“சீட்டுக் கட்டு ராஜா ராஜா, திரும்பிப் பாரு லேசா லேசா”அப்படின்னு ஒரு பாட்டு கேட்டிருப்பீங்க தானே. சீட்டுக்கட்டு நம் வாழ்வியலோடு எப்படி பின்னிப் பிணைந்து இருக்கிறது என்று தெரியுமா?
ஒரு ஆண்டுக்கு 52 வாரங்கள், சீட்டுக் கட்டிலும் 52 சீட்டுகள். ஒவ்வொரு பருவத்திலும் 13 வாரங்கள், ஒவ்வொரு வகையிலும் 13 சீட்டுகள். ஒரு ஆண்டுக்கு நான்கு பருவங்கள, சீட்டுக்கட்டிலும் நான்கு வகையான சீட்டுகள். ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள், சீட்டுக்கட்டிலும் ராஜா, ராணி, ஜாக் என்ற முகங்களைக் கொண்ட சீட்டுகள் 12.
சிவப்பு அட்டைகள் பகலைக் குறிக்கின்றன. கருப்பு அட்டைகள் இரவைக் குறிக்கின்றன. ஸ்பேடு (மண்வெட்டி) உழவைக் குறிக்கிறது. ஹாட்ஸ்- பயிர்களை நேசிப்பதை இதயங்கள் குறிக்கின்றன. கிளாவர்-செழிப்பையும் வளர்ச்சியையும் குறிக்கின்றன. டைமண்ட்-செல்வத்தை அறுவடை செய்வதை குறிக்கின்றன. சில அட்டை விளையாட்டுகளில் இரண்டு ஜோக்கர்கள் பயன்படுத்தப்படும். இது லீப் ஆண்டை குறிக்கிறது.
ஏதோ சீட்டு கட்டுதானேன்னு இளக்காரமா நினைக்காம வாழ்வியலோடு இது எவ்வாறு இணைந்து நிற்கிறது என்பதையும் பாருங்கள்.
விமர்சனத்தைப் புறக்கணிப்போம்!
வாழ்க்கையில் நாம் எப்படிப்பட்ட தன்மை உடையவர்களாக இருந்தாலும் நமது செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உட்பட்டதுதான். பொதுவாக ஒன்று சொல்லப்படும் “காய்க்கிற மரம்தானே கல்லடிபடும்”. நமது நடவடிக்கைகள் குறித்த நல்ல விமர்சனங்கள் நமது வளர்ச்சிக்கே! ஆனாலும் பல விமர்சனங்கள் வீழ்ச்சிக்குத்தான்!
புகழ்ச்சிகளை கண்டு புளகாங்கிதமும் வேண்டாம். இகழ்ச்சிகளை கண்டு ஏமாற்றமும் வேண்டாம். விமர்சனங்களால் ஒரு சிலர் வாழ்ந்திருக்கிறார்கள். அதே விமர்சனங்களால் சிலர் வீழ்ந்தும் இருக்கிறார்கள். கலிலியோ உலகம் உருண்டை என்ற போது கல்லால் அடித்து விமர்சித்தவர்கள் ஏராளம். ஆனால், காலம் கலிலியோவின் பக்கம் நின்றது. அவர் மீது வீசப்பட்ட சொல்லடிகளை பொடிப் பொடியாக்கி உண்மையை உலகிற்கு உரக்கக் கூவி நிரூபித்தவர் கலிலியோ.
விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் விமர்சனங்களை தாண்டி வளர்ந்தவர்கள். வரலாற்றில் நிற்கிறார்கள்! புகழின் உச்சியில் இருந்தவர்களை புண்படுத்தியும் இருக்கின்றன விமர்சனங்கள். ஆசையோடு அரியணைக்காக காத்திருந்தவனை விரட்டி வீழ்த்தியும் இருக்கிறது விமர்சனம். தகரத் தட்டில் சாப்பிட்டவனை தங்கத்தட்டுக்கு அழைத்துச் சென்று இருக்கிறது விமர்சனம். எனவே விமர்சனம் ஒருவரை தூக்கவும் செய்யும். அதே சமயம் படுகுழிக்குப் போக்கவும் செய்யும் .
பொதுவாகவே விமர்சனங்கள் வீதியில் தெரியும் பிளக்ஸ் பேனர்கள் போல விமர்சனங்கள் வெற்று விளம்பரங்கள். வீணான சுவரொட்டிகள் இன்று ஒன்று ஒட்டப்பட்டால் நாளை அதன் மீது மற்றொன்று ஒட்டப்படும். எனவே, விமர்சனங்களை விடை கொடுத்து அனுப்புங்கள். விமர்சனங்களை பெரிது படுத்தாதீர்கள்! அதேசமயம் விமர்சனத்தில் சொல்லப்படும் கருத்துக்கள் உண்மையான குறைபாடுகளாக இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். நாளைய சரித்திரம் உங்கள் பெயரையும் தனது வரிகளிலே மின்ன வைக்க வேண்டும் என்றால் விமர்சனங்களை தாண்டி வெற்றி நடை போடுங்கள்!
அறிவோமே சபை நாகரீகம்
ஆண்ட்ராய்டு போனையும் மனிதர்களையும் பிரிக்க முடியாத இந்தக் காலத்தில் இளம் தலைமுறை பல்வேறு தொழில் நுண்ணறிவுகளோடு தங்களை பிணைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பொது வெளிகளில் சில பழக்கவழக்கங்களை நாமும் இயன்ற அளவு பின்பற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம்.
பொது இடங்களில் நமது போனில் உள்ள ஸ்பீக்கர் போனை பயன்படுத்துவதால் மற்றவர்களுடைய கவனம் சிதறக் கூடும் அல்லது சிரமத்தைத் தரும் என்பதை சிந்தையில் ஏற்றுக் கொள்ள வேண்டும். எவராவது ஹெட் போன் அணிந்திருந்தால் அவர்கள் மற்றவர்களின் தலையீடை விரும்பவில்லை என்பதை அறிந்து கொண்டு அவர்களோடு பேச முற்படக் கூடாது .
யாராவது பேசிக் கொண்டிருக்கும்போது அவர்கள் பேச்சை கவனிக்காமல் செல்போனை நோண்டிக் கொண்டிருப்பது பேசுபவர்களை உதாசீனப்படுத்துவது போல. யாராவது தனது ஃபோனில் எதையாவது பார்த்துக் கொண்டிருந்தால் அவர்கள் மேல் உரசிக்கொண்டு அந்த காட்சியை பார்ப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் .
எவரோடு பேசினாலும் குறிப்பாக மகளிரோடு பேசும் போது கண்களைப் பார்த்து மட்டுமே பேசுவது மரியாதைக்குரிய செயலாகும். உணவு உண்ணும் சமயங்களில் கட்டாயமாக கைபேசியை தனிமைப் படுத்த வேண்டும். எவரது தோற்றத்தையும் உடையையும் பார்த்து கேலியோ கிண்டலோ செய்வது அநாகரீகம். குழந்தை இல்லாத தம்பதிகளை பார்க்கின்ற போது “எப்ப குழந்தையை பெற்றுக்கொள்வதா திட்டம் வச்சிருக்கீங்க?” என்று கேட்பது அவர்களை கொலை செய்வதற்கு சமமானது.

எவராவது பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடையீடு செய்யாமல் முழுவதும் கேட்ட பிறகு மறுமொழி பகர்வது மாண்புடை செயலாகும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்கும் பொழுதுகளில்அவர்கள் உள்ள நிலையை உணர்ந்து மனரீதியாக அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் நேர்மறை கருத்துக்களையே கூற வேண்டும். புதிதாக சந்திக்கும் எவரிடமும் அவர்களது வயது, ஊதியம், உடல் எடை, ஜாதி பற்றி கேட்கவே கூடாது .
எவரிடமிருந்தாவது ஏதாவது ஒரு பொருளை இரவல் வாங்கி இருந்தால் அதை பழுதாக்கி விடாமல் வாங்கிய நிலையிலேயே கட்டாயம் திருப்பிக் கொடுப்பதுபொருட்களை கொடுத்தவர்களுக்கு திருப்தியை அளிக்கும். பிறருடைய உடல் மற்றும் உள்ள ரீதியான உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சிவ. கணபதியின் வலைத்தள பதிவுகள்
பூங்கா இதழ் (The News Park) கருத்து: சிந்தனைகளை ஊக்குவிக்கும் திரு சிவ கணபதி அவர்களின் எழுத்துக்கள் தொடர வாழ்த்துக்கள்.