Advertisement

வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! 

இந்தியாவில் சுமார் நூறாண்டுகளாக ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் தினசரி செய்தித்தாள்களை வெளியிட்டு வருகிறது.  இந்த குழுமத்தின் சார்பில் தமிழில் வெளியிடப்படும் “தினமணி” நாளிதழில் கடந்த 20 ஆகஸ்ட் 1999 ஆம் அன்று வெளியான கட்டுரையில்தான் முதன்முதலாக வாக்காளரியல் (Voterology) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் வாக்காளரியல் என்ற வார்த்தையை உருவாக்கி, அதன் சிறப்பு அம்சங்களையும் எதிர்கால தேவைகளையும் குறித்து எழுதப்பட்ட கட்டுரை  தங்களின் மேலான பார்வைக்காக கீழே வழங்கப்பட்டுள்ளது.

“இருபதாம் நூற்றாண்டில் அரசியல் அறிவியல் பல்வேறு வளர்ச்சிகளை பெற்றிருக்கிறது. கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரம், அரசாங்க வடிவம், அதிகாரத்தை கைப்பற்றுதல் குறித்த சிந்தனைகளே முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அதற்கு இணையான முக்கியத்துவம் படைத்த வாக்காளர்கள், அவர்கள் எண்ணங்கள், அவர்கள் நலன் மற்றும் சமத்துவம் பற்றிய சிந்தனைகளும் அதற்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் தேர்வு முறைகளும் அதிகம் வளர்ச்சி பெறவில்லை. ஆனால், அவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.

தேர்தல் காலங்களில் மட்டுமே வாக்காளர்களை தங்களின் எஜமானவர்களாக வேட்பாளர்கள் சித்தரிக்கின்றனர். இதனையே, அரசியல் அறிஞர் ஜான் ஆடம்ஸ் “தேர்தல் எப்போது முடிவடைகிறதோ, அப்போதே மக்களின் அடிமைத்தனம் தொடங்குகிறது” என தமது நூலில் வர்ணித்துள்ளார். மனிதனின் தேவைதான் படைப்புகளின் காரண கர்த்தா.  ஒவ்வொரு துறைகள் குறித்த கல்வியும் ஆய்வுகளும் காலப்போக்கில் விரிவடைந்து புதிய பிரிவுகள் தோன்றி வளர்ச்சி அடைகின்றன. மனித குலத்தின் மேம்பாட்டுக்கு புதிய சிந்தனைகள் தோன்றி வளர்வது தேவையானது. தற்போது வாக்காளரியல் என்பது அரசியல் அறிவியலில் இருந்து உருவாகும் புதிய சிந்தனைகளின் தொடக்கமாகும்.

வாக்காளர்களின் தகுதிகள், உரிமைகள், கடமைகள் மற்றும் இயல்புகள் போன்றவை பற்றியும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முதல் தொடங்கி தேர்தல்கள் நிறைவு பெறும் வரையான நடைமுறைகள் பற்றியும் உச்ச அதிகாரம் படைத்த வாக்களிக்கும் உரிமையின் மதிப்பை பற்றியும் ஆய்ந்தறிந்து கல்வி புகட்டுவதே வாக்காளரியல் ஆகும். கற்றுக் கொள்வதில் புதிய பிரிவாக வாக்காளரியல் இருப்பதால் இன்னும் அதன் எல்லையில் வரையறுக்கப்படவில்லை. மக்களின் வளமான வாழ்விற்கும் ஜனநாயகத்திற்கும் வளர்ச்சிக்கும் வழி வகுப்பதே வாக்காளரியல் கல்வியின் பிரதான நோக்கமாகும். சிந்தனையாளர்களும் கல்வி நிலையங்களும் வாக்காளரியல் கல்வியில் தக்க கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும்.

அரசியல் அறிவியல் உலகில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, ஆய்வுப் பாடங்களாக பல்லாண்டு காலமாக இருந்து வருகிறது. இதில் பழங்கால அரசியல் கொள்கைகள், தற்கால அரசியல் கொள்கைகள், பிராந்திய அரசியல் சிந்தனைகள், பொதுத்துறை ஆட்சியியல், அரசியல் அமைப்பு வரலாறு போன்ற பல பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. அரசியலின் அடிப்படை ஆதாரமாக திகழும் வாக்காளர்களுக்கு அரசியல் அறிவியலில் தேவையான அளவுக்கு தனி முக்கியத்துவம் இன்னும் வழங்கப்படவில்லை. இருபத்தொன்றாம் நூற்றாண்டு கல்வித் திட்டத்தில் அரசியல் அறிவியல் துறையில் இருந்து வாக்காளரியல் தனி பிரிவாக ஏற்படுத்தப்பட்டு வாக்காளரியல் கல்வியும் ஆய்வுகளும் வளர வேண்டும். வாக்காளரியல் சிந்தனைகள், தேர்தல்களின் வரலாறு, தற்கால தேர்தல் முறைகள், தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒப்பீட்டு தேர்தல் முறையமைவுகள் போன்றவை பல்கலைக்கழக பாடங்களாக வாக்காளரியல் கல்வியில் சேர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு தேசத்திலும் வாக்காளர்கள் விழிப்புணர்வு உடையவர்களாக இருக்க தேவையான வாக்காளரியல் கல்வியை அவர்களுக்கு அளிப்பது அரசாங்கத்தின் அடிப்படை கடமையாகும். சில நாடுகளில் குடிமக்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு இருப்பது போல வாக்காளராக தகுதி பெறும் அனைவருக்கும் அடிப்படை வாக்காளரியல் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்.

வாக்காளர்கள் உரிமைகளை பாதுகாக்கவும் வாக்காளரியல் கல்வி, ஆய்வு, களப்பணி ஆகியவற்றை செம்மைப்படுத்திடவும் சர்வதேச வாக்காளர்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். நியாயமான வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்காளர்களுக்கு பொதுவான தகுதி,  கட்டாய வாக்காளர் கல்வி, சுதந்திரமான தேர்தல், வாக்காளர் உரிமைகள், வெற்றிக்கு அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு ஆகியன குறித்து உலகளாவில் விவாதிக்கப்பட்டு சர்வதேச வாக்காளரியல் ஆவணங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் ஏற்படுத்தப்படும் சர்வதேச முறைமைகளை தமது உறுப்பு நாடுகள் பின்பற்றி நாட்டின் சட்டங்களில் தக்க மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வேண்டும்.

அரசியல் பார்வையில் சமூக நீதி என்பது வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படாமல் நிறைவு பெறாது.   வளரும் நாடுகளில் மக்கள் வாக்குரிமையை பயன்படுத்தும் போது சாதி, மதம், மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளுக்கு இடமளிக்காமல் தேச நலனை கவனித்து வாக்களிக்க வேண்டும். கல்வி மையங்களும் தன்னார்வ அமைப்புகளும் வாக்காளரியல் கருத்தரங்கங்கள், பணிமனைகள், பிரச்சார கூட்டங்கள் போன்றவற்றை நடத்த வேண்டும். அவற்றில் சமூக சிந்தனை உள்ள அரசியல் பார்வையாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

நாடாளுமன்றங்கள், சட்டமன்றங்கள் போன்றவற்றின் தேர்தல் மட்டுமல்லாது நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட, குறிப்பாக அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து அமைப்புகளிலும் ஒவ்வொருவரும் வாக்காளர் என்ற நிலையில் தமது கடமை என்ன? என்பதை உணர வேண்டும். வாக்காளரியல் சிந்தனையில் ஆக்கமும் ஊக்கமும் பெற்று ஜனநாயகம் ஓங்கிட நாம் அனைவரும் தகுந்த பங்கினை அளிக்க வேண்டும்”. (நன்றி “தினமணி”).

வாக்காளரியல் என்ற வார்த்தையை உருவாக்கி, வாக்காளரியல் என்றால் என்ன? அதற்கு ஏன் முக்கியத்துவம் வழங்க வேண்டும்? எதிர்காலத்தில் வாக்காளரியலை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்?  என்பதை விளக்கி கடந்த 1999 ஆம் ஆண்டில் (25 ஆண்டுகளுக்கு) முன்னர் வெளியான இந்த கட்டுரையை எழுதியவர் டாக்டர் வீ. ராமராஜ். தேசிய வாக்காளர் விழிப்புணர்வு இயக்கத்தின் தன்னார்வ அமைப்புகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவர். “மதிப்பிற்குரிய வாக்காளருக்கு” என்ற நூலையும் வாக்காளர் தொடர்பான பல்வேறு கட்டுரைகளையும் எழுதி உள்ளார். இவருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு இயக்கத்தில் பங்கேற்ற தன்னார்வ அமைப்புகளின் கூட்டத்தில் வாக்காளரியலின் தந்தை (Father of Voterology) என்ற அடைமொழி வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 

தற்போதும் வாக்காளரியல் கல்வி போதிய அளவில் வெளிச்சத்துக்கு வரவில்லை.  இதனை போக்கும் வகையில் வாக்காளரியல் ஆய்வு இதழ் (The Journal of Voterology and Research – https://jovar.researchpark.in/ ) தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் வாக்காளரியல் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் விதமாக சர்வதேச கல்வி நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. வாக்காளரியல் கல்வியை வளர்ப்போம்! மக்களாட்சி தத்துவத்தை வளம் மிகுந்ததாக மாற்றுவோம்!

Journal of Voterology and Research – https://jovar.researchpark.in/

International Institution of Voterology and Research – www.voterology.in  Coming soon.

International Society of Voterology – Coming Soon.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles