மனித உடலில் மொத்தம் எழுபத்தெட்டு முக்கிய உறுப்புகள் உள்ளன. இந்த உறுப்புகள் ஒன்றிணைந்து பல்வேறு உறுப்பு அமைப்புகளை உருவாக்குகின்றன. இந்த 78 உறுப்புகளில் இதயம் (heart), மூளை (brain), சிறுநீரகம் (kidney), கல்லீரல் (lever) மற்றும் நுரையீரல் (lungs) ஆகிய ஐந்து உறுப்புகள் உயிர்வாழ்வதற்கு அவசியமானவை. இந்த ஐந்து உறுப்புகளில் ஏதேனும் ஒன்று சில நொடிகள் கூட செயல்படாமல் இருந்தால் மரணம் ஏற்படும். இன்று இதயத்தை பற்றி இங்கு பார்க்கிறோம்.
நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் ஐந்தும் எட்டும் உள்ள மட்டத்தில் நடு மார்பிடையப் பகுதியில் (middle mediastinum) இரட்டை மென்சவ்வாலான ஒரு பாதுகாப்புப்பையினுள் மனித இதயம் அமைந்துள்ளது. நான்கு வால்வுகளைக் கொண்ட இதயத்தின் இடது பகுதி வலிமை மிக்கதாக அமைந்துள்ளது. நான்கு அறைகளைக் கொண்டஇதயத்தின் பெரும்பான்மைப் பகுதி இடது மார்பில் அமைந்துள்ளது. ஒரு வால்வு திறக்க அல்லது முழுமையாக மூடத் தவறினால், இதயத்தின் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கு இயல்பான இரத்த ஓட்டத்தை சீர்குலைத்து விடும் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் ரத்தத்தை ரத்தக் குழாய்களின் வழியாகச் இரத்தத்தை பம்ப் செய்வது இதயத்தின் வேலையாகும்.
தமனி (Artery) என்பது இதயத்திலிருந்து இரத்தத்தை எடுக்கும் இரத்த நாளமாகும், அதே சமயம் நரம்பு என்பது இதயத்திற்கு இரத்தத்தை மீண்டும் கொண்டு வரும் இரத்த நாளமாகும். இதயத்தின் தமனிகளில் இரத்த ஓட்டம் (Blood flow) தடைப்படுவதால் ஏற்படும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய நோய் மாரடைப்பு. நெஞ்சை அழுத்துவது போன்ற வலி, வாந்தி, வியர்வை, மூச்சுவிடுவது கடினமாக இருத்தல், மார்பில் உள்ள அசௌகரியம், குமட்டல், அஜீரணம், நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று வலி போன்றவை மாரடைப்பின் அறிகுறிகள் ஆகும். இதயத்தில் ரத்த ஓட்டத்தை புரியக்கூடிய தமனிகளில் – நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் ஓட்டம் பாதிக்கப்படும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. ஆஞ்சியோகிராபி அல்லது இதயத்தை திறந்து அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் ரத்த அடைப்பை நீக்க மருத்துவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)



இரத்தத்தில் கொலஸ்ட்ரால் (cholesterol) அதிகரிப்பதால், இதய நோய் அபாயமும் அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் (high blood pressure) இதயத்தின் பணிச்சுமையை அதிகரிக்கிறது. இதனால், இதயம் கெட்டியாகி விறைப்பாக மாறுகிறது. இது பக்கவாதம் (Stroke), மாரடைப்பு (heart attack), சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதய செயலிழப்பு ஆகியவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. உடல் பருமன், புகைபிடித்தல், உயர் இரத்த கொழுப்பு அளவுகள் அல்லது நீரிழிவு நோய் ஆகியவற்றுடன் உயர் இரத்த அழுத்தம் இருக்கும்போது, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் ஆபத்து பல மடங்கு அதிகரிக்கிறது. அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு குறிப்பாக இடுப்பில் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு வேறு ஆபத்து காரணிகள் இல்லாவிட்டாலும் இதய நோய் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீரிழிவு உஙக்ளுக்கு இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை தீவிரமாக அதிகரிக்கிறது.
சாதாரணமாக இதய துடிப்பு (Heart rate) ஒரு நிமிடத்திற்கு 100 துடிப்புக்கு அதிகமாக இருந்தால் அல்லது நிமிடத்திற்கு 60 துடிப்புக்கு குறைவாக இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். இதயம் சீரற்ற முறையில் துடிப்பதால் இதயத்தில் இரத்த உறைக்கட்டிகள் உருவாகும். இக்கட்டிகளின் பாகங்கள் வெளியேற்றப்பட்டு மூளையில் உள்ள இரத்த நாளத்தை முடுக்கும் வகையில் பயணிக்கின்றன. இதன் விளைவாக பக்கவாதம் ஏற்படுகிறது.மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், படபடப்பு மற்றும் லேசான தலைவலி ஆகியவை அசாதாரணமான வேகமான இதயத் துடிப்பின் அறிகுறிகளாகும். மார்பு வலி, மூச்சுத் திணறல், கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் குழப்பம் ஆகியவை அசாதாரணமான மெதுவான இதயத் துடிப்பின் அறிகுறிகளாகும்.
காலின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சோலியஸ் தசை, கெண்டைக்கால் தசையின் (Calf) ஒரு பகுதியாகும். நாம் நிமிர்ந்து நிற்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல், இரத்த ஓட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரண்டு முக்கியமான நரம்புகளைக் கொண்டுள்ளது இந்த தசை. சோலியஸ் உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்து எடுத்து செல்லும் பணியில் இதயத்திற்கு உதவுகிறது. இந்த காரணத்திற்காக தான் வல்லுநர்கள் சோலியஸ் தசையை “இரண்டாம் இதயம் (second heart)” என்று கூறுகின்றனர். நீங்கள் நடக்கும்போது, உங்கள் ஒவ்வொரு அடியிலும் உங்கள் கால்களில் இருக்கும் இரத்தத்தை மீண்டும் இதயத்திற்குத் இந்த தசை தள்ளுகிறது.
இதயம் ஆரோக்கியமாக இருந்தால் உடல் முழுமையும் ஆரோக்கியம் பெறும். எனவே, உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் செய்யக்கூடிய ஒரு விஷயம், இதய ஆரோக்கியமான உணவை உண்ணத் தொடங்குவதாகும். இதய நோய்கள், மாரடைப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை தகுந்த ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் நாட வேண்டும். உங்கள் உடலுக்கு ஏற்ற இதய ஆரோக்கியத்திற்கான உணவு வகைகளை ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனை பெற்று உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதயத்தை பாதுகாப்போம்! வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வோம்!
பூங்கா இதழ் (The News Park) கருத்து: விரைவில் மனித உடலின் மற்றொரு முக்கிய அங்கமான மூளையைப் பற்றி பார்ப்போம்.