Advertisement

ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், அலுவலர்கள் மீதான புகார்களை விசாரிக்கும் ஆம்புட்ஸ்மேன்

அமைப்பு

“லோக்கல்பாடி ஆம்புட்ஸ்மேன்” என்று அழைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவர் அமைப்பை உருவாக்குவதற்கான தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவர் சட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டப்படி தமிழகத்தில் மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான முறை மன்ற நடுவர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த விசாரணை அமைப்பின் தலைமை பொறுப்பிற்கு முதலமைச்சரால் பரிந்துரை செய்யப்பட்ட மாநில அரசின் முதன்மை  செயலாளர் நிலையிலான அலுவலர் ஒருவர் மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான முறை மன்ற நடுவராக (ஆம்புட்ஸ்மேன்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரம்

செய்ய வேண்டிய பணியை செய்யாமல் இருத்தல் (omission) மற்றும் செய்யக்கூடாத பணியை செய்தல் (commission), ஊழல் (corruption),  சீர்கேடான நிர்வாகம் (maladministration) மற்றும் முறைகேடுகள் (scam)  மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை  மேற்கொள்வதற்கு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவருக்கு  (லோக்கல்பாடி ஆம்புட்ஸ்மேன் அமைப்புக்கு) அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்படுமானால் குற்றவியல் சட்டங்களின்படி தண்டிக்கக்கூடிய குற்றம் என்றால் காவல்துறை புலனாய்வு அமைப்புகள் தகுந்த நடவடிக்கை (criminal proceedings) மேற்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுமாறு   ஆணையிடும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவருக்கு (லோக்கல்பாடி ஆம்புட்ஸ்மேன் அமைப்புக்கு) உள்ளது.  அரசுக்கு அல்லது உள்ளாட்சி அமைப்பிற்கு இழப்பு ஏற்படுத்தும் செயலை புரிந்த நபர் மீது அவரிடம் இருந்து ஏற்பட்ட இழப்பையும் நிவாரணத் தொகையும் பெறுவதற்கு (recovery) தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிடும் அதிகாரமும் உள்ளாட்சி அமைப்பின் ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படும் போது துறைவாரியான நடவடிக்கை (departmental action) எடுக்க உத்தரவிடும் அதிகாரமும் உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவருக்கு (லோக்கல்பாடி ஆம்புட்ஸ்மேன் அமைப்புக்கு) உள்ளது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத போது குற்றச்சாட்டை சமர்ப்பித்தர் வழக்கு செலவு தொகையாக ஒரு குறிப்பிட்ட பணத்தை செலுத்துமாறு   உத்தரவிடும் அதிகாரம் இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

விசாரணை முறை

உரிமையியல் (civil) நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் உரிமைகள் விசாரணை சட்டம், 1908 (civil procedure code) -ல் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்த நடுவரமைப்பிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாட்சிகளை வருகை தருமாறு அழைப்பாணை அனுப்புவதற்கும் உறுதிமொழியின் பேரில் சாட்சியங்களை பதிவு செய்வதற்கும் தொடர்புடைய மற்றும் தேவைப்படும் ஆவணங்களை   கண்டுபிடித்து   முன்னிலைப்படுத்துமாறு ஆணையிடுவதற்கும் இந்த அமைப்பிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

புகார்

மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் உறுப்பினர்கள் மீதும் நகராட்சி தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீதும் பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீதும் சமர்ப்பிக்கப்படும் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவருக்கு (லோக்கல்பாடி ஆம்புட்ஸ்மேன் அமைப்புக்கு) வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீதும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீதும் கிராம  ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீதும் சமர்ப்பிக்கப்படும் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவருக்கு (லோக்கல்பாடி ஆம்புட்ஸ்மேன் அமைப்புக்கு) வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மற்றும் கிராம ஊராட்சி அமைப்புகளின் தலைமை அதிகாரி   மற்றும் அனைத்து வகையான ஊழியர்கள் மீதும் சமர்ப்பிக்கப்படும் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவருக்கு (லோக்கல்பாடி ஆம்புட்ஸ்மேன் அமைப்புக்கு) வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில்

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் மீதான  புகார்களையும் உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளில்     ஊழல், சீர்கேடு மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்களையும் விசாரிக்க மாவட்ட அளவிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கான முறை மன்ற நடுவர்  (ஆம்புட்ஸ்மேன்) நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

புகார்களை அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம், எண்.100, அண்ணாசாலை, கிண்டி, சென்னை-600 032. மின்னஞ்சல்: [email protected] இணையதளம்: www.tnlbo.tn.gov.in

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles