Advertisement

பூங்கா இதழ் ஆசிரியருக்கு கண்ணீர் அஞ்சலி – மனிதர்களை அடையாளம் காண்பது குறித்து ஒரு நிமிட கதை – ஒரு நிமிடம் செலவிட்டு படித்து பார்த்து உங்களை பரிசீலனை செய்து கொள்ள தவறாதீர்

கண்ணீர் அஞ்சலி

பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தில் 1967 ஆம் ஆண்டு பிறந்த க. கதிர்வேல் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் ஆகியவற்றின் ஆசிரியராக இந்த இதழ்கள் தொடங்கப்பட்டது முதல் இறப்பு வரை பணியாற்றிய கதிர்வேலின் மறைவு வேதனை அளிக்கிறது. அவருக்கு அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக செலுத்துகிறோம். பூங்கா இதழ் அலுவலகத்தில் பயிற்சி பெறும் 30 சட்டக்கல்லூரி மாணவ – மாணவர்களிடையே கடந்த 2024 அக்டோபர் முதல் நாளில் நடைபெற்ற நிகழ்வில் இதழியல் குறித்து அவர் பேசியது தற்போதும் நினைவில் நிற்கிறது.

ஏற்றுக்கொண்ட கொள்கையை எவர் எதிர்த்தாலும் உறுதியாக நிற்கும் மனவலிமை கொண்டவர். கொள்கை வேறு பணியும் நட்பும் வேறு என்ற அடிப்படையில் நமது இணைய இதழ்களுக்கு ஆசிரியராகத் திகழ்ந்தவர். இறுதிவரை நியாயத்துக்கு எதிராக சமரசம் செய்து கொள்ளாதவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். இவர் பலருக்கு செய்த எண்ணற்ற உதவிகளும், சமூகப் பங்களிப்பும் வாழ்வின் அடையாளங்கள் ஆகும்.

தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி கறி சமைத்துவிட்டு, தன் மகளிடம் சொன்னார். “மகளே நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கலாம். எல்லோரும் சாப்பிடுவோம் என்றார்.   அவருடைய மகளும் சரியென்று தெருவுக்குவந்து கத்த ஆரம்பித்தாள். “தயவுசெய்துஎங்கள் வீட்டில் எரியும் தீயை அணைக்கஉதவுங்கள்” என்று. ஒரு சில நிமிடங்களில் மக்கள் சிலர் வெளியே ஓடி வந்தனர். மீதமுள்ளவர்கள் கூக்குரலைக் கேட்காததுபோல் இருந்தனர். வந்தவர்களுக்கு நன்றியைக் கூறி, கறி விருந்து பரிமாறப்பட்டது. அனைவரும் நன்றாக சாப்பிட்டனர்.  

அவர்கள் சென்ற பிறகு தன் மகளை பார்த்து கேட்டார். “வந்தவர்களை எனக்கு தெரியாது. இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை. என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் எங்கே?” என்றார்.

மகள் சொன்னாள்.   “தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதற்கே அன்றி விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள்.”  

நீங்கள் வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும் உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்க முடியும்?” பிரதிபலன் பாராமல் உதவுபவர்களே உண்மையான உறவுகள்……..  
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.  

தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார். ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

யோசித்தார். ஒரு யோசனை வந்தது.   சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே!’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன!. சடாரென வீசினார் கயிற்றை.    

கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள்,மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.  
குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை. அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை

நல்ல உடற்பயிற்சி, சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். பலவிதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.  

குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.  

உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். எனவே அவரை வீழ்த்துபவருக்கு 10 லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள். பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை.

இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன், தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.   புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான். அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.  

அதில் ஒருவன், வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று , “என்னய்யா ஆச்சு உங்களுக்கு.. பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே.. உடம்பைப் பாத்துக்குங்க ” என்று சொல்லிக் கிளம்பினான். “எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? ” . அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.  

மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான். “ஐயா, போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன . நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க. அதுல சந்தேகமே இல்லை. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா” என்று கேட்டுவிட்டு நகர்ந்தான். ‘என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?’ இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது.

போட்டி துவங்கும் நேரம் வந்தது.   பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர். அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான். “என்னய்யா, எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ?“ என்று கேட்டுவிட்டு விடைபெற்றான். அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.  

போட்டி துவங்கியது. அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார். எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள். அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.  

பலருடைய வாழ்வில், வந்துவிட்ட வியாதியைவிட, வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை விழத்தள்ளி விடுகிறது.பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால்…  
பொருளூர் செல்வா
பொருளூர் செல்வா
கட்டுரையாளர் சமூக அறிவியல் சிந்தனையாளர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles