Advertisement

தேவை மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்

மலைப்பிரதேசங்களில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதங்களை தவிர்ப்பதற்காக கொடைக்கானல், ஊட்டி ஆகிய   மலை வாசஸ்தலங்களுக்கு செல்வதற்கு இ பாஸ் நடைமுறையை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்றே கருதலாம். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறைபாட்டால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் புவி வெப்பமடைதல் ஏற்பட்டுள்ளது.  எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அதிக வெப்பத்தை சந்தித்துக் கொண்டுள்ளது. சட்ட விரோதமாக ஆறுகளில்   மணலை அள்ளுதல், விவசாய பூமிகளில் மண்ணை எடுத்து விற்பனை செய்தல், பூமியில் உள்ள கனிம வளங்களை அனுமதிக்கப்பட்ட அளவை விட எடுத்தல், சட்டவிரோதமாக காடுகளை அழித்து இயற்கையை நாசம் செய்தல், அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டுதல் போன்ற பல செயல்களால் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இயற்கையை பாதுகாத்து சுற்றுச்சூழலை நல்ல முறையில் பராமரிக்க அரசு தகுந்த  நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சுற்றுச்சூழலுக்கு எதிரான எல்லா நிகழ்வுகளும் அரசின் கவனத்திற்கு செல்வதில்லை. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் புகார்களும் பல நேரங்களில் தக்க ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் வலுவிழந்து விடுகிறது. சில நேரங்களில் குற்றம் இழைப்பவர்களின் பணபலம் மற்றும் அதிகார பலத்தால் புகார்   மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் பணத்துக்காக சுற்றுச்சூழலை வேட்டையாடி வருவது வேதனையாக உள்ளது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சென்னையில் பசுமை தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் சென்னைக்குச் சென்று பசுமை தீர்ப்பாயத்தில் புகார் தாக்கல் செய்து வழக்கு நடத்துவது என்பது சிரமமான ஒன்றாகும். நீதி எப்போதுமே எளிதில் அணுகக் கூடியதாக இருந்தால்தான் மக்கள் அதனை பெறுவதில் சிரமம் இருக்காது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனை மனதில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும்   மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தை (district environmental protection commission) அமைக்க தகுந்த சட்டத்தை இயற்றி அமல்படுத்துவது தற்போதைய தேவையாக உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதால் நுகர்வோர் எளிதில் மாவட்ட தலைநகரங்களிலேயே நுகர்வோர் தகராறுகளுக்கு தீர்வு காண எளிதாக உள்ளது. ஆனால், இதே ஆணையம் மாநில அளவில் மட்டும் இருந்தால் மாநில ஆணையத்தில் புகார் செய்யக்கூடிய நுகர்வோர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமாகவே இருக்கும்.  இதனைப் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுச்சூழல் ஆணையங்கள் அமைக்கப்பட்டால் மட்டுமே அந்தந்த மாவட்டத்தில் நிகழும் சுற்றுச்சூழலுக்கு எதிரான பிரச்சனைகளை சரி செய்ய இயலும்.

சுற்றுச்சூழல் என்பது மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவை சட்டம் இயற்றக்கூடிய பொது பட்டியலில் (concurrent list) இருக்கக்கூடியது என்பதால் தேசிய அளவில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆணையங்களை அமைக்க மத்திய அரசு சட்டம் இயற்றலாம். இதனை மத்திய அரசு செய்ய தவறும் போது தமிழக அளவிலாவது மாவட்ட ஆணையங்களை அமைக்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றி இந்தியாவிற்கு முன்னோடியாக விளங்கலாம்.

மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையங்களை அமைப்பதற்கு செலவு ஏற்படும் என அரசு கருதினால் இத்தகைய அமைப்புகளை உருவாக்கி அதன் பொறுப்பை மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களுக்கு வழங்கலாம்.  இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள தவறினால் சுற்றுச்சூழல் ஆபத்தால் மனித சமூகமே பெரும் ஆபத்துக்குள்ளாக நேரிடும் என்பதை எவராலும் மறுக்க இயலாது. கருத்துக்களை விதைத்திருக்கிறோம்! காத்திருந்து பார்ப்போம்!!

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles