இனிய வணக்கம். நம்மால் காணும் உலகம் ஒன்றாகவும் அறியப்படும் உலகம் வேறாகவும் உள்ளது….பிளாட்டோ. The world see is different and the world that is known is different – Plato |
எந்தவிதமான சேவையும் எளிமையாகவும் இலவசமாகவும் கிடைத்தால் அதற்கு மதிப்பும் கிடையாது. மரியாதையும் கிடையாது. உணவு விடுதிகளில் உணவு அருந்தும் போது நம் முன் இருக்கும் உணவை. இயன்றவரை சேதாரம் இல்லாமல் முழுமையாகத்தான் எல்லோரும் சாப்பிடுவோம். ஆனால், அன்னதான நிகழ்வுகளில் சாப்பிடும் நிலை வந்தாலோ விழா மண்டபங்களில் பஃபே ஸ்டைலில் உணவு அருந்தும்போதும் எவ்வளவு உணவை வீணடிக்கிறோம். கொஞ்சமும் கூச்சப்படாமல் நாமும் அந்தத் தவறுகளை செய்கிறவர்கள் தானே இதில் மாற்று கருத்து இருக்காது என எண்ணுகிறேன்.
தனியாக வசிக்கும் ஒரு நடுவயதுப் பெண். 12 அறைகள் கொண்ட பெரிய வீடு அவர் வசம் இருந்தது. அந்த வீடுகளை சும்மா வைத்திருப்பதற்கு மாறாக இளைஞர்கள் தங்கும் விடுதியாக. அதை மாற்றினால் என்ன என்ற எண்ணம் அவருக்கு வந்தது. ஒவ்வொரு அறையிலும் இரண்டு கட்டில்கள் போடப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. அனைத்து அறைகளும் நிரம்பின. சில நாட்கள் சென்றதும் அந்த பெண்மணிக்கு வேறு ஒரு யோசனை வந்தது.
ஏன் இவர்களுக்கு இங்கேயே உணவு சமைத்துப் போடக்கூடாது என்ற வினாவுக்கு விடையாக அதற்கும் ஏற்பாடு செய்தார். அறையில் இருந்தவர்கள் ஏற்றுக் கொண்டனர். நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் அந்த அம்மையார் அறையில் தங்கி இருப்பவர்களிடம் இனிமேல் மாதத்திற்கு 28 நாட்கள் மட்டுமே இங்கு உணவு கிடைக்கும். எஞ்சி இருக்கக்கூடிய நாட்களுக்கு வெளியில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதையும் அவர்கள் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறே 28 நாட்களுக்கு மட்டுமே அங்கு உணவளிக்கப் பட்டது .
ஒரு நாள் அந்தப் பெண்மணியின் தோழி ஒருவர் அங்கு வருகிறார். வந்தவுடன் அந்த விடுதியின் நடைமுறையைப் பற்றி இந்தப் பெண்மணி தோழியிடம் விலாவரியாகச் சொல்லுகிறார். மாதம் முழுவதும் முதலில் உணவளித்து விட்டு பிறகு இரண்டு நாட்களை ஏன் குறைத்தாய்? இப்பொழுது என்ன வந்தது? என்று கேட்க, அடியே ! நான் முழு மனதோடும்,சிரத்தையோடும், சிறப்பாகத்தான் அவர்களுக்கு உணவளித்து வந்தேன். ஆனால், நாட்கள் நகர நகர உணவைப் பற்றிய குறைபாடுகள் கூறப்பட்டது உப்பு அதிகம் என்று சிலர். காரம் போதவில்லை என்று சிலர். இப்படியாக குறைகள் வளர ஆரம்பித்தன.
நான் எனது தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். அதே சமயம் காரணம் இன்றி என் மீது வீசப்படும் விமர்சனங்களை வெறுக்கிறேன்.
அதற்குப் பிறகுதான் 28 நாள் மட்டும் எனும் உணவு முறையை கொண்டு வந்தேன். மாத இறுதி நாட்களில் வெளியில் போய் அதிகக் காசு கொடுத்து சாப்பிட்டு பார்த்ததால்தான் எது நிதர்சனம் என்பதை புரிந்து இருக்கிறார்கள். இப்பொழுது எல்லாம் அவர்கள் உணவைச் சாப்பிடும் பொழுது எந்தக் குறையும் சொல்வது இல்லை என்பது மட்டுமில்லாமல் சாப்பிடும் வேளைகளில் இங்கு அளிக்கப்படும் உணவின் சுவையைப் பாராட்டித் தள்ளுகிறார்கள். நிழலின் அருமையை வெய்யிலுக்குச் சென்ற பிறகுதான் உணர்ந்திருக்கிறார்கள். பட்டால் தானே தெரியும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சிவ கணபதியின் பதிவு. அவர் தினசரி பதிவிடும் கருத்துக்கள் சிறப்பானதாக உள்ளன.