அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி விட்டு “ஓரிரு வாரம் வரவில்லையே, சாமி”என்றதும் “உடல்நல குறைவால் வர இயலவில்லை” என தெரிவித்து விட்டு கருத்து மூட்டைகளை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர் சாமி.
“அமெரிக்க அதிபர் டிரம்ப் எனது நண்பர் என மோடி பலகாலம் சொல்லி வந்த நிலையில் ட்ரம்போ அவரது வித்தையை காட்ட ஆரம்பித்து விட்டார். இந்தியாவின் பொருளாதாரம் நலிவடைந்துவிட்டது. அவர்கள் பொருளாதாரத்தை பற்றி நமக்கு கவலை இல்லை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்துவிட்டார் டிரம்ப். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை இந்தியா இறக்குமதி செய்வதை நிறுத்தாததால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கிறார் அமெரிக்க அதிபர். இவர் ஒன்னும் நமது நாட்டின் அதிபர் அல்லவே. இவர் கூறுவதை நாம் செய்து கொண்டு இருக்க. உலகில் அதிகமாக கடன் பெற்ற நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்த போதும் உலக போலீஸ்காரனாக தன்னை காட்டிக் கொள்வதில் முன்பை விட ட்ரம்புக்கு அலாதி பிரியம் போல. வரி விதி போட முடிந்து போனதா? என்றால் பாகிஸ்தானுடன் வணிக ஒப்பந்தம் ஒன்றையும் அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளது இந்தியாவுக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருக்கிறது” என்றார் வாக்காளர் சாமி.
“ஒரு பக்கம் சீனா பாகிஸ்தானை தாலாட்டுகிறது என்றால் இன்னொரு பக்கம் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு தூபம் போடுகிறது. அமெரிக்கா கூறுவதை இந்தியா செய்ய வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் கருதுகிறார் போல” என்றேன் நான்.
“மத்திய பிரதேசத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருப்பதாக சட்டமன்றத்தில் பாஜக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மஸ்தலாவுக்கு சென்ற பல பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய பிரதேசத்தில் வெளியான செய்தி இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறது. தர்மஸ்தலாவில் புதைக்கப்பட்ட பெண்களையும் காணாமல் போனவர் பட்டியலில்தானே வைத்திருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார் வாக்காளர் சாமி. “கடந்த 15 ஆண்டுகளாக டிஜிட்டல் புரட்சி இந்தியாவில் நிகழ்ந்து விட்டதாக கூறும் நிலையில் மக்களின் நகர்வுகளை கணக்கில் வைத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளோமோ சாமி” என்றேன் நான்.
“அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்த வேல்ராஜ் அவர்கள் ஓய்வு பெறும் நாளில் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் இருந்து வருவது பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. படிப்பை முடித்த மாணவர்களுக்கு உரிய காலத்தில் பட்டமளிப்பு விழா நடத்த இயலவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் நல்ல தீர்வு கிட்டும் என்ற நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தடை மூலம் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் கேள்விக் குறியாகி உள்ளது. இது எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை” என்றார் வாக்காளர் சாமி. “பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம் செய்வதில் தவறு இல்லையே சாமி இதற்கு ஏன் இத்தனை முட்டுக்கட்டை” என்றேன் நான்.
“விஜயும் சீமானும் வரும் தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம் என தொடர்ந்து கூறி வருகிறார்கள். சீமானுக்கு தனித்து நிற்பதில் ஏதாவது லாபம் இருக்கலாம் என்றாலும் முதன்முதலாக தேர்தலில் களம் இறங்கும் விஜயும் தனித்தே நிற்பது என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டால் தொடர்ந்து அரசியல் செய்ய முடியுமா? என்ற கேள்வியை அவரது ஆதரவாளர்கள் அவரிடம் முன் வைத்துள்ளதாக தெரிகிறது. இருந்த போதிலும் தனிப்பாதையில் தனக்கு பலனளிக்கும் என்று விஜய் எண்ணுவார் போல. என்ன லாபம் என்பது கட்சியின் தலைமைக்கு தானே தெரியும்”
“அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் முகவரியாக அன்புமணியின் அலுவலகமான பனையூர் முகவரி தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள் அன்புமணி அதிமுக பாஜக கூட்டணி நோக்கி பயணிப்பார் என்பதாலேயே தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதாக எதிர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்”
“தேமுதிகவின் பிரேமலதா முதலமைச்சரை நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரணை செய்ததும் காலையில் நடை பயிற்சியின் போது முதலமைச்சரை பார்த்த ஓபிஎஸ் மாலையில் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து உடல் நலன் குறித்து கேட்டு அறிந்ததும் அரசியல் அல்லாத சந்திப்பு என்று முடிவுக்கு வர இயலாது இவர்கள் இருவரும் திமுக அணிக்கு வருவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன. தொடர்ந்து விஜய்க்கும் அதிமுகவுக்கும் திருமாவளவன் அறிவுரை வழங்கிக்கொண்டிருப்பது வித்தியாசமாக இருக்கிறது என்றும் மதிமுகவின் நகர்வு எப்படி இருக்கும் என கணிக்க இயலவில்லை என்றும் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்” என கூறிவிட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: அரசியல் இல்லாமல் அணுவும் அசையாது என்ற அரசியல் கோட்பாடு உண்மையானது.