ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் ஒரே நாடாக விளங்கிய இந்தியா சுதந்திரத்தின் போது மூன்று நாடுகளாக பிரிந்தன. இந்தியாவில் இருந்து 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தனி நாடாக மாறியது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை போது ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை ஆண்ட இந்து மன்னரான ஹரி சிங், ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைய விருப்பமில்லாது தனித்து ஆள விரும்பினார். காஷ்மீர் பிரதேசமானது பாகிஸ்தானுடனும் இந்தியாவுடனும் இணையாமல் தனி நாடாக இருக்கும் என்று மன்னர் அறிவித்தார்.
காஷ்மீர் பிரதேசத்தை தங்களோடு இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்த பாகிஸ்தான், காஷ்மீர் பகுதிகளை கைப்பற்ற, பாகிஸ்தானின் தூண்டிதலின் பேரில், 22 அக்டோபர் 1947 அன்று பஷ்தூன் பழங்குடி மக்களைக் கொண்ட போராளிகள் குழு, காஷ்மீர் பகுதிகளைக் கைப்பற்றத் தொடங்கினர். எனவே மன்னர் ஹரி சிங் இந்தியாவின் இராணுவ உதவியைக் கோரினார். இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைக்க அதன் மன்னர் ஒப்புக் கொண்டதால், இந்தியா தன் இராணுவத்தை ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பியது. இதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடைபெற்றது.
இந்தியா இராணுவம் ஜம்மு-காஷ்மீரில் நுழைவதற்குள், பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பஷ்தூன் மக்கள், வடக்கு நிலங்கள் முழுவதையும் மற்றும் மேற்கு காஷ்மீரில் சில பகுதிகளையும் கைப்பற்றியது. பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீரின் மேற்குப் பகுதி தற்போது ஆசாத் காஷ்மீர் என்று பாகிஸ்தானால் பெயரிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பிரதேசமானது பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகும் (POK – Pakistan Occupied Kashmir). 2017-ல் பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 13,297 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஆசாத் ஜம்மு காஷ்மீரின் மக்கள் தொகை 40,45,366 ஆகும். இதன் தலைநகரம் முசாஃபராபாத்.
பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட வடக்கு நிலங்கள் தற்போது கில்கித் மற்றும் பல்திஸ்தான் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையே காஷ்மீரின் வடக்கு பகுதியை குறிக்க வடக்கு நிலங்கள் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது. வடக்கு நிலங்கள் காஷ்மீரின் பகுதி என்றாலும் இதற்கு, மேற்குப் பகுதியான ஆசாத் காஷ்மீருக்கு உள்ள அதிகாரங்களை பாகிஸ்தான் அரசு அளிக்கவில்லை. 2017-ல் பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 72,496 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியின் மக்கள் தொகை 14, 92,924 ஆகும். 1963 -ல் பாகிஸ்தான் வடக்கு நிலங்கள் பகுதியிலிருந்து காரகோரம் பகுதியை சார்ந்த ஒரு பகுதியை சீன அரசிற்கு அளித்தது. உலகின் இரண்டாவது உயரமான சிகரமான கே-2 & மற்றொரு உயரமான சிகரமான நங்க பர்வதம் இங்கு உள்ளன.
பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட சில பகுதிகளை தவிர லடாக் உட்பட காஷ்மீரின் பெரும்பான்மையான பகுதிகளை இந்திய ராணுவம் கைப்பற்றியது. போருக்கு பின்னர் காஷ்மீரின் மன்னருடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் மாநிலமாக இணைக்கப்பட்டது. இந்நிலையில் தற்காலிக தீர்வாக இந்தியாவும் பாகிஸ்தானும் எந்தெந்த பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை கொண்டுள்ளதோ அதனடிப்படையில் 1972 ஆம் ஆண்டு இரு தரப்பிலும் இயக்கப்பட்ட சிம்லா ஒப்பந்தப்படி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (Actual Line of Control) நிர்ணயம் செய்யப்பட்டது. இவ்வாறு, போர்நிறுத்தக் கோடே எல்லைக் கட்டுப்பாட்டு கோடாக மாறியது.
இந்திய-பாகிஸ்தான் போர், 1947 (Indo-Pakistani War of 1947), ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெற்ற ஆண்டே, 22 அக்டோபர் 1947 முதல் 31 டிசம்பர் 1948 முடிய நடந்த இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் நடைபெற்ற போரானது முதலாவது இந்தியா காஷ்மீர் பாகிஸ்தான் போர் என அழைக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவை தலையிட்டு இந்திய-பாகிஸ்தான் போரை 1 சனவரி 1948 -ல் முடிவுக்கு கொண்டு வந்தது.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: இந்தியா பாகிஸ்தானின் முதலாவது யுத்தமே இரு நாடுகளுக்கு இடையேயான முரண்பாட்டை தொடக்கி வைத்தது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.