வணக்கம். இது பிபிசிசியின் இந்திய தேர்தல் சிறப்பு செய்தி அறிக்கை. எங்கள் சிறப்புச் செய்தியாளர்கள் திரட்டிய தகவல்கள், மக்களிடையே எடுக்கப்பட்ட பேட்டிகள் ஆகியவற்றின்தொகுப்பு இதுவாகும்.
140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்திய தேசத்தில் 97 கோடி மக்கள் வாக்காளர்களாக இருக்கிறார்கள். இந்திய பாராளுமன்றத்தின் 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் நேற்றைக்கு முன் தினம் தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. தேர்தல்கள் முடிவடைந்து 24 மணி நேரத்துக்குள்ளாக, அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய ஏற்பாட்டை செய்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தேர்தலில் அதிக இடங்களை வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற அரசியல் கட்சி இன்று காலை பதவியேற்று கொண்டுள்ளது. பதவியேற்ற உடனே நடைபெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு நாட்டின் புதிய பிரதம அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது.
தேர்தல் களத்தில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் மூன்று மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும். இந்திய வாக்காளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை பாதுகாக்கும் வகையில் வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் முதல் நாடாளுமன்ற கூட்ட தொடரில் நிறைவேற்றப்படும். இதனைத் தொடர்ந்து தேசிய அளவிலும் மாநில அளவிலும் வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும். அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறும் போது வாக்காளர்கள் இந்த ஆணையத்தில் புகார் செய்து நடவடிக்கைகளை அரசின் மீது மேற்கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறான தகவல்களை எந்த வகையில் வழங்கினாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்த ஆணையத்தில் வாக்காளர்கள் புகார் தாக்கல் செய்யலாம். அமைக்கப்பட உள்ள இந்திய வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படும்.
அரசின் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் மாதம் இரண்டு முறை பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குழு செய்தியாளர்களை சந்திக்கும். நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் நீதி வழங்கும் அமைப்புகள் அனைத்தும் நீதி துறையின் கீழ் மாற்றப்படும். அதாவது, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகையான தீர்ப்பாயங்கள் (tribunals) மற்றும் ஆணையங்கள் (commissions) உச்ச நீதிமன்றத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தனி பிரிவாக செயல்படும் வகையில் சட்டம் இயற்றப்படும்.
கல்வி மருத்துவம் ஆகிய இரண்டும் கட்டணமில்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும். அரசு மக்களுக்கு வழங்கும் சேவைகளில் பிரச்சனை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தேசம் முழுவதும் ஒரே சேவை உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும். மக்களுக்கு திட்டங்கள் எளிதில் சென்று அடையும் வகையில் அதிகார பரவலாக்க கொள்கை மேம்படுத்தப்பட்டு மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கப்படும்.
வேலை வாய்ப்பு திண்டாட்டத்தை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற திட்டம் அமல்படுத்தப்படும். வழக்கறிஞர்கள் மக்களுக்கு உறுதுணையாக செயல்படும் வகையில் அரசின் உதவி இன்றி பார் கவுன்சில்கள் திட்டத்தின் மூலம் அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். இதே திட்டத்தின் மூலம் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் குறைந்தபட்ச வருமான உத்திரவாத திட்டமும் செயல்படுத்தப்படும். இதன் மூலம் மக்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள சிரமங்கள் அகற்றப்படும்.
விலை நிர்ணயம், விலை கண்காணிப்பு, விலை கட்டுப்பாடு அம்சங்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதிய மனித உரிமைகள் சட்டமும் குற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கான சட்டமும் மூன்று மாதங்களுக்குள் இயற்றப்படும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த இன்னும் விரிவான தகவல்கள் நாளை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.
ஏதோ சத்தம் கேட்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வாக்காளர்சாமி கண்ணை விழித்துப் பார்த்தார். அப்போதுதான் தெரிந்தது தான் கனவில் செய்தி அறிக்கையை கேட்டுக் கொண்டிருந்தது.