ஒரு தந்தை தன் பெண் பிள்ளையை முதன் முதலில் தன் கைகளால் ஏந்தும் பொழுது பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள உறவின் அடிப்படையான அழகிய உறவு துவங்குகிறது. தந்தை தன்னுடைய குழந்தையை தன் வீட்டின் குலதெய்வமாகவே பார்க்கத் துவங்குவார். பெண் குழந்தை தன் தாய் போல இருக்கிறாள் என்று அவனுடைய முதல் பார்வையிலேயே தோன்றும். தன்னை அப்பா என்று அழைக்கும் அந்த நொடி இந்த உலகில் வேறு எதுவுமே பெரிதல்ல என்று தோன்றும் அளவிற்கு அந்த தகப்பனின் புன்னகை பூத்து மிளிரும்.
தாய் என்னதான் பால் ஊட்டி, சோறு ஊட்டி, குளிக்க வைத்து புது உடைகள் அணிவித்து அனைத்தையும் பார்த்துக் கொண்டாலும் தன் தந்தை வேலைக்குச் சென்று வீட்டிற்கு வரும் அந்த ஒரு நொடி அந்தப் பிள்ளையின் மகிழ்ச்சி அளவிட முடியாதது. பெண் குழந்தை எடுத்து வைக்கும் முதல் அடியில் இந்த உலகில் உள்ள அனைத்து அதிசயங்களும் தோற்றுப் போகும். ஆடி அசைந்து அழகாக நடை பழகி அப்பா என ஓடி வந்து அவரை அனைத்துக் கொள்ளும் அந்த ஒரு நொடி தந்தையின் ஆயிரம் சிரமங்களும் மறந்துவிடும்.
அவள் பேசும் அந்த மழலை மொழியை கேட்க ஓடோடி வரும் அப்பா தன் மனைவி அம்மா இருவரையும் மறந்து தன் குழந்தை கூறும் சொல்லுக்காக ஏங்கித் தவிப்பான். அப்பாவின் பாசமும் விண்ணை முட்டும் அளவிற்கு இருக்க அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் முதல் முதலில் பார்க்கும் உன்னதமான மாசற்ற அன்பு உடைய ஆணாக தந்தை தவிர வேறு யாரு இருக்க முடியும் என்று அப்பொழுது அவளுக்கு தெரியாது. அவள் வாழ்க்கை தந்தையின் அரவணைப்பில் இனிதே துவங்க ஆரம்பிக்கும்.
தன் பெண் பிள்ளையை நன்கு படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஒரு நல்ல தந்தைக்கு எப்பொழுதுமே இருக்கும். அவன் தூங்கும் பொழுதும் அவன் அரவணைப்பையே அந்த பெண் பிள்ளை நாடும். நகர்ந்து செல்லும் நாட்கள் அவளை மெல்ல பூப்படைய செய்து தந்தையின் அரவணைப்பிலிருந்து சற்று தள்ளி நிற்க வைக்கும். அவள் பின்பு தன்னுடைய படிப்பை முடிக்க வேண்டும் என்று நோக்கத்துடன் படிக்கச் செல்ல ஆரம்பிப்பாள். அப்பாவோ தனது மகள் நன்கு படித்து முடிக்க வேண்டும் என்பதற்காகவே எவ்வளவு துயரம் இருந்தாலும் தாங்கிக் கொள்வார். இந்த உறவில் ஒருபோதும் எந்த ஒரு போலித்தனமும் தேவையும் இருக்காது.
தன் மகளுக்கு பிடித்தவற்றை வாங்கி தருவதும் தன் மகளை அழகுப்படுத்தி பார்ப்பதுமே அந்த தந்தையின் எண்ணமாக இருக்கும். மகளும் தன் தந்தைக்கு பிடித்ததை ஒரு வேலை செய்து கொடுத்தேனும் மனம் மகிழ்வாள். அது பிடிக்கிறதோ இல்லையோ அந்த தந்தை அருமையாக உள்ளது மகளே என்று தேன் அமிர்தம் போல உண்பது அவன் மனைவிக்கு சற்று கோபமாக தான் இருக்கும். “நான் சேர்த்து வைத்த காசுக்கு ஒரு சட்டை எடுத்து வைத்திருக்கிறேன் அப்பா” என பெண் பிள்ளை தனது பிறந்த நாளைக்கு எடுத்துக் கொடுக்கும் அந்த ஒரு சட்டையை போட்டவுடன் அந்த அப்பாவின் முகம் அப்படி மலரும் ஆயிரம் கோடி கையில் பணம் இருந்தாலும் அந்த ஒரு சட்டைக்கு ஈடாகாது.
தந்தையும் மகளும் பேசும் பொழுது ஒரு தாய் தன் மகனிடம் பேசுவது போலவே தோன்றும் அந்த தந்தைக்கு. அவ்வளவு அக்கறை அப்பாவின் மீது மகளுக்கு. மகள் என்ன கூறினாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று எண்ணம் தந்தைக்கு. அவள் என்ன கேட்டாலும் அதை நிறைவேற்றுவது தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருப்பார் அந்த தந்தை. பள்ளியில் என்றாவது கூட்டிச் செல்லும் சுற்றுலாவிற்கு தன் கையில் உள்ள பணத்தை கேட்பதற்கு முன்னாலே கொடுத்து விடுவார் அப்பொழுது இருக்கும் ஆண் பிள்ளைக்கு சற்று கோபம் மூக்கின் மேல் தான் தோன்றும்.
அப்பாவின் முகம் சற்று மாறினாலும் அம்மாவிற்கு தெரிகிறதோ இல்லையோ அந்த மகள் கண்டுபிடித்து விடுவாள் என்னப்பா என்ன ஆயிற்று என்று முதலில் அவள்தான் கேட்பாள். இப்படி பாசத்தின் முடிச்சாக உள்ள உறவில் தனது படிப்பை முடித்து வேலைக்குச் சென்று தன் தந்தையின் பாரத்தை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவளும் வீட்டின் ஒரு தூணாக மாறி தந்தையின் வலது கையாக இருப்பாள்.
நாட்கள் நகர்ந்து சென்று அவளின் திருமண திருமண நாளில், பிடித்த ஆணையே திருமணம் செய்தாலும் தன் தகப்பனை விட்டுப் பிரியப் போகிறோம் என்று பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் மணமேடையிலேயே கண்கலங்கி நிற்கிறாள். தந்தையோ தன் மனம் ஆனந்தத்தில் இருந்தாலும் அடுத்து நடக்கும் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்களில் கண்ணீர் மல்க மேடையில் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருப்பார். கண்ணீரின் ஒரு துளி கீழே விழுந்து விடக்கூடாது அதை கண்ட மகள் மனம் உடைவாள் என்ற எண்ணத்தில் தன் துயரத்தையும் அடக்கிக் கொண்டு மகளை முகத்தில் மெல்லிய பொன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருப்பார்.
திருமண மேடையில் எத்தனை பேர் தன்னை சுற்றி இருந்தாலும் தன் மனம் மகிழ்ச்சியில் இருந்தாலும் மனதில் பெரிய பாரம் அந்த பெண்ணுக்கு ஏதோ ஒன்று தன்னை விட்டு செல்ல போகிறது என்ற எண்ணம் அவள் மனதை உடைத்துக் கொண்டிருக்கிறது. அவள் என்ன நினைக்கிறாள் என்று அவள் தந்தைக்கு மட்டுமே தெரியும். திருமணம் முடிந்து கணவரின் வீட்டுக்கு அந்தப் பெண் செல்லும்போது அவளின் முதல் கதாநாயகனை விற்று விட்டு பிரிகிறாள் என்றால் மிகையல்ல.