சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் திரைப்படங்களில் கதாநாயகர்களை நல்லவர்களாக சித்தரிப்பார்கள். அவர்களும் தவறானவற்றிற்கு எதிராக போராடுவது போன்ற கதை, வசனங்கள் திரைப்படங்களில் இடம் பெற்று இருக்கும். சமீப காலமாக இத்தகைய திரைப்பட பாணி மாறி எதிர்மறை கதாநாயக தோற்றம் (negative heroism) அதிகரித்து உள்ளது. அதாவது, திரைப்படங்களின் கதாநாயகர்களை ரவுடி போல, தாதாக்கள் போல, கும்பல்களின் தலைவர்கள் போல சித்தரித்து அவர்கள் வீர விளையாட்டுகளை செய்வதாக காட்சிகள் அமைத்து திரைப்படங்கள் தயாரிக்கும் பாணி அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உச்ச நடிகர் ஒருவரின் மருமகனும் விவாகரத்து கேட்டு வருபவருமான ஒருவர் நடித்து வெளியான ஒரு படத்தில் தலைநகரில் ஒரு பகுதியில் பல ரவுடி குழுக்கள் இருப்பதாக சித்தரிக்கப்பட்டு படம் முழுவதும் ரவுடி கும்பல்கள் பற்றியதாகவே இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகனும் ரௌடியாகவே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் போலவே, புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் ஒரு நடிகர் நடித்த படத்தில் வில்லன் சிறுவர் சிறைச்சாலைகளில் உள்ள சிறுவர்களை தீய தொழிலுக்கு பயன்படுத்துவதாக கதை, வசனம் எழுதப்பட்ட தயாரிக்கப்பட்ட படம் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய வெற்றியை பெற்றது. இந்த இரண்டு திரைப்படங்களும் உதாரணங்களே. இதைப்போல பல திரைப்படங்கள் சமீப காலமாக வெளி வருகின்றன. இத்தகைய திரைப்படங்களை காணும் சில சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே தவறான செயல்களை செய்யும் பணியில் ஈடுபடுவது தவறல்ல என்ற எண்ணம் ஏற்படுகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், இந்தியாவில் ஒரு சில பெரு நகரங்களில் மட்டும் சண்டைக்கு செல்லவும் கட்டை பஞ்சாயத்து செய்யவும் திருட்டு தொழிலை புரியவும் கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றங்களை புரியவும் நில அபகரிப்பு பணிகளுக்கும் மாமூல் பணம் வசூலிக்கவும் பணப்பிரச்சனைகளை முடிக்கவும் ஒரு தலைவனை கொண்ட கும்பல்களும் கூடி கூலிப்படையினரும் இருந்து வந்தன. சமீப காலமாக இந்தியாவில் பல நகரங்களில் தீய செயல்களை புரியும் கும்பல்களும் கூலிப்படையினரும் அதிகரித்து வருவதாக கருதப்படுகிறது.
குறிப்பிட்ட வேலையை செய்ய ஆட்களை சேர்ப்பது போல, கட்டை பஞ்சாயத்து செய்ய செல்லும் போது உடன் வரவும் வன்முறை புரிய செல்லும் போது உடன் பணியாற்றவும் வம்பு இழுத்து சண்டை செய்ய செல்லும்போது அடியாட்களாக இருக்கவும் நில அபகரிப்பு பணிகளுக்கும் மாமூல் பணம் வசூலிக்கவும் பணப்பிரச்சனைகளை முடிக்கவும் தீய கூட்டத்தை வழிநடத்தும் நபர்கள் ஆட்களை சேர்க்கிறார்கள். வறுமையான சூழ்நிலையை கொண்ட கொண்டவர்கள், படிப்பை பாதியில் நிறுத்தி வேலை இல்லாமல் இருப்பவர்கள், மது உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையானவர்கள் போன்ற சிறுவர்களையும் இளைஞர்களையும் குறி வைத்து ஆள் சேர்க்கும் படலத்தை சில கும்பல்கள் நடத்துகின்றன. இவ்வாறுதான் கட்டை பஞ்சாயத்து குழுக்களும் கடத்தல் கும்பல்களும் வன்முறை குழுக்களும் கூலிப்படையினரும் ரவுடி கும்பல்களும் உருவாகின்றன. கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான் என்ற பழமொழிக்கேற்ப இந்த கும்பல்களில் ஒரு முறை உள்ளே சென்று விட்டவன் வெளியில் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.
பெருநகரங்களில் மட்டும் இருந்த தீய தொழில்களுக்கான கும்பல் கலாச்சாரமானது மெல்ல மெல்ல சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் நகர்ந்து வருகிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் போதை பொருள் பழக்கம் சிறுவர்களிடையும் மாணவர்களியையும் இளைஞர்களிடையையும் அதிகரித்து வருகிறது. அடிதடி சண்டைக்கு செல்வது ஒரு தொழில் என்ற மனப்பான்மையையும் கூலிப்படையினராக செல்வது வீரம் என்ற மனப்பான்மையையும் விதைக்கும் நயவஞ்சகர்கள் அதிகரித்துள்ளார்களோ எனக்கருத தோன்றுகிறது. இத்தகைய சூழல் ஏதோ ஒரு மாநிலத்தில் மட்டும் நிலவுகிறது என்று யாரும் கூறிவிட முடியாது.
சிறுவர்களும் மாணவர்களும் இளைஞர்களும் தீய கும்பல்களில் சிக்கி வாழ்க்கையை கெடுத்துக் கொள்வதோடு அமைதியான மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்காமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்வது அவசியம் ஆகும். குறிப்பாக, ஒவ்வொரு குழந்தையும் குறைந்தபட்சம் மேல்நிலைப்பள்ளி படிப்பை முடிக்கும் வரை படிப்பில் இடை நில்லாமல் இருக்க தக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வது அவசியமாகும். பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தவர்களுக்கு சுய தொழிலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசின் முக்கிய கடமையாகும்.
ரவுடி கும்பல்களை ஒழிக்க வேண்டிய கடமை காவல்துறையினரை சார்ந்தது. இந்த பணியை செவ்வனே செய்ய தவறும் போதும் தீய கும்பல்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் போதும் தவறிழைக்கும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். தீய கும்பல்களுடன் தொடர்பு வைத்திருக்கும் அரசியல்வாதிகளை அரசியல் கட்சிகள் நீக்க முன் வருவார்களா? என்ற கேள்வியும் முக்கியமானதாக எழுகிறது.
எவ்வாறு இருப்பினும் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்களை தீய பழக்க வழக்கங்களில் இருந்து காப்பாற்றி அடிதடி, சண்டை போன்றவற்றை தொழிலாக ஊக்குவிக்கும் கும்பல்களில் சேராமல் தடுத்து தேசம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இல்லாது போனால்?…….என்ற கேள்வியை கற்பனை செய்தால் ஆபத்தான உலகம் கண் முன்பு தோன்றுகிறது.