தோற்றம்
கோண்ட்வானா என்ற பெயரில் முற்காலத்தில் மிகப்பெரிய கண்டம் இருந்தது என்றும் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால், கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்து உருவான தென்னிந்தியாவில் ஏற்பட்டது மேற்கு தொடர்ச்சி மலைகள் என்றும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இமயமலையை விட பழமையானது மேற்கு தொடர்ச்சி மலை என கூறப்படும் நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையை விட கிழக்கு தொடர்ச்சி மலைகள் பழமையானதாக கருதப்படுகிறது.
புவியியல்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடங்கி ஆந்திரா, தெலுங்கானா ஆகியவற்றின் வழியாக நீண்டு ஒடிசாவில் சிமிலிபால் என்ற இடத்தில் முடிவடைகிறது. இந்த மலைத்தொடரின் தென்மேற்கு எல்லையாகக் கர்நாடகத்தின் சாம்ராஜ் நகருக்கு அருகிலுள்ள பிலிகிரிரங்கன் மலை அமைந்துள்ளது. தெற்கு கர்நாடகாவின் சாமராஜாநகர் மாவட்டத்தில் கொல்லேகால் தாலுகாவில் மாதேஸ்வரன் மலை அமைந்துள்ளது.
இந்தியாவின் தென்கிழக்கு எல்லையாக அமைந்துள்ள வங்காள விரிகுடா கடலுக்கு இணை கோட்டை போல தெற்கு முதல் வடக்கு வரை 1,750 கிலோமீட்டர் நீளத்தில் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கிழக்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளது. இந்த மலைத் தொடரின் 25 சதவீத பரப்பு ஒடிசாவிலும் 5 சதவீத பரப்பு தெலுங்கானாவிலும் 40 சதவீத பரப்பு ஆந்திர பிரதேசத்திலும் 5 சதவீத பரப்பு கர்நாடகாவிலும் 25 சதவீத பரப்பு தமிழகத்திலும் உள்ளது. 1690 மீட்டர் உயரத்தில் ஆந்திராவில் அமைந்துள்ள ஜிந்தகடா இந்த மலைத்தொடரில் உயரமான சிகரம் ஆகும்.
அமைப்பு
மேற்குத் தொடர்ச்சி மலை தெற்கிலிருந்து வடக்கு வரை இடைவெளி இல்லாமல் அமைந்துள்ள நிலையில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ள மலைத்தொடராகும். மகாநதி, துங்கபத்ரா, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகள் இம்மலைத் தொடரின் வழியாக பாய்ந்து ஏற்படுத்திய மண் அரிப்பு இம்மலை தொடர்ச்சியாக அமையாவதற்கு ஒரு காரணமாகும். இருப்பினும், இந்த மலைகளின் அடித்திட்டுகள் ஒன்றுக் கொன்று இணைந்தே உள்ளன. மலைகள், பெருங்குன்றுகள், சிறுகுன்றுகள், குறுங்குன்றுகள், பாறை குவியல்கள் என ஏறத்தாழ 6,500 புவியியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்த அமைப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ளன. இம்மலைத் தொடரில் பல்வேறு குன்றுகள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இத்தொடர் மேற்கு தொடர்ச்சி மலையைப் போன்று அவ்வளவு உயரமானதாக காணப்படவில்லை.

தமிழகம்
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள 138 பெரிய மலைகளில் 29 தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் நீலகிரிக்கு அருகிலுள்ள மாயாறு பள்ளத்தாக்குப் பகுதியில் .கிழக்கு மலைத்தொடர் மேற்கு மலைத்தொடருடன் இணைகிறது. தமிழகத்தில் தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. தமிழ்நாட்டில், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் வடக்கில் ஜவ்வாது மலைகள் முதல் தெற்கில் அழகர் மலைகள் வரை 13 பெரிய மலைத்தொடர்களை உள்ளடக்கியது. இதில் ஜவ்வாது, ஏலகிரி, சேர்வராயன், சித்தேரி, கல்வராயன், போதமலை, கொல்லி, பச்சைமலை, செம்மலை, அய்யலூர், கரந்தமலை, சிறுமலை மற்றும் அழகர் ஆகியவை முக்கியமானவையாகும்.

இயற்கை
கிழக்கு மலைத்தொடர் முழுவதும் சுண்ணாம்புக்கல், பாக்சைட் மற்றும் இரும்பு தாது போன்ற கனிமங்கள் காணப்படுகின்றன. கருங்கல் பாறைகள், படிகப்பாறைகள், சார்னோகைட், தகட்டுப் பாறையான கோண்டாலைட் ஆகிய பல்வேறு வகையான பாறைகளை கொண்டதாக கிழக்கு தொடர்ச்சி மலைகள் உள்ளது. கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் தட்ப வெப்பநிலை பொதுவாக குளிர்ச்சியாகவும், சுற்றியுள்ள சமவெளிகளை காட்டிலும் ஈரப்பதம் மிகுந்தும் இருப்பதோடு சில பகுதிகளில் கோடை காலங்களில் வறட்சியும் காணப்படுகிறது. இங்குள்ள பல பகுதிகளில் நிலவும் தட்பவெட்ப நிலை காப்பி பயிருக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இயற்கையாக வளர்கின்ற அரிய மூலிகைகளும், காய்கறிகள், பழங்கள், நறுமண பொருட்கள் இம்மலைத் தொடரின் சிறப்பாகும். இம்மலைத் தொடரில் பல பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்த மலை தொடரின் சில பகுதிகளில் வனவிலங்குகளும் பறவைகளும் பல்வேறு வகையான பூச்சி வகைகளும் உள்ளன. இந்த மலைத்தொடரில் நடுத்தர மற்றும் சிறிய ஆறுகள் தோன்றி கிழக்கு நோக்கி பாய்கின்றன. இம்மலைத் தொடரில் வாழும் பழங்குடியின மக்களின் பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபட்டதாகவும் பழமையானதாகவும் உள்ளன. இம்மலைத் தொடரை ஒட்டி உள்ள வெப்பமண்டல பசுமையான காடுகள், அரை-பசுமை காடுகள், நதிக்கரை காடுகள், ஈரமான இலையுதிர் காடுகள், தெற்கு வறண்ட இலையுதிர் காடுகள், வடக்கு உலர் இலையுதிர் காடுகள், உலர் சவன்னா காடுகள், முள் புதர்க்காடுகள் மற்றும் வறண்ட பசுமைமாறா காடுகள் என ஒன்பது வகையான காடுகள் உள்ளன. இந்த மலைத் தொடரை பாதுகாக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ள போதிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: இயற்கையை பாதுகாக்க தவறினால் இயற்கை நம்மை பாதுகாக்க தவறி விடும் என்பதை மனதில் கொண்டு கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இயற்கையை பாதுகாப்போம்.
உங்கள் கருத்துக்கள் வெளியாக வேண்டுமா? விவாகரத்து வழக்குகள் பெருமளவில் அதிகரிப்பு – காரணம் என்ன? தங்கள் கருத்துக்களை நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் வரும் 13 ஆம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம். வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கருத்துக்கள் பூங்கா இதழில் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும். தங்களது கருத்துக்களுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும். |
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication)
வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிப்புகள் ஆராய்ச்சி இதழ் அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |