பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு, முருக  வழிபாட்டுச் சான்றோர்  திருப்பெயரில் விருதுகள் வழங்கப்பெறும். ஆய்வரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்குத் தனியே விருதும் வழங்கப்பட உள்ளது.

சிறப்பு பேச்சாளர்கள்

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருவண்ணாமலை ஆதீனம், திருக்கயிலாய பரம்பரை திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், பேரூர் ஆதீனம், தவத்திரு குமரகுருபர சுவாமிகள், சிரவை ஆதீனம், தவத்திரு ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார், ஆறு . திருமுருகன், இலங்கை, திரு. சுகி சிவம், திருமதி. தேச மங்கையர்க்கரசி, முனைவர்‌ அ. சிவபெருமான்‌, மேனாள்‌ பேராசிரியர்‌ – தமிழ்த்துறை அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகம்‌, முனைவர்‌ போ. சத்தியமூர்த்தி தலைவர்‌, தமிழ்த்துறை, மதுரை காமராசர்‌ பல்கலைக்கழகம்‌ உள்ளிட்டோர் ஆன்மீக சொற்பொழிவுகளை வழங்க உள்ளனர்.

ஆய்வுக் கட்டுரைகள்

உலகெங்கும் நிலவும் முருக வழிபாடு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முருகன், சங்க இலக்கியங்களில் சேயோன், மற்றும் முருகன் இலக்கியங்களில் வழிபாடு, கல்வெட்டுகளில் முருகவேள், வேத மரபிலும், தமிழ் மரபிலும் முருக வழிபாடு, சித்தர்கள் தலைவன், செந்தமிழ் முருகன், நாட்டார் வழக்காறுகளில் முருக வழிபாடு, சேய்த் தொண்டர் புராணம் மற்றும் பல்வேறு இலக்கியங்களில் முருகனடியார்கள், வடமொழி இலக்கியங்களில் தென்தமிழ் முருகன், முருகனும் முத்தமிழும், முருகன் அடியார்கள் குறித்த முக்கியத் தகவல்கள், செய்திகள் மற்றும் திருப்பணிகள் போன்ற தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்குமாறு விழா குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளார்கள். ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2024 ஜூன் 30 ஆகும். கட்டுரையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முறைகள் குறித்து விரிவாக https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்கள் பதிவு கட்டணம் இல்லாமல் மாநாட்டுக்கு அனுமதிக்கப்படுவர்.

அரிய நிகழ்வாக நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு முருக பக்தர்களிடையே மகிழ்ச்சியையும் உலகிற்கு அமைதியையும் வழங்க வேண்டும் என்பதே ஆசையாகும்.

நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி, பணி நிறைவுபெற்ற வருவாய்துறை அலுவலர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles