Advertisement

இரட்டை குடியுரிமை கொண்ட, மூச்சடைக்கக்கூடிய இயற்கை அழகு நிறைந்த, வினோத இந்திய கிராமம்

அமைவிடம்

லுங்வா கிராமம் (Longwa Village) இந்தியாவிலும் மியான்மரிலும் (பர்மா) அமைந்துள்ள கொன்யாக் நாகா (பழங்குடியினர்) கிராமமாகும். இந்த கிராமத்தின் ஒரு பகுதி இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்திலும் இந்த கிராமத்தின் மற்றொரு பகுதி மியான்மரின் சாகாயிங் பிராந்தியத்தின் நாகா சுயநிர்வாக மண்டலத்திலும் அமைந்துள்ளது. நாகலாந்தில் உள்ள திமாப்பூரிலிருந்து (Dimapur) சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லுங்வா கிராமத்திற்கு பேருந்து மற்றும் வாடகை கார் மூலமாக செல்லலாம். இந்திய ராணுவத்தின் எல்லை புற சாலை நிறுவனத்தினர் (Border Roads Organization) லுங்வா கிராமத்திற்கு மலை மேல் செல்லும் மேல்நோக்கிச் குறுகலான சாலையை சீரான முறையில் செய்துள்ளனர். திமாப்பூருக்கு விமான விமானம் அல்லது ரயில் மூலம் செல்லலாம். இந்த கிராமம் மியான்மர் நாட்டின் சகாயிங் பகுதியில் உள்ள லோஜி கிராமத்துடன் இணைக்கும் சாலையையும் கொண்டுள்ளது.

இயற்கை அழகு

தனித்துவமான கலாச்சார பாரம்பரியம், வளமான வரலாறு மற்றும் மூச்சடைக்கக்கூடிய இயற்கை அழகு நிறைந்த லுங்வா கிராமம் சுவாரசியமான உண்மைகளைக் கொண்டதாகும். டோயாங் நதி, நாகாலாந்து அறிவியல் மையம், ஹாங்காங் மார்க்கெட், ஷில்லோய் ஏரி மற்றும் பல சுற்றுலா தலங்கள் கொண்ட இந்த கிராமத்திலிருந்து சில மைல்களுக்கு அப்பால் இந்திய ராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவின் முகாம்கள் (army camps) அமைந்துள்ளது. இந்தியாவில் இரண்டு மற்றும் மியான்மரில் இரண்டு என மொத்தம் நான்கு ஆறுகள் இந்த கிராமத்தில் பாய்வதால் இயற்கை அழகு அபாரமானது. இயற்கை விரும்பிகளுக்கு பசுமையான காடுகள், மலைகள், மற்றும் அழகிய நீரோடைகள் ஆகியவற்றை கொண்டுள்ள லாங்வா ஒரு சிறந்த இடமாகும். சுற்றியுள்ள காடுகளில் யானைகள், புலிகள் உட்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இந்த கிராமத்தில் கோடைகாலத்தில் 20 முதல் 25 செல்சியஸ் வெப்பமும் குளிர்காலத்தில் 10 முதல் 15 டிகிரி வரையான செல்சியஸ் வெப்பமும் நிலவுகிறது.

மக்கள்

லாங்வா கிராமத்தில் பல பாரம்பரிய பழங்குடி சமூகங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் சொந்த தனித்துவமான பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகளை கொண்டுள்ளன. இங்கே ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் கொண்டாடப்படுகிறது. கொன்யாக் பழங்குடியினர் லோங்வாவில் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடியினர் ஆவார்கள். கொன்யாக் பழங்குடியினர் ஒரு தனித்துவமான கட்டிடக்கலை பாணியைக் கொண்டுள்ளனர், இதில் வீடுகளை நிர்மாணிப்பதில் மூங்கில், மரம் மற்றும் ஓலைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஜவுளி மற்றும் கையால் செதுக்கப்பட்ட மரப் பொருட்கள் உள்ளிட்ட பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கு லாங்வா பெயர் பெற்றது. இந்த கைவினைப் பொருட்களைப் பற்றி அறியவும் தனித்துவமான மற்றும் அழகான கையால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கவும் பார்வையாளர்கள் உள்ளூர் கடைகளுக்குச் செல்கிறார்கள்.

பழங்குடியின தலைவர்

லாங்வா கிராமத்தின் தோற்றம் மற்றும் வரலாறு இப்பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பாரம்பரிய பழங்குடி சமூகங்களுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. இன்றைய மியான்மரில் இருந்து புலம்பெயர்ந்த கொன்யாக் பழங்குடியினரால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த கிராமம் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது.

லுங்வா ஆங்கின் (தலைவர்) வீடு இந்தியா மற்றும் மியான்மர் எல்லைக்கு நடுவில் அமைந்துள்ளது. ஆங்கின் வீட்டின் ஒரு பாதி இந்திய எல்லைக்குள் வருகிறது, மற்ற பாதி மியான்மர் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், முழு கிராமமும் ஆங்கால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவருக்கு 60 மனைவிகள் உள்ளனர், மேலும், அவர் மியான்மர் மற்றும் அருணாச்சல பிரதேசம் வரை பரவியுள்ள 70 கொன்யாக் நாகா கிராமங்களை ஆட்சி செய்கிறார்.

இரட்டை குடியுரிமை

லாங்வாவின் மிகவும் தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான காட்சிகளில் ஒன்று இந்தியாவையும் மியான்மரையும் பிரிக்கும் சர்வதேச எல்லை லாங்வா கிராமத்தின் மையப்பகுதி வழியாக செல்கிறது. 70 கொன்யாக் நாகா கிராமங்களில் மியான்மர் தேச பகுதியில் 27 கொன்யாக் கிராமங்கள் உள்ளன. உள்ளூர் பாரம்பரியத்தின்படி, லாங்வா கிராமத்தின் இரட்டை குடியுரிமை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த இரட்டை குடியுரிமை ஏற்பாட்டை இந்தியா மற்றும் மியான்மர் நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. கிராம மக்கள் இரு நாடுகளுக்கும் இடையே சுதந்திரமாக பயணிக்கவும், வர்த்தகம் செய்யவும் மற்றும் எல்லையின் இருபுறமும் கலாச்சார மற்றும் சமூக நிகழ்வுகளில் பங்கேற்கவும் அனுமதிக்கிறது. இந்திய எல்லைப் பகுதியில் லாங்வா கிராமத்தில் வசிக்கும் மக்கள் மியான்மர் நாட்டிற்குள் 16 கிலோமீட்டர் தூரத்திற்கு பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதைப் போலவே மியான்மர் எல்லைப் பகுதியில் லாங்வா கிராமத்தில் வசிக்கும் மக்கள் இந்திய நாட்டிற்குள் 16 கிலோமீட்டர் தூரத்திற்கு பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles