Advertisement

நாடு முழுவதும் 45 வரி தீர்ப்பாயங்களை அமைக்க மத்திய அரசு உத்தரவு. மக்கள் நல சேவை உரிமை, தொழில்முனைவோர் குறை தீர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆணையங்கள் அமைக்கப்படுமா?

பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளுக்கான தீர்ப்பாயத்தின் தலைமையகம் கடந்த 2023 செப்டம்பரில் புது தில்லியில் அமைக்கப்பட்டு இந்த தீர்ப்பாயத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டார்.  இந்நிலையில் இந்தியா முழுவதும் 45 இடங்களில் ஜிஎஸ்டி தீர்ப்பாயங்களையும் (GST Tribunal) 16 இடங்களில் ஜிஎஸ்டி முகாம் தீர்ப்பாயங்களையும் (GST Tribunal Circuit Bench) மத்திய அரசு அமைத்து நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் ஜிஎஸ்டி தீர்ப்பாயங்களும் கோயம்புத்தூரிலும் பாண்டிச்சேரியிலும் ஜிஎஸ்டி முகாம் தீர்ப்பாயங்களும் விரைவில் அமைக்கப்பட்டு செயல்பட உள்ளன.  இதற்கான பணிகள் விரிவாக நடைபெறுவதைப் போல மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் சில தீர்ப்பாயங்களை உரிய சட்டத்தை இயற்றி அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சேவை பெறும் உரிமை ஆணையம்

மத்திய, மாநில அரசு அலுவலகத்தில் சான்றிதழ்களைப் பெற, தொழில் நடத்துவதற்கான உரிமங்களைப் பெற என பல விண்ணப்பங்களை மக்கள் சமர்ப்பிக்கிறார்கள். அவற்றின் மீது உரிய நடவடிக்கை குறிப்பிட்ட காலத்தில் அரசு அலுவலர்கள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.  இதனை போக்கும் வகையில் சேவை உரிமை சட்டத்தை கொண்டு வந்து மாவட்ட அளவில் மாவட்ட சேவை உரிமை ஆணையங்களையும் (District Commission of Right to Services) மாநில அளவில் மாநில சேவை உரிமை ஆணையங்களையும் தேசிய அளவில் தேசிய சேவை உரிமை ஆணையத்தையும் அமைத்தால் பொதுமக்களுக்கு மிக உபயோகமாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆட்சியில் வெளிப்படை தன்மை இருப்பதற்காகவும் பொது மக்கள் தேவையான விவரங்களை அறிந்து கொள்வதற்காகவும் 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம் (Right to Information) மக்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருந்து வருகிறது. இதைப் போல சேவை உரிமை சட்டத்தை (Right to Service) இயற்றி சேவை உரிமை தீர்ப்பாயங்களை அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில்  கடந்த 2011 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதா இன்று வரை சட்டமாக்கப்படவில்லை.

பட்டா உள்ளிட்ட வருவாய்த்துறை ஆவணங்கள், பிறப்பு – இறப்பு, சாதி,  வருமானம், வாரிசு உள்ளிட்ட சான்றிதழ்கள், மின்சாரம் – குடிநீர் இணைப்பு, குடிமை பொருள் அட்டை தொழில் தொடங்குவதற்கான உரிமங்கள் போன்ற அரசின் சேவைகளுக்காக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த விண்ணப்பங்கள் மீது தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில்   பயன் பெறுகிறார்களா? என்று பார்த்தால் தலையாயப் பிரச்சினையாக கூறப்படுவது கால தாமதமாகும்.  இதனை அகற்ற தகுந்த ஆவணங்களுடன் மக்கள் கேட்கும் ஒவ்வொரு சேவையையும் வழங்குவதற்கு காலக்கெடு  நிர்ணயம் செய்து அந்த காலத்திற்குள் சேவையை வழங்க வேண்டும் என்பது சேவை பெறும் உரிமைச் சட்டத்தின் பிரதான அம்சமாகும். 

எம்.எஸ்.எம்.இ. குறைதீர் ஆணையம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி (MSMED) சட்டம் கடந்த 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களையும் (products) வழங்கும் சேவைகளையும் (services) பெறக்கூடியவர்கள்   பணம் செலுத்துவதற்கு 45 நாட்களுக்கு மேலான  காலதாமதமும் மறுப்பும் (delay and refusal) தெரிவிப்பதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நலிவுடைய கூடும் என்பதை கருத்தில் கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி (MSMED)  சட்டத்தில் பெசிலிடேசன் கவுன்சில் (facilitation council) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த அமைப்பிற்கு தனியான அலுவலகங்களும் முழு நேர அலுவலர்களும் இல்லை. தொழில் முனைவோருக்கு வரவேண்டிய பணத்தை பெற்று தருவதில் விரைவான சேவை வழங்கும் அமைப்பாக பெசிலிடேசன் கவுன்சில் செயல்படுகிறது என கூற முடியாது. இதனை போக்கும் வகையில் உரிய சட்ட திருத்தம் செய்து பெலிசிலிடேஷன்  கவுன்சிலுக்கு பதிலாக தேசிய அளவிலும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் குறைதீர் ஆணையத்தை (Distict MSME Disputes Redressal Commission) அமைக்கலாம்.   இதன் மூலம் தொழில் முனைவோருக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண இயலும்.

மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்

சுற்றுச்சூழலுக்கான அச்சுறுத்தல்களும் ஆபத்துகளும் அதிகரித்து வரும் இந்த வேளையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியாவில் நான்கு மண்டல பசுமை தீர்ப்பாயங்கள் (சென்னை, கொல்கத்தா, பூனே மற்றும் போபால்) அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்கள் எளிதில் அணுகும் (easy access) வகையில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் அமைப்புகள் ஏற்படுத்துவது அவசியமானதாகும். தீர்வு எப்போதுமே எளிதில் அணுகக் கூடியதாக இருந்தால்தான் மக்கள் அதனை பெறுவதில் சிரமம் இருக்காது. இதனை மனதில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும்   மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தை (District Environmental Protection Commission) அமைக்க தகுந்த சட்டத்தை இயற்றி அமல்படுத்துவது தற்போதைய தேவையாக உள்ளது.

பண பிரச்சினை

அரசுக்கு வருவாய் தரக்கூடிய புதிய அமைப்புகளை உருவாக்க உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் சம்பளத்திற்கான செலவுகளுக்கு உடனே அனுமதி அரசால் வழங்கப்படுகிறது. மக்களின் உரிமைகள் மற்றும் நலனுக்கான புதிய அமைப்புகளை உருவாக்கினால் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் சம்பளத்திற்கு செலவு ஏற்படும் என எப்போதுமே அரசின் நிதித்துறையினர் கருதுகிறார்கள். அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் மூலம் சேவை உரிமை, தொழில்முனைவோர் குறை தீர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆணையங்களை அமைக்க இயலும். மூலம் சேவை உரிமை, தொழில்முனைவோர் குறை தீர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆணையங்களை அமைப்பதற்கு செலவு ஏற்படும் என அரசு கருதினால் இத்தகைய அமைப்புகளை உருவாக்கி அதன் பொறுப்பை மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களுக்கு வழங்கலாம்.  இதன் மூலம் அரசுக்கு கூடுதல் நிதி சுமை தவிர்க்கப்படுவதோடு பொதுமக்களும் எளிதில் மாவட்ட தலைநகரங்களில் தீர்வை பெற அணுக இயலும். மனித உரிமைகள், சிறுவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் அவை மாவட்ட நீதிமன்றங்களிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு

நுகர்வோர் உரிமை மீறல்கள், நியாயமற்ற வர்த்தக நடைமுறை, தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் தொடர்பான புகார்களை கடிதமாக அல்லது இணையதளம் மூலமாக பொதுமக்கள் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பிற்கு (Central Consumer Protection Authority) அல்லது இந்த அமைப்பின் பிராந்திய ஆணையர்களுக்கு அல்லது மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்கலாம். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பை அணுகுவதில் பொதுமக்களுக்கு எளிதான தன்மை இல்லை என்றே கருதலாம். இதனால் இந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள தவறான விளம்பரம் போன்றவற்றை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட நுகர்வோர் ஆணையங்களிடம் வழங்கப்பட வேண்டும்.

எளிதில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பகுதியில் சேவை உரிமை, தொழில் முனைவோர் பிரச்சனைகளுக்கான தீர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிற்கான மக்கள் நல அமைப்புகளை விரைவில் அரசு ஏற்படுத்தும் என்று நம்புவோம்.

சேவை உரிமை, தொழில் முனைவோர் பிரச்சனைகளுக்கான தீர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரம் அமைப்பு ஆகியவை குறித்த கட்டுரைகளை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களை தொட்டால் விரிவாக கட்டுரைகளை காணலாம்.

https://theconsumerpark.com/right-to-service

https://theconsumerpark.com/consumer-election-manifesto

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles