இன்று காலை ஆறு மணிக்கு பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்தார் வாக்காளர் சாமி. அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா இந்தியாவுக்கு தலைவலியாக மாறிவிடுவாரோ? என்ற குண்டை போன வாரம் போட்டு சென்றீர்கள் சாமி. இந்தியாவில் இருந்து கொண்டு ஹசீனா கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பது இந்திய வங்காளதேச உறவுக்கு நல்லதல்ல என்று வங்காளதேச இடைக்கால அரசின் தலைவர் தெரிவித்துள்ளார் சாமி” என நான் தெரிவித்ததும் “இதிலிருந்து எனது ஞானப்பார்வையை தெரிந்து கொள்” என கூறிவிட்டு கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர் சாமி.
“தமிழ்நாடு ஆளுநருக்கு கடந்த ஜூலை 31 அன்று பதவிக்காலம் முடிந்து விட்டது. அவரது பதவியை நீட்டித்து அல்லது மீண்டும் நியமனம் செய்து மத்திய அரசு தற்போது வரை உத்தரவு எதனையும் வெளியிடவில்லை. பூங்கா இதழில் இது குறித்து தனி கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தீர்கள். இந்த நிலை கடந்த 40 நாட்களாக நீடித்து வரும் நிலையில் தமிழகத்துக்கு வேறு ஒருவரை ஆளுநராக நியமிக்க கூடிய சூழல் உள்ளதோ? என தோன்றுகிறது” என்றார் வாக்காளர் சாமி.
“தமிழக பள்ளிகளில் கல்வியின் தரம் குறைவு என்று ஆளுநர் பேசியது மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதற்கு தமிழக அமைச்சர்கள் மட்டுமல்லாது ஆசிரியர் சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் அரசியல்வாதி போல கருத்துக்களை தெரிவித்து வருவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆளுநர் பதவி மாநிலங்களில் தேவைதானா? என்ற மனநிலையை ஆளுநரின் சமீபத்திய பேச்சுக்கள் உருவாக்குகின்றன ஆளுநராக இருப்பவர் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் கருத்துக்களை தெரிவிப்பதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்கிறார்கள் சில அரசியல் அறிவியல் சிந்தனையாளர்கள்.
“சென்னை தண்ணீரில் மூழ்கும் அளவுக்கு மழை பெய்த போதும் அந்த நிகழ்வை தேசிய பேரிடர் (disaster) என்று மத்திய அரசு அறிவிக்கவில்லை. வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவையும் தேசிய பேரிடர் என்று மத்திய அரசு அறிவிக்கவில்லை. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சமீபத்தில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் தேசிய பேரிடர் என்று மத்திய அரசு அறிவிக்கவில்லை. இப்படி இருந்தால் தேசிய பேரிடர் சட்டமே தேவையில்லை. தேசிய பேரிடர் சட்டத்தை திருத்தி பேரிடர் நிலை 1, நிலை 2, நிலை 3 எனப் பிரிவினை செய்து ஒவ்வொரு நிலைக்கும் எத்தகைய காரணங்கள் இருக்க வேண்டும்? என்பதை வகுக்க வேண்டும்” என்றார் வாக்காளர் சாமி. “நீங்க சொன்னா நடந்துவிடும் சாமி! அரசியல் அல்லாத வேறு ஏதாவது செய்திகள் உண்டா?” என்றேன் நான்.
“கடந்த வாரம் ஆசிரியர் தினத்தில் (செப்டம்பர் 5) அண்ணாமலை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறையின் பேராசிரியர் முனைவர் பி. சக்திவேல் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவத்துள்ளது அண்ணாமலை பல்கலைக்கழகம்” என்றார் வாக்காளர் சுவாமி. “இதில் என்ன சிறப்பு இருக்கிறது சாமி! ஆசிரியர் தினத்தில் விருதுகள் வழங்குவது வழக்கமான ஒன்றுதானே?” என்று கேட்டேன் நான்.
“மிகச் சிறப்பான பணியை செய்து கொண்டு இருப்பவர்கள் பலர் வெளி உலகத்துக்கு தெரியாமலேயே இருந்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், கடந்த 24 ஆண்டுகளாக அரசியல் அறிவியலை கற்றுக் கொடுக்கும் பணியை செய்து செய்து கொண்டிருப்பவர் முனைவர் பி சக்திவேல். தமிழகத்திலும் வெளிமாநிலங்களிலும் சில வெளிநாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அரசியல் அறிவியல் தொடர்பாக 436 நிகழ்வுகளில் நிபுணத்துவ சொற்பொழிவு (expert lectures) ஆற்றியுள்ளார் இந்த பேராசிரியர். சர்வதேச மற்றும் தேச அளவிலான ஆய்வு இதழ்களிலும் வெகுஜன பத்திரிகைகளிலும் எழுதிய இவரது 94 கட்டுரைகள் உட்பட சர்வதேச மற்றும் தேச அளவிலான ஆய்வு மாநாடுகளில் சமர்ப்பித்த கட்டுரைகளையும் சேர்த்து இவரது மொத்த கட்டுரைகளின் எண்ணிக்கை 200-க்கும் மேலாகும். நான்கு புத்தகங்களையும் சில புத்தகங்களில் சில பகுதிகளையும் (chapters) எழுதியுள்ளார்” என்றார் வாக்காளர் சாமி. “தலை சுற்றுகிறது சாமி. பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த வேண்டும், குடும்பத்தை கவனிக்க வேண்டும், இவ்வளவு வேலைகளை செய்ய இவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது? என்றேன் நான்.
“இது மட்டுமல்ல. அவர் பல்கலைக்கழக மானிய குழுவால் வழங்கப்பட்டுள்ள சில ஆய்வுத் திட்டங்களையும் மேற்கொண்டுள்ளார். சில விருதுகளை பெற்றுள்ளதோடு அரசியல் அறிவியல் கல்வி தொடர்பான பல குழுக்களில் தலைவராகவும் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், பிஎச். டி., எம். பில்., பட்டத்துக்காக ஆய்வு செய்யும் மாணவர்கள் பலருக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் (Research Guide) இருந்துள்ளார். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் திறம்பட பணியாற்றியதோடு ஆணையத்திற்கான மாதிரி விதிகளை (Model Rules) சமர்ப்பித்தவரும் தற்போது மாவட்ட நுகர்வோர் நீதிபதியாக இருப்பவருமான டாக்டர் வீ. ராமராஜ் அவர்களுக்கு பிஎச். டி., எம். பில்., பட்ட வழிகாட்டி டாக்டர் பி சக்திவேல் ஆவார்” என்றார் வாக்காளர் சாமி.
“பாகிஸ்தானில் ஒரு பெண்ணின் தலையில் அவரது தந்தை கேமரா பொருத்தியுள்ளது சர்வதேச அளவில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள நடிகரின் கட்சியில் தங்களது கட்சி பிரமுகர்கள் இணைவார்களோ? என்ற அச்சம் கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர மற்ற எல்லா கட்சிகளிலும் இருப்பதாகவே தெரிகிறது” எனக் கூறி விட்டு கிளம்பினார் வாக்காளர் சாமி.