மக்களவைத் தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பதிலளிக்க வேண்டிய நீதித்துறை, வழக்கறிஞர் சார்ந்த தேர்தல் அறிக்கை.
1. உச்சநீதிமன்றம் முதல் கீழ் நீதிமன்றம் வரை நீதிமன்றங்களின் சுதந்திரத்தை காப்பாற்றுவோம் என்று அரசியல் கட்சிகள் உறுதிமொழி அளிப்பார்களா?
2. உயர் நீதிமன்றங்களில் மாநிலங்களின் தாய் மொழி வழக்காடு மொழியாக இருக்கும் வகையில் சட்டம் இயற்றப்படுமா?
3. உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் அமைக்க தகுந்த சட்ட திருத்தத்தை கொண்டு வருவோம் என்று அரசியல் கட்சியில் உறுதியளிப்பார்களா?
4. பசுமை தீர்ப்பாயம், வருமான வரி தீர்ப்பாயம் என பல தீர்ப்பாயங்கள் நீதி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இவை சம்பந்தப்பட்ட துறையின் கீழ் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே கருத இயலும். தீர்ப்பாயங்களின் நீதி வழங்கும் பணியை சுதந்திரமானதாக மாற்ற நாட்டில் இயங்கும் அனைத்து தீர்ப்பாயங்களும் உச்ச நீதிமன்றத்தின் கீழ் தனி பிரிவாக கொண்டு வர தகுந்த சட்டத்தை அரசியல் கட்சிகள் இயற்ற வாக்குறுதி அளிப்பார்களா?
5. நுகர்வோர் ஆணையங்கள், மனித உரிமை ஆணையங்கள், குழந்தைகள் உரிமைகள் ஆணையங்கள் போன்ற பல ஆணையங்கள் விசாரணை அமைப்புகளாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், இவை சம்பந்தப்பட்ட துறையின் கீழ் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே கருத இயலும். ஆணையங்களின் நீதி வழங்கும் பணியை சுதந்திரமானதாக மாற்ற நாட்டில் இயங்கும் அனைத்து ஆணையங்களும் உச்ச நீதிமன்றத்தின் கீழ் தனி பிரிவாக கொண்டுவர தகுந்த சட்டத்தை அரசியல் கட்சிகள் இயற்ற வாக்குறுதி அளிப்பார்களா?
6. ஒரே நாடு – ஒரே வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டம் என்ற அடிப்படையில் தேசிய வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்படுமா?
7. வழக்கறிஞராக பதிவு பெற்றது முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான இளம் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்று அரசியல் கட்சிகள் உறுதிமொழி அளிப்பார்களா?
8. வழக்கறிஞராக பதிவு பெற்று மூன்றாண்டுகள் முடித்த பின்னர் வழக்கறிஞர்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் திட்டம் கொண்டுவரப்படும் என்று அரசியல் கட்சிகள் உறுதிமொழி அளிப்பார்களா?
9. அனைத்து மாநிலங்களிலும் மாநில வழக்கறிஞர் தொடர் கல்வி பயிற்சி மையம், வழக்கறிஞர்களுக்கான கூட்டுறவு சங்கங்கள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?
10. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு நீதிபதிகளும் ஊழியர்களும் நியமனம் செய்வதற்கும் தகுந்த உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் போதிய நிதி ஒதுக்கீடு நீதித்துறைக்கு வழங்குவோம் என்று அரசியல் கட்சிகள் உறுதிமொழி அளிப்பார்களா?
11. மத்தியில் செயல்படும் இந்திய பார் கவுன்சில், மாநிலங்களில் செயல்படும் மாநில பார் கவுன்சில்களின் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று அரசியல் கட்சிகள் உறுதிமொழி அளிப்பார்களா?
12. சட்டக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு சட்டக் கல்லூரி அமைக்க மத்திய அரசு முன்வருமா? சட்டக் கல்வியை மேம்படுத்த தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?
சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் முனைப்பு காட்ட வேண்டும்