தமிழக ஆளுநர் எவ்வாறு பதவியில் தொடர்கிறார்?
தமிழக ஆளுநரின் பதவிக்காலம் கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் குடியரசுத் தலைவரால் ஆளுநரின் பதவி காலத்தை நீட்டித்து உத்தரவிட்டதாகவோ அல்லது ஆளுநரை மீண்டும் நியமித்து உத்தரவிட்டதாகவோ அதிகார தகவல் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இந்நிலையில் தமிழக ஆளுநர் தொடர்ந்து பதவி வகித்து வருவது எப்படி? என்று சிலர் வினா எழுப்பி உள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம்?
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் தலைமையிலான குழு வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் இந்த மாத இறுதியில் தமிழக முதலமைச்சரின் வெளிநாடு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடைபெறுவது உறுதி என்றும் தமிழகத்துக்கு துணை முதல்வராக தற்போதைய விளையாட்டு துறை அமைச்சர் நியமிக்கப்படலாம் என்றும் பல்வேறு தரப்பினர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அ.இ.அ.தி.மு.க- ல் பிளவு ஏற்படுமா?
கடந்த ஓரிரு வாரமாக மக்களவைத் தேர்தலில் நடைபெற்ற ஏற்பட்ட தேர்தல் தோல்வி குறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட வாரியாக ஆய்வு கூட்டத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திடீரென அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கட்சியில் பொதுச் செயலாளருக்கும் மூத்த தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதால் அவசர செயற்குழு கூட்டப்பட்டுள்ளதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். கட்சி வட்டாரங்களில் மாவட்ட வாரியாக ஆய்வு குழு கூட்டம் நடத்தப்பட்ட பின்னர் மீண்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்த தேவையில்லை என்பதால் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார்கள்.
புதுமை வாய்ந்த சிறந்த நடைமுறைக்கான முதலமைச்சர் விருதுக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் விண்ணப்பிக்காதது ஏன்?
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது புதுமை வாய்ந்த சிறந்த நடைமுறைக்கான (Best Practice Award) விருது வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் 36 வழக்குகளை சமரச தீர்வு (Mediation) மூலம் முடித்து இந்தியாவிலேயே அதிக வழக்குகளை சமரசம் மூலம் முடித்த மாவட்ட நுகர்வோர் ஆணையம் என்ற பெருமையை நாமக்கல் மாவட்ட ஆணையம் பெற்றுள்ளது. ஆனால், முதலமைச்சரின் புதுமை வாய்ந்த சிறந்த நடைமுறைக்கான விருதுக்கு நாமக்கல் மாவட்ட ஆணையம் விண்ணப்பிக்காதது வருத்தம் அளிப்பதாக நாமக்கல் மாவட்ட ஆணையத்தில் சமரசர்களாக பணியாற்றும் வழக்கறிஞர்கள் நாமக்கல் ஆர். அய்யாவு, பரமத்தி ராமலிங்கம், திருச்செங்கோடு பாலசுப்ரமணியம் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனைத்து நியாய விலை கடைகளிலும் தொடங்குவது எப்போது?
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு நியாயவிலைக் கடையில் பொட்டலமிடப்பட்ட பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை சோதனை முறையில் தொடங்கப்பட்டிருக்கிறது. நுகர்வோருக்குத் தரமான பொருள்களை வழங்குவதும், விநியோக முறைகேடுகளைத் தடுப்பதும் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். கடந்த வாரத்தில் இந்தியாவில் முதல்முறையாக ஒடிசா மாநிலத்தில் ஏ.டி.எம். எந்திரம் மூலம் அரிசி விநியோகம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிறப்புச் சான்றிதழ் பெயர் இல்லையா?
கடந்த 2000 ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் தங்களது பெயர்களை பிறப்புச் சான்றிதழில் சேர்க்க டிசம்பர் 31-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த யுத்தத்துக்கான தேதி எப்போது?
ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் பணியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அடுத்த ஜனநாயக தேர்தலுக்கான யுத்தத்தின் தேதி என்ன? என்பது விரைவில் தெரியவரும். தேச அளவில் மத்தியில் ஆளும் கட்சி அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில் எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்த நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் மிக முக்கியமானதாகும்.
புதிய நிர்வாக நியமனம் எத்தகைய பலன்களை புதுச்சேரிக்கு வழங்கும்?
புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கே. கைலாசநாதன் கடந்த ஏழு ஆம் தேதி அன்று பதவியேற்று கொண்டுள்ளார். புதுச்சேரி முதலமைச்சருக்கும் புதிதாக பதவியேற்றுள்ள துணைநிலை ஆளுநருக்குக்கும் உறவு எவ்வாறு இருக்கும்? புதிய நிர்வாக நியமனம் எத்தகைய பலன்களை புதுச்சேரிக்கு வழங்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒரு பெண் என்ன உடை அணிய விரும்புகிறார் என்பது அவரது சொந்த விருப்பம் இல்லையா?
ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து மாணவிகள் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில்நீதிபதி சஞ்சீவ் கண்ணா நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஒரு பெண் என்ன உடை அணிய விரும்புகிறார் என்பது அவரது சொந்த விருப்பம் இல்லையா? “பொட்டு திலகம் இடாதீர்கள் என்று உங்களால் கூற முடியுமா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்கப்படக் கூடாது என்றும் அதே சமயம் வகுப்பறைக்குள் முகத்தை மறைக்கும் புர்கா அணியவும் ,கல்லூரி வளாகத்திற்குள் மத ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்
செய்தி தொகுப்பு: பல்கீஸ் பீவி. மு & கே. ஸ்ரீ நித்யா – நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் – பயிற்சி கட்டுரையாளர்கள்/ நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவிகள்