Advertisement

பேய் இருக்கிறதா? இல்லையா? சொல்கிறார்கள்! சட்டக் கல்லூரி மாணவிகள்

பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியை கடந்த வாரம் பூங்கா இதழில் வாக்காளர் சாமியின் எழுப்பியிருந்தார். இதற்கு “பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்கா” இணைய இதழ்களில் பயிற்சி கட்டுரையாளர்களாக உள்ள சட்டக் கல்லூரி மாணவிகள் பதிலளித்துள்ளார்கள்.

எஸ். ரம்யா, சட்டக் கல்லூரி மாணவி

பேய் இருக்கிறதா? இல்லையா? என்பது இன்றும் ஒரு விவாதத்திற்குரிய தலைப்பாகவே உள்ளது. ஆதிகாலத்தில் இருந்து இந்த காலம் வரை  பெரும்பாலான மக்களால் பேய் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்த கூற்றானது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. உணர்வுகள் அடிப்படையில் சிலரால் பேய் இருக்கிறது அல்லது இல்லை என்று நம்பப்படுகிறது. 

பேய் இருக்கிறது என்று கூறுபவர்கள்தான் பேய் இருப்பதாக உணர்ந்து கொண்டே இருப்பார்கள். யாரும் பேயை பார்த்ததாக கூறுவதில்லை. அங்கே ஏதோ ஒரு உருவம் இருப்பது போல தெரிந்தது, தன்னை சுற்றி யாரோ இருப்பது இருந்தது என்றுதான் கூறுகிறார்கள்.  இது ஒவ்வொரு நபரின் உணர்வு சார்ந்த அம்சமாக இருக்கிறது. பேயை பார்த்திருக்கிறேன் என்று   கூறும் நபர்களால் அதனை நிரூபிக்க முடியாது. கேமராவிலோ அல்லது புகைப்படத்திலோ பேய்கள் இருந்திருக்கிறது என்று சிலர் காண்பிக்கிறார்கள். ஆனால், அதனை பலர் ஏற்றுக் கொள்வதில்லை. பேய்கள் இருக்கின்றனவா? இல்லையா? என்பது உணர்வு மற்றும் நம்பிக்கை பொருத்தே அமைகிறது. பேய் இல்லை என்று கூறுபவர்கள் பேய் இருக்கிறது என கூறுபவர்களை ஆதாரம்பூர்வமாக நிரூபிக்க சொல்லுகிறார்கள். பேய் இருக்கிறது என்று கூறுபவர்கள் தொடர்ந்து அவரை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பல்கீஸ் பீவி. மு, சட்டக் கல்லூரி மாணவி

பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஒரு வினாவாக எழுப்பியுள்ளார் வாக்காளர் சாமி. இதற்கான பதிலை கூறுவது   சற்று கடினமே ஆகும். அதற்கு முதலில் பேய் ஒன்று உள்ளதா? என்பதை அறிவியல் பூர்வமாக நிருபிக்க வேண்டும். நான் இங்கு ஐன்ஸ்டீன் கூற்றை எடுத்துக்கூற வேண்டும். அவை    “இயற்பியல் விதிகளின்படி குளிரும் இல்லை, இருளும் இல்லை. குளிர் என்று நாம் கருதுவது உண்மையில் வெப்பம் இல்லாததுதான், இருள் என்பதும் உண்மையில் ஒளி இல்லாதது, அதைப்போல் தீமை  (Evil) இல்லை, தீமை என்பது கடவுள் இல்லாததுதான். இது இருளையும் குளிரையும் போல, கடவுள் இல்லாததை விவரிக்கிறது” என்கிறார் ஐன்ஸ்டீன். இந்த பிரபஞ்சமானது நேர்மறை மற்றும் எதிர்மறை  சக்திகளால் ஆனது என்பர். அவ்வாறாக பார்த்தால் கடவுள் இருந்தால் பேய் என்ற ஒன்றும் இருக்கும் அல்லவா! இவ்வுலகில் மனிதர்களே கடவுளாகவும் பேய்யாகவும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை!!

ஆர். லக்ஷிதா, சட்டக் கல்லூரி மாணவி

மனிதனின் அறியாமை மற்றும் மூடநம்பிக்கையின் வடிவமே பேய். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல, மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய நிகழ்வுகளை அவர்கள் பேய் என்று குறிப்பிடுகிறார்கள்.  பேய்களின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பேய் இருக்கிறது அல்லது இல்லை என்று சொல்லுவதற்கு யாரிடமும் ஆதாரங்கள் இல்லை. எல்லாரும் ஒரு அனுமானத்திலேயே இருக்கு இல்லை என்று கூறுகிறார்கள்.

பேய்களின் குணங்கள் மிக மூர்க்கமாகவும் கொடூரமாகவும் இருக்கும் என்று சொல்வார்கள். இங்கு சில மனிதர்கள் பெண்களிடமும் குழந்தைகளிடமும் மூர்க்கமாகவும் கொடூரமாகவும் நடந்து கொள்வதை பார்க்கும் போது, ஒரு வேலை அவர்களுக்கு பேய் பிடித்துவிட்டதோ? என்றுதான் தோன்றுகிறது. அதைதான் பணப் பேய், பெண் பேய், பதவிப் பேய் என்று கூறுகிறார்களோ? இன்றைய சமுதாயத்தில் நடப்பதை பார்க்கும் பொழுது பேய்களை விட உயிருள்ள மனிதர்களிடமிருந்து தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. என்னை பொருத்தவரை பேய் இருக்கிறது.‌ அது மனிதனின் கொடூர குணமாகவும் கற்பனை  திறனாகவும் வெளிப்படுகிறது.

டி. கீர்த்தனா, சட்டக்கல்லூரி மாணவி

பேய் என்ற ஒன்று இல்லை. பேய் என்றால் பயப்படாதவர்கள் யாரும் இல்லை. பேய் என்ற சொல்லுக்கு அச்சுறுத்துவது, அஞ்சுவது என்று பொருள். ஆனால், பேய் என்ற ஒன்று இல்லை என்ற மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரமும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பழங்கால கல்வியறிவற்ற மக்கள் பேய் என்ற ஒன்று இருப்பதாக நம்மிடம் மூடநம்பிக்கைகளை புகுத்தியுள்ளனர்.

பேய் என்பது இறந்த நபர்களின் ஆன்மா அல்லது ஆவி அல்லது மனிதர் அல்லாத விலங்கின் உயிருடன் தோன்றும் என்று நம்பப்படுகிறது. பேய்கள் உள்ளன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது அறிவியலின்  ஒருமித்த கருத்து, பேய் என்று கூறி நம்மிடம் பயத்தை உண்டாக்கி விட்டார்கள், ஆனால், இந்த உலகில் பேய் என்பதே கிடையாது. அது வெறும் கற்பனை அதைக்கண்டு நாம் பயப்படக்கூடாது.

எம், ஜனனி, சட்டக் கல்லூரி மாணவி

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு, இல்லை என்று நான் சொல்வேன்.  காரணம் இரவு நேரத்தில் வெளியே செல்வது, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு செல்வது, அக்கம் பக்கத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் இதை வைத்து பேய் இருக்கு என்று திரைபடத்திலும் கிராமபுரத்திலும் கூறுகின்றோம். நம்மில்  யாரும் பேயை நேரில் பார்த்தது  இல்லை. ஆனால், பேய் என்றால் மிகவும் பயம்.  அறிவியல் ரீதியாக பார்க்கும் போது இறந்தவரின் ஆவிகள் என கூறும் பேய் என்பது இருக்க எந்த விதமான ஆதரமும் இல்லை.  இயற்பியல் ஆய்வாளர்கள் பிரையான் காக்ஸ்,    லார்ஜ் ஹார்ட்ரான் காலிடெர்   ஆகியோர் பேய்   அமானுஷ்யம் என்பதை முழுமையாக நிராகரிக்கிறார்.  சமூகவியலாளர்களான டென்னிஸ் மற்றும் மைக்கேல் வாஸ்குல் ஆகியோர் டெம்பிள் யுனிவர்சிட்டி பிரஸ் 2016 என்ற புத்தகத்திற்காக சிலரை நேர்காணல் செய்தனர்.  அதில் பேயை சந்தித்தததாக யாரும் உறுதியாக கூறவில்லை. மர்மமான, விசித்திரமான என வெறுமனே நம்புகின்றனர். எனவே,  பேய் என்பது இல்லை என்பது எனது கருத்தாகும்.

எ. ரம்யா, சட்டக் கல்லூரி மாணவி

பேய் என்பது இல்லை. முன்னோர்களால் சொல்லப்பட்ட   பேய் கதைகள் மற்றும் கலாசாரம் சார்ந்த கதைகளை மனதளவில் உள்வாங்கி பேயை கற்பனை வடிவில் உருவாக்குகிறோம் – உள்ளுணர்வால் பிரதிபளிக்கிறோம். பேய் என்பது ஒரு கற்பனை மற்றும் நம்மால் உருவாக்கப்பட்ட ஒரு பிரம்மை. 

பா. பிரதி பாலா, சட்டக் கல்லூரி மாணவி

பேய் என்பது கட்டுக்கதைகளில் வரும் பாத்திரமே. இதனை பயன்படுத்தி சிலர் தீய வழியில் பணம் சம்பாதிக்கிறார்கள். திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளின் சின்ன தொடர்களிலும் மக்கள் பேய் படங்களை விரும்பி பார்ப்பதால் அதனை உருவாக்கி பலர் சம்பாதிக்கிறார்கள் பேய் என்பது மக்களின் மூடநம்பிக்கையே.

எம் பூஜா, சட்டக் கல்லூரி மாணவி

திரைப்படங்களில் கதாநாயகனுக்கு எதிராக வில்லன் பாத்திரங்கள் அமைக்கப்படுகிறது அதேபோல முந்தைய காலத்தில் தெய்வங்களுக்கு எதிராக பேய் பூதம் அரக்கன் ஆகியவற்றை உருவாக்கியுள்ளார்கள். சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு பெண் மருத்துவரை கொடூரமாக கொலை செய்தானே அவன் தான் பேய். அத்தகைய தீய செயல்களை புரிபவரே பேய்கள். லஞ்சம் வாங்குபவர்கள் பண பேய்கள். சிலர் மனித உருவத்தில் பேய்களாக இருக்கிறார்கள் உண்மையில் பேய் என்று ஒன்றும் கிடையாது.

சி. விமலா, சட்டக் கல்லூரி மாணவி

பேய் என்பது ஒரு சமூகத்தின் மூட நம்பிக்கை என்று எளிதாக கூறிவிட முடியாது. சிறு வயதில் இருந்தே இது போன்ற விஷயங்களை அதிகம் கேட்டுள்ளேன். அது இருட்டில் மட்டும் வரும் என்றும் அது அச்சுறுத்தும் என்றும் ஓசைகளை ஏற்படுத்தி தனக்கு தேவையானவற்றை யாராவது உடம்பில் இருந்து நிறைவேற்றிக்கொள்ளும் என்றும் அதன் ஆசை நிறைவேறும் வரை அது சுற்றி கொண்டு இருக்கும் என்றும் பேய் உள்ளதாக கூறுபவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், எப்பொழுது மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அன்றில் இருந்து பேய் என்ற ஒன்று இல்லை என்றும் அது மறைந்து விட்டதாகவும் என்னுடைய தாத்தா கூறியுள்ளார். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதை பயன்படுத்தி பல நபர்கள் மக்களை ஏமாற்றியும் வருகின்றனர். மக்கள் இன்றைய காலகட்டத்தில் அனுதினமும்  சரியாக தூங்குவதில்லை. இதனால், அவன்  சோம்பலாக காணப்படுகிறான். இதை மக்கள் அவனுக்கு எதோ பிடித்திருக்கிறது என்று நினைத்து அதை சரி செய்பவர்களுக்கு அதிகம் செலவு செய்கின்றனர். இதை பயன்படுத்தி பல நபர்கள் ஏமாற்றுகின்றனர். எந்த அளவுக்கு ஒரு விஷயத்தை நம்புகிறோமோ, அந்த அளவுக்கு அதை நம் மனமும் நம்புகிறது. பேய் என்பது நம்முடைய முன்னோர்கள் நாம் இரவில் வெளியே செல்ல கூடாது என்பதற்கு கூறிய ஒரு பாதுகாப்பு கதை. மன தெளிவு சரியாக இருந்தால் எதுவும் நம்மை நெருங்காது.

Related Articles

2 COMMENTS

  1. Ellarum correct ah sollirukiga. Proof keta atha kata yarum ready illa.. Nammaku epovum onu matum nalla purium ena apdina. Oru nalla thu erukuna kandipa ketathum erukum apdina Namma namburomo antha mari. Sami erukurathu unmai na pei erukkurathum unmai tha……. Apdina periyavaga solldraga…. Edhu epdi eruthalum namma Nalla vidhama yosikalam. Pei illa apdikirathu tha correct…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles