நாட்டுல நல்லவனுக்குக் காலம் இல்லைங்கிறது இதுதானோ!
ஆற்றில் மிதந்து கொண்டிருந்த ஒரு மரக்கட்டையின் மேல் நான்கு தவளைகள். நீரோட்டத்தில் அகப்பட்டுக் கொண்ட அந்தக் கட்டை ஆற்றின் போக்கில் போகிறது. தவளைகளுக்கு அச்சமும் ஆச்சரியமும்.
முதல் தவளை, “இந்த மரக்கட்டை ஒரு அதிசயமான பொருள். இதைப்போல் ஆற்றில் பயணிக்கும் எந்தக் கட்டையையும் …. நான் இதுவரை பார்த்ததில்லை” என்றது.
இரண்டாவது தவளை “இது ஒரு அதிசயமே அல்ல…ஆறுதான் கடலை நோக்கிப் போகிறது. நாமும் உடன் அழைத்துச் செல்லப் படுகிறோம் ” என்றது.
மூன்றாவது தவளை “கட்டையும் நகர்ல … ஆறும் நகர்ல … நம்ம மனசு தான் நகருது” என தத்துவம் சொன்னது.
இப்ப மூணு தவளைகளுக்குள்ளும் சண்டை . ஆறு நகருதா ? கட்டை நகருதா? மனசு நகருதான்னு… அந்த மூணுக் குள்ள ஒரே கலவரம்.

இந்தக் கலவரத்தில் பங்கு கொள்ளாத ….நாலாவது தவளையை நோக்கி, மூன்று தவளைகளும் “நாங்கள் சொல்வதில் …. யார் சொல்வது சரி “எனக் கேட்டன.
நான்காவது தவளை அமைதியாக… “நீங்கள் எல்லோரும் சொல்வதும் சரி ..யார் சொல்வதிலும் தப்பில்லை. கட்டையும் நகர்கிறது. ஆறும் நகர்கிறது. மனசும் நகர்கின்றது… எல்லாமே சரிதான் ” என்றது !
இதைக் கேட்ட மற்ற தவளைகளுக்கு ….கோபமோ கோபம் ! தாங்கள் சொல்வது தான் உண்மை என…ஒவ்வொன்றும் நம்பி இருந்தவைகளுக்கு …. நான்காவது தவளை சொல்வது முழு மழுப்பலாகவும் … ஏமாற்றமாகவும் தெரிந்தது. ஆகவே அந்த மூன்று தவளைகளும் ஒன்று சேர்ந்து …சாத்வீகமாய் பேசிய நான்காவது தவளையினை …. ஆற்றினுள் பிடித்து தள்ளி விட்டன.
காலத்தின் கோலம்: பழிக்கவும், பரிகாசிக்கவும் உரிமை இல்லை
சில சமயங்களில் நாம் ஒன்று நினைக்க…வேறொன்றாய் முடியும்! பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் அமைந்தது என்பர்களே அதுபோல … இப்படிப் போனால் அப்படி ஆகிவிடுமோ என்று எண்ணி மாற்று வழியிலே சென்றால் எண்ணியதற்கு எதிராக நடக்கின்ற வினைகளும் இருக்கும்.
ஒரு பெண் நர்சாக வேலை பார்க்கிறார் என்ற காரணத்திற்காகவே அவளைத் திருமணம் செய்ய அந்த அழகான இளைஞன் மறுக்கிறான். வேறு பெண்ணை மணந்த அவன் பத்தாண்டுகள் கழித்து தனது மகன் நோய்வாய் பட்டதால்… சிகிச்சை வேண்டி தன்னால் நிராகரிக்கப் பட்ட அந்த நர்சிடமே போய் கலங்கி கண் துடைத்து நிற்கிறான்.
ஒரு இளைஞன் டிரைவராக வேலை பார்க்கிறான் என்பதற்காகவே அவனைத் திருமணம் செய்ய மறுத்த பெண். வேறு ஒருவனைத் திருமணம் செய்து பின்னர் அவளது கணவன் விபத்திலே சிக்கித் துடித்த போது டிரைவர் என்பதால் தனக்கு வேண்டாம் என மறுத்த அந்த இளைஞனாலேயே அந்த கணவன் காப்பாற்றப் பட்டான். டிரைவர் என்பதால் வெறுத்த அந்தப் பெண் இப்பொழுது அவனை கை தொழுது ,கண்ணீர் விட்டு நிற்கிறாள் !

பக்கத்து வீட்டுக்காரிக்கு அடுத்தடுத்து பெண் குழந்தைகளே பிறந்ததை எள்ளி நகையாடியவளின் ஒரே “மகன்” விபத்திலே இறந்து போனது. பையன் கருப்பாக இருக்கிறான் என்ற காரணத்தால் அவனை மணந்தால் பிறக்கப் போகும் குழந்தையும் கருப்பாகவே இருக்கும் என்பதால் வெறுத்த பெண்ணுக்கு திருமணம் முடிந்து பத்து ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கிய மே இல்லை !
முடக்கு வாதத்தால் ஒரு கால் ஊனமாகி போனவனை ஏளனமாகப் பார்த்து பரிகாசம் செய்த ஒரு வனுக்கு சர்க்கரை வியாதி அதிகரித்து கணுக் காலுக்கு கீழ் வெட்டி எடுக்கப்பட்டது.
மேலே சொன்ன சிறு சிறு சம்பவங்கள் இயல்பாகக் கூட நடந்திருக்கலாம். ஆனால், நெனச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணுங்கற மாதிரி ஆயிருச்சு. உலகத்துல எவரும் எவரையும் கொள்ளவும், தள்ளவும் உரிமை உண்டுதான். ஆனால், பழிக்கவும், பரிகாசிக்கவும் உரிமை இல்லை என்பதை உணர்ந்தால் போதும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள் பலவீனமானவர்களிடம் கூட ஆச்சரியமான திறமைகள் இருக்கலாம்.